Last Updated : 20 Nov, 2013 12:00 AM

Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

குப்பைத் தொட்டியைத் தேடி...

நான் இருப்பது வால்பாறையில். தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த குடியிருப்புப் பகுதியில் வசிக்கிறேன். அந்தத் தோட்டங்களைச் சுற்றிலும் வனப்பகுதி இருப்பதால் வீட்டுக்கு அருகிலும் அவ்வப்போது காட்டு விலங்குகளைக் காண முடியும். வீடென்றிருந்தால் குப்பை சேரத்தான் செய்யும். காய்கறிக் கழிவு, மட்கும் குப்பையைத் தவிர, ஏனைய பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலுள்ள குப்பை டப்பாவில் சேகரித்து, மாதம் ஒருமுறை வால்பாறையில் உள்ள, பெரிய குப்பை கொட்டுமிடத்தில் கொண்டுசேர்ப்பது வழக்கம். வீட்டின் அருகில் வீசியெறிந்தால் காட்டுயிர்களுக்குப் பாதிப்பு ஏற்படும், வீட்டைச் சுற்றி பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி அந்த இயற்கையான சூழலைப் பாழ்படுத்தும். அவற்றை ஒன்றுசேர்த்து எரிப்பதென்பது ஆரோக்கியமானது அல்ல என்பதாலேயே இந்தக் கரிசனம்.

பயணம் ஆரம்பம்

சமீபத்தில் பொள்ளாச்சி போகும் வேலை இருந்ததால் வழக்கம்போல குப்பையை ஒரு சாக்குப்பையில் கட்டி, போகும் வழியில் எங்காவது குப்பைத்தொட்டி தென்பட்டால் அதில் சேர்த்துவிடலாம் என எண்ணி, காரில் அந்த மூட்டையை எடுத்துச் சென்றேன். அந்தப் பையைப் பார்த்ததும் காரோட்டி என்னவென்று கேட்டார். குப்பை என்றவுடன் ஒரு மாதிரியாகப் பார்த்தார். ஏதோ ஞாபகத்தில் அட்டகட்டியில், அதைக் குப்பைத்தொட்டியில் போட மறந்துவிட்டேன். ஆழியாரில் குப்பைத்தொட்டியைப் பார்த்தால் நிறுத்தும்படி சொன்னேன். ஆழியார் வந்தது. குப்பை மேடும் இருந்தது. ஆனால், குப்பைத்தொட்டியைக் காணவில்லை. சரி, அடுத்த ஊரில் இருக்கும் என நினைத்து ஆவலுடன் வழியெல்லாம் குப்பைத்தொட்டியைத் தேடிய எனக்கும் காரோட்டிக்கும் மிஞ்சியது ஏமாற்றமே.

நிழல் பார்த்துக் குப்பை கொட்டுவோம்

ஆனால், வழியெங்கும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. ஆழியாரிலிருந்து நாலுமுக்கு சுங்கம் வரும் வரை வழியில் தென்னந்தோப்புகள் இருக்கும். ஆழியாருக்கும் குரங்கு அருவிக்கும் வால்பாறைக்கும் வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் அந்தத் தென்னந்தோப்பு நிழலைக் கண்டதும், அந்த இடத்தின் மேல் காதல் கொண்டு, தாங்கள் வரும் கார், வேன் முதலிய வாகனங்களை நிறுத்துவார்கள். சாலையோரமாக ஜமக்காளம், பாய் போட்டு அமர்ந்து, கொண்டுவந்த கட்டுச்சோற்றை பிளாஸ்டிக் தட்டில் வைத்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, பிளாஸ்டிக் கப்பில் தண்ணீரையும் அருந்திவிட்டு (சிலர் வேறு வகை தண்ணீரையையும் அருந்திவிட்டு), எல்லாம் முடிந்தபின், ஜமக்காளத்தைத் தூசு இல்லாமல் உதறி மடித்துக் காரினுள் பத்திரமாக வைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவார்கள். அவர்கள் வந்துபோனதற்கு அடையாளமாக அந்த பிளாஸ்டிக் குப்பைகளை விட்டுச் சென்றிருப்பார்கள். இவர்கள் போட்டுச்சென்ற குப்பையோடு குப்பையாக எனது குப்பையையும் போடச் சொன்னார் காரோட்டி. சுமார் 10 நிமிடங்கள் சுத்தம், சுகாதாரம் பற்றி அவருக்கு நான் உரையாற்றிய பிறகு, தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டுப் பேசாமல் காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.

குப்பை உங்களை வரவேற்கிறது

ஆழியாரில் சாலையோரத்தில் எந்தக் குப்பைத்தொட்டியும் இல்லாததால் அடுத்து வந்த புளியங்கண்டியில் இருக்கும் என நினைத்து, வழியெங்கும் குப்பைத்தொட்டியைத் தேடி அலைந்தன என் கண்கள். அங்கும் இல்லை. பின் அங்கலக்குறிச்சி (வரவேற்கும் பலகை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் பிளாஸ்டிக் குப்பை), வேடசந்தூர், நாலுமுக்கு சுங்கம், சண்முகாபுரம், பில்சின்னாம்பாளையம் கடந்து, கடைசியாகச் சமத்தூர் வந்தடைந்தபோது ஒரு குப்பைத்தொட்டி சாலையோரமாக (சுற்றிலும் குப்பைகள் சூழ) வீற்றிருந்தது. குப்பைத்தொட்டியின் உள்ளே இடமில்லாமல் இல்லை. குப்பைத்தொட்டியைப் பார்த்து மட்டிலா மகிழ்ச்சி அடைந்தது என் வாழ்வில் அதுதான் முதல்முறை.

கிடப்பில் போடப்பட்ட ‘குப்பை’

இந்தச் சாலையில் போகும் பயணிகளில், குப்பைத்தொட்டியில்தான் குப்பையைப் போட வேண்டும் எனும் வறட்டுப் பிடிவாதமுடையவர்கள் ஆழியாரிலிருந்து சுமார் 15 கி.மீ. கடந்து சமத்தூர் வர வேண்டும். ஆங்காங்கே குப்பைத்தொட்டியை வைத்துப் பராமரித்தால் நிச்சயமாக மக்களிடையே கண்ட இடத்தில் குப்பையை வீசி எறியும் பழக்கம் நிச்சயமாகக் குறையும் என்பது என் நம்பிக்கை. இந்த எண்ணத்தில் பொள்ளாச்சியில் உள்ள உதவி ஆட்சியருக்கும், கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கும் ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்துடன் அங்கலக்குறிச்சியில் பார்த்த குப்பையையும் படம் எடுத்து அனுப்பியிருந்தேன். கடிதம் அனுப்பி 23 நாட்கள் கழித்து உதவி ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் (ஆனைமலை), செயல் அலுவலருக்கும் (கோட்டூர் பேருராட்சி) தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பி, அதன் நகலை எனக்கு அனுப்பியிருந்தார். இது நடந்து சுமார் சுமார் 5 மாதங்களுக்கும் மேலாகிறது. அவ்வழியே போய்வரும்போது அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே பயணிக்கிறேன். இதுவரை எந்த மாற்றமும் இல்லை. தகுந்த மாற்றத்தை உடனடியாக எதிர்பார்க்கவும் முடியாது. பொதுவாக, அரசு அலுவலகங்கள் மெதுவாகத்தான் செயல்படும் என்பது தெரிந்ததே. எனது கவலை, கோபம் எல்லாம் பொதுமக்களின்மீதுதான்.

எந்தச் சீர்கேட்டின் அடையாளம்?

சமத்தூரில் பார்த்த குப்பைத்தொட்டியைச் சுற்றிலும் குப்பை கொட்டப்பட்டுச் சிதறிக்கிடந்தது. அங்கலக்குறிச்சி என்ற பலகை இருக்கும் இடத்தைச் சுற்றிலும் (அதாவது, ஊரின் நுழைவாயிலிலேயே) குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. இப்படி, சாலையோரமெங்கும் பெருமளவில் குவிந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எப்படி அப்புறப்படுத்துவது? ஊரெங்கிலும் இப்படி பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்திருப்பது வெறும் சுற்றுச்சூழல் சீரழிவை மட்டுமா காட்டுகிறது? தனிமனித ஒழுக்கம், கலாச்சாரம், சமுதாயம் போன்றவற்றிலும் ஏற்பட்டிருக்கும் சீர்கேட்டையுமல்லவா சுட்டிக்காட்டுகிறது. நமது பொறுப்பின்மையையும் சுற்றுப்புறச் சுகாதாரத்தில் நாம் கொண்டுள்ள அக்கறையின்மையையும் அல்லவா வெளிப்படுத்துகிறது.

குப்பையை குப்பைத்தொட்டியில்தான் போட வேண்டும் என்கிற அறிவை பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எப்படிப் புகட்டுவது? கண்ட இடத்தில் குப்பைகளைத் தூக்கியெறியாமல் இருக்க என்ன செய்யலாம்? 10 மீட்டர் தூரத்துக்கு ஒன்றாக சாலையோரமெங்கும் குப்பைத்தொட்டியை வைக்கலாமா? இது கொஞ்சம் அதிகப்படியாக இருந்தால், ஒரு கிலோமீட்டருக்கு ஒன்று வைக்கலாமா? அதுவும் முடியாவிட்டால், ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு குப்பைத்தொட்டியை வைத்து, வழியில் நடுநடுவே ‘அடுத்த குப்பைத்தொட்டி இன்னும் 2 கிலோமீட்டர் தூரத்தில்’என்று பலகை வைக்கலாமா?

உலாலால லேலோ…

அரசியல்வாதிகளிடமும், நடிகர்களிடமும், அவர்களுடைய பிறந்த நாள்களின்போது அவர்களுடைய தொண்டர்களும் ரசிகர்களும் மரம், செடி, கொடி, புல், பூண்டு நடுவதோடு, ‘‘குப்பையைக் குப்பைத்தொட்டியில் போடவும்” என்று அறிக்கைவிட்டு, அதன்படி நடந்து காட்டச் சொல்லலாமா? நம்மைக் கவர்ந்திழுக்கும் நடிக, நடிகையரின் கவர்ச்சிகரமான படங்களை வைத்து ‘குப்பை கொட்ட இங்கே வருக’என்று விளம்பரப் பலகை வைக்கலாமா? ஒழுங்காகக் குப்பை கொட்டுபவர்களுக்கு இலவசப் பொருட்கள் கொடுத்து ஊக்குவிக்கலாமா? ஐ.பி.எல். விளையாடும் கிரிக்கெட் வீரர்களை, “உலாலால லேலோ... குப்பையக் குப்பைத் தொட்டியிலே கொட்டுங்கோ..” என்று பாட்டுப் பாட வைக்கலாமா?

இப்படிப் பல வழிகளில், நூதன முறையில் அறிவு புகட்டியும், வேண்டுகோள் விடுத்தும்கூட சொல்வதைக் கேட்காதவர்களை என்ன செய்யலாம்? என்ன செய்தால் இந்தப் பிரச்சினை ஒழியும்? ஏதாவது ஒரு நல்ல யோசனை சொல்லுங்கள்.

ப. ஜெகநாதன், பறவையியலாளர், தொடர்புக்கு: jegan@ncf-india.org

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x