

பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிடில் கடுமையான விளைவுகள் ஏற்படும். பருவநிலையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களால் எல்லாக் கண்டங்களிலும் எல்லாப் பெருங்கடல்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுவருகின்றன. மனிதர்களுக்கு, தரைவாழ் உயிரினங்களுக்கு, கடல்வாழ் உயிரினங்களுக்கு அளவிட முடியாத சேதங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன. நன்னீர் கிடைப்பது அரிதாகிக்கொண்டே வருகிறது. புதுப்பிக்கவல்ல குடிநீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், குட்டைகள் மீள முடியாத நிலைக்கு வற்றிக்கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீர்வளமும் குறைந்துவருகிறது.
புவியில் வெப்ப அளவு ஒவ்வொரு டிகிரி உயரும்போதும், மக்கள்தொகையில் 7% அதிகரிக்கும்போதும் புதுப்பிக்கவல்ல நீர் ஆதாரங்கள் 20% அளவுக்குக் குறைகிறது. இந்தியா போன்ற நாடுகளில் பயிர் விளைச்சல் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 0-0.2% குறையவிருக்கிறது. 2050 வரையில் ஒவ்வொரு பத்தாண்டும் உணவு தானியத் தேவை 14% அதிகரிக்கவிருக்கிறது.
ஆசியக் கண்டத்தில் மழை அளவு குறையும் அதே வேளையில், பெய்யும் மழையும் ஒரே சமயத்தில் பெய்து வெள்ளச் சேதங்களைக் கடுமையாக ஏற்படுத்திவிடும். இதனால் சாலை, தகவல்தொடர்பு, மின் தடங்கள் போன்ற அடித்தளக் கட்டமைப்புகளுக்கும் குடியிருப்புகளுக்கும் பலத்த சேதம் ஏற்படும். வெப்பம் அதிகரிப்பதால் கோடையில் உயிரிழப்புகள் அதிகரிக்கும். வறட்சி காரணமாக குடிநீர், உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படும். மாறும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப பெரும்பான்மை மக்களால் உடனடியாகத் தகவமைத்துக்கொள்ள முடியாது. அது அவர்களின் வளர்ச்சி, வாழ்நிலையை மிகவும் பாதிக்கும்.
இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட வில்லை. கசிந்த அறிக்கையிலிருந்து திரட்டப்பட்டவை இந்தத் தகவல்கள்.
தமிழில்: சாரி