

ஒலிபெருக்கியில் பாடல்களும் அவற்றோடு சேர்ந்து தேவாலய மணிச் சத்தமும் உரத்துக் கேட்கும்போது உலுக்கி எழுப்புவார்கள். நள்ளிரவுக்கு இன்னும் சில நிமிடங்களே இருக்கும் அப்பொழுதில் குழப்பத்துடன் கண்விழித்து அது கிறிஸ்துமஸ் இரவென்று உறைக்கும்போது உற்சாகமாய் எழுவோம். அரக்கப் பரக்கத் தயாராகிப் புதுத்துணி உடுத்தித் தெருவில் இறங்கும்போது நள்ளிரவுப் பனியும் இருளும் எங்களோடு கூடவே வரும். இருள் பின்னணியில் விளக்கு பொருத்திய காகித நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட எல்லா வீட்டுக் கூரைகளிலும் ஆடும். தேவாலய வளாகத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து நடப்பட்டிருக்கும் ஈச்சமரம்தான் கிறிஸ்துமஸ் மரம்.
ஊரே திரண்டு தேவாலயத்தில் கூடியிருக்கும் அந்த இரவில் எல்லோருமே அழகாய் இருப்பார்கள். அந்த அழகு புத்தாடைகளால் மட்டுமே உண்டாகும் அழகல்ல. தேவாலயத்தின் ஒரு பகுதியையே அடைத்துப் போடப்பட்ட பிரமாண்டமான குடிலில் ஆடுகளும் மாடுகளும் சூழ ஏசு பிறந்திருப்பார். அக்குடில் யூதேயா தேசத்தின் பெத்லகேமில் இருக்கும் ஒரு மலையடிவாரத்து மாட்டுக்கொட்டகையைப் போலத் தோற்றமளிக்க வேண்டி ஊர் இளைஞர்கள் ஏறத்தாழ ஒரு மாத காலம் தமது உழைப்பைச் செலவிட்டிருப்பார்கள். நீண்ட நேரம் நீடிக்கும் வழிபாட்டின் முடிவில் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வோம்.
பிறகு சான்ட்டா வருவார். பரிசுகள், ஆட்டம்பாட்டம் என எல்லாம் முடிந்து இருளையும் பனியையும் பிரிந்து வீட்டுக்கு வரும்போது மணி மூன்றைத் தொட்டுவிடும். காலையில் விசேஷ நாளுக்கான உணவு வகைகளோடு கிறிஸ்துமஸ் தினம் விடிந்திருக்கும். ஆனால், கடந்த அந்த இரவு, நள்ளிரவு விழிப்பு, புதிய ஆடைகள், காகித நட்சத்திரங்கள், வண்ண விளக்குகள், உற்சாகமான கொயர் பிள்ளைகளின் பாட்டு, தொந்தி பெருத்த சான்ட்டா கிளாஸ் என ஏதோ கனவைப் போலிருக்கும். எங்களது சிறுபிராயத்து கிராமத்தில் வருடாவருடம் நாங்கள் கண்ட மறக்க முடியாத நிஜக் கனவு அது.
குழந்தை ஏசு
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பல நேரம் கிறிஸ்தவ மதத்தின் வழமைகளுக்குள் ஒரு மதவிழாவாகச் சுருங்கிவிடாமல் மக்களின் பொதுவான கொண்டாட்ட நிகழ்வாக மாறிவிடுகிறது. கடவுளைக் குழந்தையாக வரித்துக்கொள்வதும் கொண்டாடுவதும் மேலை மதங்களில் இல்லாதது. ஆனால், கிறிஸ்து இதற்கு விதிவிலக்கு. கீழைத்தேய நாடுகளுக்கு இணையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குழந்தை ஏசு ஆலயங்கள் உள்ளன.
கடவுளைக் குழந்தையாக பாவிக்கும்போது மதம் சார்ந்த எதிர்மறை எண்ணங்கள், நாத்திகச் சாய்வு போன்றவை தளர்ந்து ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்றதாக மனம் மாறிவிடுகிறது. அடிப்படையாக, குழந்தைமை மீதான ஈர்ப்பும் இதற்குக் காரணம். இதனாலேயே வேறுபாடுகள் கடந்து உலகளாவிய ஒரு விழாவாக கிறிஸ்துமஸ் இருக்கிறது.
உலகின் ஒரே கிறிஸ்தவர்
வரலாறும் மதங்களுக்கேயுரிய புராணிகமும் கலந்தவொரு சித்திரம் ஏசுநாதருடையது. பைபிளின் புதிய ஏற்பாட்டின் வழிசென்று பிறப்பு முதல் கல்வாரியில் சிலுவையில் மரணமடைவதுவரை, உலகை மீட்க வந்த மெசியா என்ற பிம்பத்துக்கு இணையாக எளிய மக்களின் பிரதிநிதியாக இருந்து அதிகாரத்தைக் கேள்விகேட்ட, போதனைகளூடாக மக்களுக்கு நல்வழிகாட்டிய, பழமைகளைச் சாடிய கலகக்காரர் எனத் தன்னை அறிவித்துக்கொள்ளாத கலகக்காரர் என்ற பிம்பமும் வளர்ந்து நிற்பதைக் காணலாம்.
கிறிஸ்தவ மதத்திலிருந்து விலக்கி கிறிஸ்துவைப் பார்க்கும்போது அவரோடு இன்னும் நெருங்க முடியும். தன்மீது சுமத்தப்பட்ட கடவுள் பிம்பத்தை அவர் விரும்பவுமில்லை என்பதற்கு பைபிளிலேயே நாம் உதாரணங்களைக் காண முடியும். நிகோஸ் கஸன்ஸாகிஸின் ‘தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்’ நாவலில் “மரணத்தை விடவும் திரும்ப உயிர்த்தெழுவது பற்றித்தான் மிகுந்த அச்சமாயிருக்கிறது” என ஏசு சொல்லுமிடம் கவனிக்கத் தக்கது. “ஏசு கிறிஸ்துதான் உலகின் ஒரே கிறிஸ்தவர்” என நீட்ஷே சொல்வதையும் இங்கே நாம் சேர்த்துப் பார்க்கலாம்.
பரமபிதாவின் மைந்தர் மனிதனாகப் பிறந்து நம்மை ரட்சிக்க வருவார் என்ற யூதர்களின் காலம்காலமான காத்திருப்புக்கு விடையாக கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்ந்தது. ஒரு மனிதனின் சிலுவை மரணம் நம்மை மீட்டெடுக்கும் என்ற மனித குலத்தின் நம்பிக்கையை அவர் பொய்த்துப்போக விடவில்லை. மனிதனுக்குரிய சகல வலிகளோடும் துக்கங்களோடும் அவர் சிலுவையை ஏற்றார். சக மனிதருக்கான தியாகத்தின் தூல வடிவமான அவரது வாழ்வு, நம்பிக்கைகளின் மீதான காத்திருப்புக்கு அர்த்தம் சேர்ப்பதும்கூட. உலகெங்கும் அவர் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் தினம் அவரது தியாகத்தையும் நேயத்தையும் மட்டுமல்லாது, விடியலை நோக்கிய மனித குலத்தின் மாறாத நம்பிக்கையையும் கொண்டாடும் தினமாகவும் அமைந்திருக்கிறது.
- அசதா, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: jayanthandass@gmail.com