மாணவர் ஓரம்: மனதில் மட்டுமல்ல; பணத்திலும் பதிந்த எழுத்தாளர்!

மாணவர் ஓரம்: மனதில் மட்டுமல்ல; பணத்திலும் பதிந்த எழுத்தாளர்!
Updated on
1 min read

கொலம்பிய மக்கள் செல்லமாக அழைக்கும் எழுத்தாளர் கபோ. ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’(1967) எனும் நாவல் கபோ என்ற கபிரியேல் கார்சியா மார்க்கேஸை உலகுக்கு அடையாளம் காட்டியது. 1982-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை அவர் பெற்றார். ‘காலராக் காலக் காதல்’(1985) எனும் நாவல் உள்ளிட்ட அவரது பிற்கால எழுத்துகளும் புகழ்பெற்றவை.

1927-ல் கொலம்பியாவில் பிறந்த அவர், சட்டம் படித்தார். இடையில் பத்திரிகையாளராகப் பரிணமித்தார். பல்வேறு கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். ஆனாலும், சிறுகதைகளும் நாவல்களுமான அவரது புனைவு எழுத்துகள் தனித்தன்மையாக இருந்தன. மாயாஜால யதார்த்தவாதப் பாணி என்பார்கள் அதை. அவை மக்களை மயக்கின. ஒவ்வொரு படைப்பையும் புதுமையாகப் படைக்க முயன்றார் கபோ. 1999-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்தார். இரவும் பகலும் பூட்டிக்கொண்டு எழுதினார். மூன்றாண்டுகளில் ‘கதை சொல்வதற்காக வாழ்தல்’ எனும் படைப்பை வெளியிட்டார். அதன் பிறகும் அவர் முயன்றாலும் 2005-ல் அவரது எழுத்து நின்றுபோனது. நினைவாற்றல் மங்கிய அவர் 2014-ல் மெக்ஸிகோ நாட்டில் 87 வயதில் இறந்தார். கொலம்பியா, மெக்ஸிகோ இரு நாட்டு குடியரசுத் தலைவர்களும் அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கொலம்பியா நாட்டின் பணத்தில் முக்கியமான தலைவர்களின் படங்கள் பதிக்கப்படும். அந்த நாட்டின் இரண்டாவது பெரிய பணமான, 50 ஆயிரம் மதிப்புள்ள காகிதப் பணத்தில் கபோவின் உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

பொதுவாக, இலக்கியவாதிகளுக்கு இத்தகைய கவுரவம் கிடைப்பது அரிதுதான். இவருக்கு முன்பு பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து காகிதப் பணங்களில் எழுத்தாளர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.

1999-ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்தார். இரவும் பகலும் பூட்டிக்கொண்டு எழுதினார். மூன்றாண்டுகளில் ‘கதை சொல்வதற்காக வாழ்தல்’ எனும் படைப்பை வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in