

ஆட்சியாளரின் முரண்பட்ட செயல்களுக்கு ஔரங்கசீப் காலத்துக்குப் போக வேண்டாம். நம் காலத்திலேயே உதாரணத்தைப் பார்ப்போம். அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில், பூட்டியிருந்த பூட்டுகளைத் திறக்க பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். இந்து வலதுசாரிகளை அடக்க அதைச் செய்தார். ஷா பானு வழக்கில் ஜீவனாம்சம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், அதை அரசே தரும் என்று சட்டமியற்றி, இஸ்லாமியர்கள் கோபமடையாமல் பார்த்துக்கொண்டார். இப்படித்தான் ஆட்சியாளர்கள் முரண்பட்ட வெவ்வேறு குழுக்களை நேரத்துக்குத் தகுந்தபடி அரவணைத்துச் சமாதானப்படுத்துகின்றனர்.
முகலாய சாம்ராஜ்யத்தின் ஆறாவது சக்ரவர்த்தியாகப் பதவி வகித்த ஔரங்கசீப், இறப்பதற்கு முன் தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில், ‘அந்நியனாக இங்கு வந்தேன்.. அந்நியனாகவே செல்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். “மதிப்பிட முடியாத என்னுடைய வாழ்க்கை வீணாகப்போய்விட்டது” என்றும் அவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் புலம்பியிருக்கிறார்.
இந்திய வரலாற்றில் ஔரங்கசீப் அளவுக்கு விரிந்து பரந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் யாரும் இல்லை. அவரிடம்தான் கோஹினூர் வைரம் இருந்தது. இத்தனை இருந்தும் அமைதியாகச் சாவதையும், எளிய முறையில் - சாதாரண சமாதியில் நல்லடக்கம் செய்யப்படுவதையுமே விரும்பினார். ஆர்பாட்டம் இல்லாமல் புதைக்கப்பட்ட கல்லறையுடன் தன்னைப் பற்றிய நினைவுகள் மக்களிடமிருந்து மறைந்துவிட வேண்டும் என்று ஔரங்கசீப் விரும்பியிருந்தாலும், உலகம் அப்படி விட்டுவிடத் தயாராக இல்லை. 21-வது நூற்றாண்டிலும்கூட இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு நாடுகளிலும் அவர் துடிப்பான ஆளுமையாக நினைவுகூரப்படுகிறார்.
புதிய ஆய்வுகளும் புத்தகங்களும்
சமீப காலமாக சமூக அரசியல் மேடைகளிலும் கல்வியாளர்களின் விவாதங்களிலும் அவரைப் பற்றித் தீவிரமாகப் பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான இந்து, ஜைனக் கோயில்களைத் தனது ஆட்சிக் காலத்தில் இடித்து நாசமாக்கியவர் ஔரங்கசீப் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் ஒரு பக்கம் பேசுகின்றனர். இன்னொரு பக்கம், கல்வியாளர்களும் எழுத்தாளர்களும் சகிப்புத்தன்மை - மதக் கண்ணோட்டம் என்ற குறுகிய உணர்ச்சிகளின்றி அவருடைய ஆட்சிச் சிறப்பைத் தொகுத்துப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தலைப்பட்டுள்ளனர்.
ஔரங்கசீப் பற்றி புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஆட்ரே டிரஷ்கி, ‘ஔரங்கசீப்: தி மேன் அண்ட் தி மித்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘பிரின்சஸ் அண்ட் பெயின்டர்ஸ் இன் முகல் டெல்லி, 1707-1857’ என்ற புத்தகத்தை எழுதிய வில்லியம் டேல்ரிம்பிள் ஔரங்கசீப் பற்றி சொல்லப்படாத இன்னொரு பக்கத்தை 2012-ல் வெளிக்கொண்டு வந்தார். யுத்திகா சர்மா அவருடன் அந்த நூலை எழுதியிருக்கிறார். ஔரங்கசீப் தேவைகளுக்கேற்ப இந்து நிறுவனங்களுக்கும் புரவலராகச் செயல்பட்டிருக்கிறார் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். “ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் வகுப்புக் கலவரங்கள் நடந்ததில்லை. அவருடைய ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்படவில்லை. அவருடைய காலத்து ஓவியங்கள், கலைகள் பற்றியதுதான் அந்தப் புத்தகம் என்றாலும், முன்னர் சித்தரித்ததைப் போல அவர் கொடூரமானவர் இல்லை” என்கிறார்.
யாருக்கும் தெரியாத தகவல்
ஔரங்கசீப்புக்குக் கலைகள் என்றாலே பிடிக்காது, கலைகளை வெறுத்தவர் என்றெல்லாம் கூறப்படுவதற்கு மாறாக, ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் வரையப்பட்ட சில ஓவியங்களைப் பார்க்கும்போது, அவர் தனது தர்பாரில் இருந்தவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது தெரியவருகிறது. ஔரங்கசீப் சிறப்பாக வீணை வாசிப்பார் என்று எவருக்குமே தெரியாத தகவலும் டேல்ரிம்பிள் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஔரங்கசீப்பின் அரசவையில் மான்சாப் (நிர்வாகப் பதவி) ஆக இருந்த ஃபக்கீருல்லா இந்திய இசையைப் பற்றி ‘ராக் தர்பண்’ என்ற நூலை எழுதியிருக்கிறார் எனும் தகவலும் கிடைத்திருக்கிறது.
ஔரங்கசீப்பின் அரசியல் நிர்வாகச் சிறப்பையும் மனிதாபிமானம் மிக்க அவருடைய மறுபக்கத்தையும் ‘பஞ்சாப்: எ ஹிஸ்ட்ரி ஃப்ரம் ஔரங்கசீப் டு மவுன்ட்பேட்டன் (2013)’ புத்தகத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கிறார் ராஜ்மோகன் காந்தி. “ஔரங்கசீப்பின் நீண்ட ஆட்சிக் காலத்தில் ராஜ்யத்தின் பரப்பளவும் அதிகரித்துவந்தது. குட்டி திபெத், காஷ்மீருக்கு வடக்கே உள்ள பகுதி, டாக்காவுக்கும் கிழக்கே உள்ள பகுதி, சிட்டகாங், கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகியவை அவருடைய சாம்ராஜ்யத்தில் சேர்க்கப்பட்டன” என்கிறார் ராஜ்மோகன் காந்தி. ‘கல்ச்சர் ஆஃப் என்கவுன்டர்ஸ்: சான்ஸ்கிரிட் அட் தி முகல் கோர்ட்’ புத்தகத்தை எழுதிய ஆட்ரே ட்ரஷ்கி, “ஔரங்கசீப் காலத்தில் இந்தி மொழி மலர்ச்சி அடைந்ததால் சம்ஸ்கிருதப் பயன்பாடு குறைந்தது” என்கிறார். ட்ரஷ்கி எழுதிய ‘ஔரங்கசீப்: தி மேன் அண்ட் த மித்’ புத்தகம் கல்விக்கூடங்களிலும் இலக்கிய வட்டங்களிலும் விரிவான விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
ஔரங்கசீப், தாரா ஷிகோவா: ஒரு ஒப்பீடு
பாஜக ஆட்சிக்கு வந்ததும், டெல்லியில் ஔரங்கசீப் பெயரில் இருந்த சாலைக்கு அந்தப் பெயர் நீக்கப்பட்டு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டது. அதேபோல, 1657-ல் ஷாஜஹானுக்குப் பிறகு, முகலாயச் சக்ரவர்த்தி ஆவதற்கு யாரைப் போரில் வெற்றி கண்டாரோ அந்த தாரா ஷிகோவா பெயர் இன்னொரு சாலைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
1980-களிலும் 1990-களிலும் முஸ்லிம்களை ‘பாபரின் வாரிசுகள்’ என்று கேலி பேசினார்கள். இப்போது ஒரு சிவசேனைத் தலைவர் முஸ்லிம்கள் ‘ஔரங்கசீப்பின் வாரிசுகள்’ என்று அழைத் திருக்கிறார். “இன்றைய முஸ்லிம்களுக்கு ஔரங்கசீப் சுமையாகவே தொடர்கிறார். வரலாறு முக்கியம். ஏனென்றால், அது நிகழ்காலத்தை வடிவமைக்கிறது என்பார்கள். ஆனால், யதார்த்தத்தில் அது தலைகீழாகவே நடக்கிறது. இன்றைய சமூக மோதல்களுக்கு ஏற்ப பழைய வரலாறும் பிம்பமும் திரிக்கப்படுகிறது. பாபரைவிட ஔரங்கசீப் மோசமானவராகச் சித்தரிக்கப்படுகிறார். யாரிடையே நாம் பேசப்போகிறோமோ அதற்கேற்ப வரலாற்று நாயகர்களும் புகழப்படுகின்றனர் அல்லது வசைக்கு உள்ளாகின்றனர்” என்கிறார் வரலாற்றாசிரியர் ஹர்வன்ஸ் முக்கியா.
ஔரங்கசீப், தாரா ஷிகோவா இருவரையுமே வரலாற்றாசிரியர்கள் தங்களுடைய சார்புக்கு ஏற்பத் திரித்து எழுதியிருக்கிறார்கள். ஔரங்கசீப் மதப்பற்று மிக்க குறுகிய எண்ணம் கொண்டவர், ஷிகோவோ அறிவுஜீவி, வேதாந்தி, சூஃபி என்பர். ஷிகோவா அரியணை ஏறியிருந்தால், இந்தியா அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய சமரச சன்மார்க்கமாகத் திகழ்ந்திருக்கும் என்றும் கூறுவார்கள். “ஆனால், உண்மை என்னவோ வேறு. கல்வி வட்டங்களைத் தவிர, வேறு இடங்களில் இதை எளிதாகக் கூறிவிட முடியாது. இந்து - முஸ்லிம், இந்தியர் - பாகிஸ்தானியர் என்று வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையிலிருந்து சற்றே விலகிவிட்டனர். ஔரங்கசீப் பொல்லாதவர், தாரா ஷிகோவா நல்லவர் என்று ஷிப்லி நோமானி, இஷ்டியாக் உசைன் குரைய்ஷி, ஜாடுநாத் சர்க்கார், ஈஸ்வரி பிரசாத் உள்ளிட்டோர் இப்படித் தவறான கண்ணோட்டம் தோன்ற எழுதிவிட்டனர்” என்கிறார் பேராசிரியர் சையது அலி நதீம் ரெசாவி.
ரெசாவி காட்டும் ஆதாரங்கள்
ரெசாவி சொல்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கிடைத்துள்ள ஆதாரங்கள் கையை வேறு திசையில் காட்டுகின்றன. ராஜபுத்திரர்களின் எதிரியாகச் சித்தரிக்கப் படும் ஔரங்கசீப் பதவிக்கு வருவதற்கே இந்துக்களையும் ராஜபுத்திரர்களையும் நாடி, அவர்களுடைய ஆதரவோடு தான் சண்டையில் வெற்றிபெற்று பதவிக்கு வருகிறார். தன்னுடைய தந்தை ஔரங்கசீப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து ராதோடுகள் (ராஜபுத்திரர்கள்) உடன் சேர்ந்துகொண்ட அக்பர் எழுதிய கடிதம் இதைத் தெரிவிக்கிறது.
அடுத்து யார் பட்டத்துக்கு வருவது என்ற போட்டி தொடங்கியபோது, தக்காணத்திலிருந்து ஆக்ரா நோக்கிச் செல்கிறார் ஔரங்கசீப். பல மன்னர்களுக்கும் குறுநில மன்னர்களுக்கும் ஆதரவு கேட்டுக் கடிதம் அனுப்புகிறார். பொதுத் தேர்தல் சமயத்தில் இப்போது அரசியல் கட்சித் தலைவர்கள் மாற்றுக் கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் எழுதுவதைப் போலத்தான் இதுவும் நடந்திருக்கிறது. ஒரு கடிதம் மேவார் பகுதியை ஆண்ட ராணா ராஜ் சிங்குக்கும் அனுப்பப்படுகிறது. கவிராஜ் சியாமள்தாஸ் என்பவர் எழுதிய வீர் வினோத் என்ற நூலில் இதற்கான குறிப்பு கிடைத்துள்ளது. அரச பதவி என்பது கடவுளின் நம்பிக்கை என்று இக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஔரங்கசீப்.
ராஜபுத்திரர்களின் நண்பன்
மக்கள் என்பவர்கள் கடவுளின் படைப்புகள், மன்னன் என்பவன் கடவுளின் நிழல் போன்றவன் என்று கூறும் ஔரங்கசீப், “மன்னர்கள் கடவுளின் தர்பாரைத் தாங்கி நிற்கும் தூண் போன்றவர்கள். அவர்கள் பாரபட்சமாக நடந்துகொண்டால் கடவுளின் செங்கோலே தாழ்ந்துவிடும்” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். ‘இஸ்லாமா அல்லது சாவா தீர்மானித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி ஆயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர் என்று ஔரங்கசீப் குறித்துப் பேசப்படுவதையும் இந்தக் கடிதத்தையும் ஒப்பிடுங்கள்.
ஷிகோவா யுத்த நிபுணராக மக்களால் பேசப்பட்டவர்; ஆனால், தளபதியாக இருந்ததில்லை. நிர்வாகியாகவோ, படைத் தலைவராகவோ பணியாற்றிய அனுபவமும் கிடையாது. ராஜா ஜெய் சிங் என்ற பிரபுவைத் தக்காணத்துக் குரங்கு என்று அழைத்து, அவருடைய பகையைச் சம்பாதித்துக்கொண்டார். ராஜா ஜெய் சிங், ஜஸ்வந்த் சிங், ரகு ராம், ராமராஜ் சிங், ராவ் தளபத் புந்தேலா போன்றோர் ஔரங்கசீப்புக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியுள்ளனர். சம்பல் நதியைக் கடந்து சாமுகட் சண்டையில் ஔரங்கசீப் வெற்றி பெறக் காரணமாக இருந்த படகைக் கொடுத்து உதவியவர் தளபத் புந்தேலா. “வரலாற்றாசிரியர்கள் வர்ணித்தபடி அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என்றால், இத்தனை ராஜபுத்திரர்கள் அவருக்கு உதவியிருக்க மாட்டார்கள்” என்கிறார் ரெசாவி.
ஔரங்கசீப்பின் வழித்தோன்றல்கள்?
ஔரங்கசீப்பின் நிர்வாகத்தில் 31% ராஜபுத்திரர்கள். அக்பர் ஆட்சியில்கூட அவர்கள் 22%தான் இருந்தனர். இருந்தும் இந்துத்துவ ஆதரவாளர்கள் முஸ்லிம் களை ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று வசைபாடு கின்றனர். அவருடைய செயலுக்காக இப்போதைய முஸ்லிம்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கின்றனர். காலனி ஆட்சிக் காலத்தில் முகம்மது கஜினியால்தான் இந்தியாவுக்குப் பின்னடைவு என்றார்கள். 1980 முதல், பழி ஔரங்கசீப் மீது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, மேற்கொண்டு முஸ்லிம்களைக் குறைகூற ஏதுமில்லை என்றதும் ஔரங்கசீப் பற்றிப் பேசத் தொடங்கினர்.
ஔரங்கசீப் மதத்தையும் அரசியலையும் கலந்தது உண்மையே. சில சமூகத்தினரைப் பாரபட்சமாகவும் அவர் நடத்தினார், ஜிஸியா வரியை விதித்தார். என்றாலும், மதம் மாற்றும் போதகராக அவர் செயல்பட வில்லை. ஆட்சிக்கு வந்த 21 ஆண்டுகள் கழித்துத்தான், அதுவும் பல்வேறு போர்களுக்குப் பிறகு கஜானா காலியானதால்தான் அப்படி ஒரு வரி விதித்தார். சிவாஜி தன்னுடைய நாட்டை விரிவுபடுத்துவதற்காகப் போரிட்டதைப் போலத்தான் ஔரங்கசீப்பும் போரிட்டார். அப்போது நாடு என்ற அமைப்பு உருவாகாததால் இருவருமே நாட்டுக்காகப் போரிடவில்லை.
தொடரும் விவாதங்கள்
ஔரங்கசீப் என்றால் மத வெறியர், இந்துக்களை வெறுத்தவர் என்ற பிம்பமே மக்கள் மனதில் பதியும் வண்ணம் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. முகலாய மன்னர்களின் வரிசையில் ஔரங்கசீப்பை எங்கே வைப்பது? ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த வரலாற்றாசிரியர் பீம்சேன்கூட அவரை முஸ்லிம் மதப்பற்று கொண்ட ஆட்சியாளராகப் பார்க்கவில்லை. அப்படி யானால், அந்த பிம்பம் எப்போது உருவானது? காலனி ஆட்சிக்கால வரலாற்றாசிரியர்களின் கைவண்ணம் அது!
ஆட்சியாளரின் முரண்பட்ட செயல்களுக்கு ஔரங்கசீப் காலத்துக்குப் போக வேண்டாம். நம் காலத்திலேயே உதாரணத்தைப் பார்ப்போம். அயோத்தியில் ராம ஜன்மபூமி என்று அழைக்கப்படும் இடத்தில், பூட்டியிருந்த பூட்டுகளைத் திறக்க பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். இந்து வலதுசாரிகளை அடக்க அதைச் செய்தார். ஷா பானு வழக்கில் ஜீவனாம்சம் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதும், அதை அரசே தரும் என்று சட்டமியற்றி, இஸ்லாமியர்கள் கோபமடையாமல் பார்த்துக்கொண்டார். இப்படித்தான் ஆட்சியாளர்கள் முரண்பட்ட வெவ்வேறு குழுக்களை நேரத்துக்குத் தகுந்தபடி அரவணைத்துச் சமாதானப்படுத்துகின்றனர்.
ஆட்சியாளரை அவருடைய மதம் சார்ந்த கண்ணோட் டத்தில் மட்டும் ஆராய்வது வரலாற்றைத் தவறாக அனுமானிக்கவே இடம் கொடுக்கும். அக்பருக்குப் பிறகு ஆண்ட ஔரங்கசீப் மட்டுமே ராஜா ரகு ராஜ் என்ற இந்துவைத் தன்னுடைய திவானாக வைத்துக்கொண்டார். மான்சாப் என்ற உயர் பதவிகள் ராஜபுத்திரர்களுக்கே வழங்கப்பட்டன. முக்கியமான மாகாணங்களின் ஆளுநர் களாக இந்துக்களையே நியமித்தார். “பிருந்தாவன் ஆவணங்களை ஆராய்ந்தால், அக்பரைவிட அதிக கோயில் மானியங்களை அளித்தவர் ஔரங்கசீப் என்று இர்ஃபான் ஹபீப், தாராபாத முகர்ஜி கண்டறிந்ததைப் போல நாமும் காண முடியும்” என்கிறார் ரெசாவி. மேலும் மேலும் புதிய செய்திகள் வருகின்றன. விவாதங்கள் தொடர்கின்றன.
சுருக்கமாகத் தமிழில்: சாரி, பிரன்ட் லைன்