Last Updated : 11 Dec, 2013 12:00 AM

Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

பாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்கள்

பாரதியார் தாம் வாழ்ந்த காலத்தில் உரிய விதத்தில் அங்கீகரிக்கப் படவில்லை; போற்றப்படவில்லை என்னும் கருத்து பொதுவாகக் காணப்படுகிறது. இன்று கொண்டாடப்படும் அளவுக்கு அன்று பாரதி கொண்டாடப்படவில்லை என்பது உண்மைதான். ஆயினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு அவர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.

அரசியல் எதிரி, கவிதையின் நண்பர்

தனது 22-ம் வயதில், 1904-ல் பாரதி இதழியல், அரசியல் வாழ்வைச் சென்னையில் தொடங்குகிறார். அரசியல் வாழ்வில் திலகரும் புதிய கட்சியும் பாரதியை ஆட்கொண்டனர். மிதவாதப் போக்கை, மிதவாத அணியினரை பாரதி கடுமையாகத் தாக்கி எழுதினார். குறிப்பாக, அவ்வணியின் முதன்மையான தலைவர் வி. கிருஷ்ணசாமி ஐயர், பாரதியின் கடுந்தாக்குதலுக்கு உள்ளானார். ஒருமுறை பாரதியின் பாடல்களைப் பாரதியே பாடி கிருஷ்ணசாமி ஐயர் கேட்க நேர்ந்தது. விளைவு, தன்னைத் தாக்கி எழுதியவர் என்பதையும் புறம்தள்ளி, பாரதியின் மூன்று பாடல்கள் முதன்முறையாக நூல்வடிவம் பெறப் பொருளுதவி செய்தார். பாரதியின் முதல் சிறுநூல் 1907-ல் இப்படித்தான் வெளிவந்தது. இந்த நூலை 15 ஆயிரம் பிரதிகள் அடித்துத் தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு இலவசமாக அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார்.

சென்னையின் கவி

நெவின்சன் எனும் இங்கிலாந்து பத்திரிகையாளர் ஒருவர் 1908-ம் ஆண்டு எழுதிய ஆங்கில நூலில் (தி நியூ ஸ்பிரிட் இன் இண்டியா) பாரதி பற்றிப் பதிவுசெய்திருக்கிறார். அவர் தனது இந்தியப் பயணத்தின்போது, சென்னையில் பாரதி கவிதை பாடிய கூட்ட நிகழ்வைக் கண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் லாலா லஜபதிராய் விடுதலையான தினம் சென்னைக் கடற்கரையில் கொண்டாடப்பட்டது. பாரதியின் பெயரைச் சுட்டாமல் சென்னையின் தமிழ்க் கவிஞர், தாம் இயற்றிய பாடல்களை அந்தக் கூட்டத்தில் பாடியதையும் அந்தப் பாடல்களின் சிறப்பையும் நெவின்சன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அயல்நாட்டுப் பத்திரிகையாளரின் பார்வையில் தமிழகத்தின் (சென்னையின்) கவி என பாரதி சிறப்பாகச் சுட்டப்பட்டிருப்பது, அரசியல் வாழ்வின் தொடக்க நிலைகளி லேயே பாரதி பெற்றிருந்த இடத்தைத் தெளிவுபடுத்துகிறது.

இராகவையங்காரின் பாராட்டு

1909-ம் ஆண்டு ஜென்மபூமி (ஸ்வதேச கீதங்கள் - இரண்டாம் பாகம்) நூல் வெளிவந்தது. அந்த நூலுக்குச் செந்தமிழ் இதழில் மதிப்புரை எழுதிய மு.இராகவையங்கார் ‘இவர் வாக்குத் தமிழ்நாட்டார் பலரும் பலமுறை அறிந்து சுவைத்ததேயாதலின், நாம் பலபடப் புனைதல் மிகையாம்’ எனவும், ‘இதன் சில பகுதிகளை, எம் நண்பர்கள் முன் படித்துவரும்போது, உள்ளபடியே அவை, உரோமஞ் சிலிர்க்க எம்மைப் பெரிதும் உருக்கிவிட்டன’எனவும் எழுதினார். இதை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அங்கீகாரமாகவும் புலவர் உலகின் அங்கீகாரமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

தென்னாப்பிரிக்கப் பிரசுரம்

புதுவை வாழ்க்கையின்போது ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து பாரதிக்கு 1,000 ரூபாய் கிடைத்த நிகழ்வையும் அந்தப் பணம் அவரிடம் ஒரு வாரம்கூடத் தங்கவில்லை என்பதையும் வ.ரா. எழுதியிருக்கிறார். 1914-ம் ஆண்டில் பாரதியாரின் கவிதைத் தொகுதியொன்று 'மாதா மணிவாசகம்' என்னும் தலைப்பில் தென்னாப்பிரிக்காவில் வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்காவிலிருந்து 1,000 ரூபாய் கிடைத்தது என வ.ரா. குறிப்பிடுவதோடு, இதை இணைத்துப் பார்க்கலாம். இந்த நூல் தென்னாப்பிரிக்கா டர்பன் சரசுவதி விலாச அச்சுக்கூடத்திலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ்க் கவிஞனின் படைப்பு தமிழகத்துக்கு - இந்தியாவுக்கு - வெளியிலிருந்து பதிப்பித்து வெளியிடப்பட்ட மகத்தான வரலாற்று நிகழ்வு அது.

தமிழகத்தின் தாகூர்

1917-ம் ஆண்டு வெளிவந்த 'திராவிடன்' இதழில் பாரதியின் கண்ணன் பாட்டுக்கு நூல் மதிப்புரை வெளிவந்திருந்தது. இந்த இதழ் நீதிக்கட்சி சார்ந்த இதழாகும். இந்த இதழில் மகாகவி பாரதி தமிழகத்தின் தாகூர் எனப் போற்றப்பட்டிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் ஜெயதேவர், நியூமன் ஆகிய கவிஞர்களுக்கு ஈடாக பாரதி பாராட்டப்பட்டிருக்கிறார். இது பாரதிக்குக் கிடைத்த சமகால அங்கீகாரங்களுள் குறிப்பிடத் தக்கது.

மாதந்தோறும் 30 ரூபாய்

பாரதி புதுவையில் வசித்தபோது, குறிப்பிட்ட காலம் தொடங்கி, சுதேசமித்திரன் பத்திரிகைக்காக அவர் ஏதாவது எழுதி அனுப்பினாலும் சரி, எழுதாவிட்டாலும் சரி, மாதம் 30 ரூபாய் பாரதிக்கு அனுப்புவது என்று முடிவெடுத்து சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அவருக்குப் பணம் அனுப்பிவைத்தார் என்பது தொடர்ச்சியாக பாரதியைச் சிலர் ஆதரித்துவந்த நிலையை உணர்த்துகிறது.

அன்னிபெசண்டிலிருந்து ஹானிங்டன் வரை…

புதுவை வாசத்திலிருந்து விடுபடக் கருதிய பாரதி, புதுவையிலிருந்து வெளியேறிக் கடலூர் செல்லும் நிலையில், 1918 நவம்பர் 20 புதன்கிழமையன்று ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்படுகிறார். செய்தியை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியரும், அன்னிபெசண்டு அம்மையாரும், நீதிபதி மணி அய்யரும், சர். சி.பி. ராமசாமி அய்யரும் சென்னை அரசாங்கத்தை அணுகி பாரதியின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இதன் பின் காவல் துறை டி.ஐ.ஜி. ஹானிங்டன் கடலூர் சிறையில் பாரதியைச் சந்தித்துப் பேசுகிறார். இதன் தொடர்ச்சியாக பாரதி விடுதலையாகிறார். இந்திய அளவிலும், சென்னை மாகாண அளவிலும் முக்கியமானவர்களெல்லாம் பாரதியின் விடுதலைக்காக உடனடியாகச் செயல்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கூடவே, டி.ஐ.ஜி. ஒருவரே பாரதியைச் சிறையில் சந்தித்துப் பேசியது, அவரைக் கைதுசெய்த வெள்ளை அரசாங்கம்கூட அவரை எந்த நிலையில் மதித்தது என்பதை உணர்த்துகிறது.

நுழைவுக் கட்டணம் ஒரு ரூபாய்

1919-ம் ஆண்டு சென்னையில் தொடர்ந்து பாரதி சில சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் அந்த நாளில் பாரதிக்கு இருந்த பெருமதிப்பை உணர்த்துகின்றன. திராவிட இயக்கம் பேரெழுச்சி கொண்டிருந்தபோது, நுழைவுக் கட்டணம் வசூலித்துச் சில சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன என்பது வரலாறு. அதற்கெல்லாம் முன்னதாகவே பாரதியின் சொற்பொழிவுக்கு அந்நாளிலேயே ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தச் சொற்பொழிவுகள் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. ‘நித்தியத்தின் வழிபாடு’(தி கல்ட் ஆஃப் தி எட்டெர்னல்) என்னும் தலைப்பில் 02.03.1919 அன்று பாரதி சொற்பொழிவாற்றியிருக்கிறார். இந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் நீதிபதி சர்.எஸ்.சுப்பிரமணிய அய்யர். ஒரு நீதிபதியின் தலைமையில் சென்னையின் புகழ் மிக்க விக்டோரியா அரங்கில் நுழைவுக் கட்டணம் வசூலித்து, பாரதியின் ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்ந்தது என்பது சென்னையில் அந்த நாளில் பாரதி மதிக்கப்பட்ட இடத்தை உறுதிபடக் காட்டுகிறது.

மக்கள் மன்றத்தின் வரவேற்பு

பாரதி மறைவதற்குச் சில மாதங்கள் முன்பு கடலூர், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்தக் கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகள் சுதேசமித்திரனில் (25 மார்ச்,1921) வெளிவந்திருந்தன.

கடலூருக்கு வந்திறங்கிய பாரதியை வரவேற்கப் பெருங்கூட்டம் கூடியிருந்தது என்பதையும், ரயில் நிலையத்தில் கடலூரின் இந்து, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுதிரண்டு வரவேற்றனர் என்பதையும், ரயில் நிலையத்திலிருந்து அவர் மேளதாளங்களோடும் கொடிகளோடும் முழக்கங்களோடும் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதையும் சுதேசமித்திரன் தெரிவிக்கிறது. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 5,000 மக்கள் கூடியிருந்தனர் எனவும், அவர்கள் பாரதியைக் கண்டதும் சந்தோஷக் கடலில் மூழ்கினர் எனவும் சுதேசமித்திரன் தெரிவிக்கிறது. மக்கள் மன்றங்களிலும் பாரதி கொண்டாடப்பட்டிருக்கிறார்; ஓரளவு அறியப்பட்டிருக்கிறார் என்பதை இந்தச் செய்தி உணர்த்துகிறது. 1919-ல் எட்டயபுர மன்னனிடம் சீட்டுக்கவி எழுதி, சால்வை, ஜதி, பல்லக்கு முதலியவற்றோடு வரவேற்க வேண்டி, அவை யாவும் கிடைக்காமல் போன பாரதிக்கு மக்கள் மன்றத்தில் அப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இறுதி ஊர்வலம்

வாழ்ந்தபோது பாரதியைச் சமூகம் ஓரளவு அங்கீகரித்ததெல்லாம் சரி, இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பாரதியை அங்கீகரிக்காததன் அடையாளம் அல்லவா எனப் பல முனைகளிலிருந்தும் வினாக்கள் எழக்கூடும். இதற்கு விடை அளிப்பதுபோல பாரதியின் மகள் சகுந்தலா பாரதி அந்தச் சூழலை விளக்கியிருக்கிறார். பாரதியின் மூத்த மகளும் மருமகனும், பாரதியின் தம்பியும் பாரதி இறந்து ஓரிருநாள் கழித்தே வந்துசேர்கிறார்கள். சென்னையிலேயே இருந்த பாரதியின் புதுவைச் சீடர் ரா. கனகலிங்கம் மறுநாள் பத்திரிகையின் வாயிலாகத்தான் மறைவை அறிந்து துடித்துப்போகிறார். இன்று இருப்பதுபோல உடலைப் பாதுகாக்கும் வசதிகளோ, செய்தியைப் பரவலாகத் தெரிவிக்கும் ஊடக வசதிகளோ அன்றில்லை. மேலும், பிராமண சமூக வழக்கம், ஒண்டுக்குடித்தனச் சூழல் முதலியனவெல்லாம் பலர் வரும் முன்னே உடலை எரியூட்டச் செய்துவிட்டன என்பதே உண்மை.

இறப்புக்குப் பின்னால்…

பாரதியின் மறைவுக்குப் பின் மாதந்தோறும் அவர் குடும்பத்துக்கு அவருடைய நண்பர் துரைசாமி ஐயர் ரூ. 25 வழங்கி உதவினார். தந்தை பெரியார், ராஜாஜி, திரு.வி.க. போன்றோரை உள்ளடக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, பாரதியின் குடும்பத்துக்கு 1,000 ரூபாய் வழங்கியது. கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் செட்டியார் பாரதி நூல்களின் உரிமையைப் பெற்றுக் கொண்டு ரூ. 10,000 வழங்க முன்வந்தார் (பின்னர் இது தடைபட்டது). இவற்றோடு, செல்லம்மாள் பாரதி மேற்கொண்ட பாரதி நூல் வெளியீட்டு முயற்சிகளுக்காகத் தமிழகத்திலிருந்தும் பர்மா முதலிய பகுதிகளிலிருந்தும் வந்து சேர்ந்த பண உதவிகள் என்றெல்லாம் பாரதிக் கான அங்கீகாரமும் ஆதரவும் பாரதி குடும்பத் துக்குத் தொடர்ந்தன. பாரதி வாழ்ந்த காலத்திலும், அவரது மறைவுக்குப் பின்னும் தமிழகம் பாரதியையும், பாரதி குடும்பத்தையும் குறிப்பிடத் தக்க நிலையில் அங்கீகரித்துவந்தது என்பதே உண்மை வரலாறாகும்.

- ய. மணிகண்டன், உதவிப் பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தொடர்புக்கு: v.y.manikandan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x