Last Updated : 15 Nov, 2013 12:00 AM

 

Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

வீங்கித் தொலைக்குதடா...!

பொம்மைகள் விற்கும் கடை வாசலில் பத்து ராணுவ வீரர்கள். டிவி, ஏர் கண்டிஷனர், மிக்ஸி, வாஷின் மெஷின் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்கும் கடையைச் சுற்றி ஒரு நூறு போலீசார். ரொம்ப முக்கியம் காய்கறி மார்க்கெட். நடைபாதைக் கடைதானே என்று சும்மா விடாதீர்கள். ஒவ்வொரு கடை வாசலுக்கும் போடு ஒரு ஆர்மி மேன். என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், அயோக்கிய ராஸ்கோல்கள்? கிலோ தக்காளி இருபது பொலிவார்தான். யார் நிர்ணயித்தது 45 பொலிவார் என்று? இருபது பொலிவார் மதிப்புள்ள வெங்காயத்துக்கு ஐம்பத்தியாறு பொலிவார் விலை வைத்தவர்கள் தேசத் துரோகிகள். கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளுங்கள். எதோ விலையேற்றம் என்றால் அஞ்சு பத்து இருந்தால் கண்டும் காணாமல் இருந்துவிடலாம். ஒரேயடியாக நூறு சதம், நூற்றைம்பது சதம் என்று ஏறிக் குதித்தால் எங்கே போய் முட்டிக்கொள்வது?

யாருக்கும் புரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் தெரியவில்லை. திடீர்ப் பண வீக்கத்தில் (54 சதவீதம்!) சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது வெனிசூலா.

கடந்த நான்கு தினங்களாக வெனிசூலா முழுதும் அத்தியாவசியப் பொருள்களின் விலை நம்பமுடியாத உயரங்களுக்கு ஏறி உட்கார்ந்துகொண்டிருக்கின்றன. சரி ஒழிகிறது; அவசரத் தேவைக்காவது வாங்கி வைப்போமென்றால் அதுவும் முடியாமல் கள்ள மார்க்கெட் கனவான்கள் ரெகுலர் வியாபாரத்தை சீர் குலைத்து, சகலமான வஸ்துக்களையும் கள்ள மார்க்கெட்டில் மட்டுமே வாங்கும்படியாகச் செய்து வைத்துவிட்டார்கள். காய்கறிகள், மளிகை சாமான்கள், பிற வீட்டு உபயோகப் பொருள்கள் எதுவும் செட்டியார் கடையில் கிடைக்காது. என்ன வேண்டுமானாலும் யார் சந்து பொந்துகளில் நிற்கிறார்கள் என்று தேடித்தான் போகவேண்டும். 'இன்றைக்கு வெள்ளிக்கிழமை' என்று கோட் வேர்ட் சொல்லி, 'ஆமாம், நாளைக்கு வியாழக்கிழமை' என்று பதில் கோடு பெற்று பொருள்களை வாங்கியாக வேண்டிய அளவுக்கு நிலைமை கந்தரகோலமாகி யிருக்கிறது.

அப்படி வாங்கப்படும் பொருள் கஞ்சாவோ பிரவுன் சுகரோ, கடத்தல் தங்கமோ அல்ல. காப்பிப் பொடி, சர்க்கரை. அரிசி. உளுத்தம்பருப்பு. கடலெண்ணெய். கடுகு, மிளகு, தனியா, சீரகம்.

நம்பமுடியவில்லை அல்லவா? நிலைமை அப்படித்தான் இருக்கிறது. வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தேசத்தின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பதை மறுக்கவில்லை. ஆனால் பதினேழு, பதினெட்டு பர்செண்ட் பண வீக்கம்தான் உண்மை. அதை ஐம்பத்தி நாலாக ஊதிப் பெருக்கிக் காட்டுவது திட்டமிட்ட களவாணித்தனம் என்கிறார். யார் அந்தக் களவாணி?

காலக்கிரமத்தில் தெரியவரும்.

இதனிடையே வெனிசூலாவின் எண்ணெய் வளம் என்ன ஆனது, ஏற்றுமதி என்ன ஆனது என்று ஆங்காங்கே விற்பன்னர்கள் கேள்விகளால் வேள்வி செய்யத் தொடங்க, எல்லாம் சரியாக இருக்கிறது, எல்லாம் ஒழுங்காகவே இயங்குகிறது, ஒன்றும் பிரச்னை இல்லை என்று கதறித் தீர்க்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. அடுத்த மாதம் தேசமெங்கும் மேயர் எலக்‌ஷன் நடக்கவிருக்கிறது. ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு டெப்பாசிட் கூடத் தேறாது என்று இப்போதே பேசத் தொடங்கிவிட்டார்கள். வியாபாரிகள் கொத்துக் கொத்தாகக் கடையைப் பூட்டிவிட்டு ஊராந்தரம் போகத் தொடங்கி விட்ட சூழ்நிலையில் மகா ஜனங்களின் கோபமானது முற்றுமுழுதாக அதிபரின்மீது திரும்பியிருக்கிறது.

வேறு வழியின்றி அதிபர் இப்போது துப்பாக்கி முனையில் வியாபாரிகளைக் கடை திறக்கச் சொல்லி மிரட்டிக்கொண்டி ருக்கிறார். மூடாதே. வியாபாரம் பண்ணு. ஆனால் நியாயமான விலைக்குத்தான் பொருள்களை விற்கவேண்டும். உன் இஷ்டத்துக்கு விலையேற்றினால் உன்னைக் கழுவில் ஏற்றிவிடுவேன். நீ யார் என்னைக் கேட்பதற்கு? எனக்கு இந்த விலையெல்லாம் கட்டுப்படியாகாது என்று எந்த வியாபாரியாவது முரண்டு பிடித்தால் ஜெயிலுக்குப் போவது தவிர வேறு வழியில்லை என்று அதிபர் பெருமான் சொல்லிவிட்டார். என்ன செய்ய? வியாபாரிகளின் கோபத்தைக் காட்டிலும் பொதுமக்களின் கோபம் பெரிது.

வெனிசூலாவின் இந்த நம்பமுடியாதப் பொருளாதாரப் பெருஞ்சரிவுக்கான உண்மைக்காரணம் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் தெரிந்துவிடும். ஆனால் பாதாளத்துக்குப் போய்விட்ட நாணய மதிப்பை மீட்டுச் சரி செய்ய வெகுகாலம் பிடிக்கும். இரண்டு நாணயங்களின் மதிப்பும் தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x