Published : 14 Apr 2017 10:55 am

Updated : 16 Jun 2017 14:27 pm

 

Published : 14 Apr 2017 10:55 AM
Last Updated : 16 Jun 2017 02:27 PM

கல்லெழுத்தில் ஒரு கடிதம்!

மொழியியல் அறிஞரும், திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனத்தின் மதிப்புறு இயக்குநராகவும் விளங்கிய டாக்டர் வடசேரி அய்யம்பெருமாள் சுப்பிரமணியம், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி அவரிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர் டோக்கியோவில் இருந்தார்.

அவருக்குத் தெரியும் - இது அவருக்குச் செய்யப்பட்ட சிறப்பு அல்ல; காலம் அவரிடம் ஒப்படைத்திருக்கும் ஒரு மகத்தான பொறுப்பு என்று! தஞ்சாவூருக்கு அவர் வந்து சேர்ந்தபோது, தனக்குத் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருந்த சொகுசு ஓட்டலைத் தவிர்த்துவிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒற்றை அறை விருந்தகத்தின் புழுதிபடிந்த தரையில் மாலை தினசரியை விரித்துப் படுத்துக்கொண்டார்.


பொறியாளர்களும் பல்கலைக்கழகத் தனி அலுவலர் சிவகுருநாதனும் அதிர்ந்து போனார்கள். அங்கிருந்தபடியே அடுத்துச் செய்ய வேண்டிய பணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்தார். அவர் நடைப் பயிற்சிக்குச் சென்ற சில மணி நேரங்களில் அந்த விருந்தகம் சீரமைக்கப்பட்டது.

பெட்டிக்குள் கனவுகள்

வ.அய்.சு. தனது பெட்டியைத் திறந்தார். உள்ளே அடுக்கி வைக்கப்பட்ட கனவுகளை ஒவ்வொன்றாக எடுத்தார். உலவத் தொடங்கினார். கனவு மெல்ல விரிந்தது. நூறாண்டுக் கால கனவு. தமிழ் அறிஞர்கள் கண்ட கனவு. தமிழ்வேள் உமா மகேசுவரம் பிள்ளையும், மறைமலை அடிகளும், தமிழ் மூதறிஞர்களும் கண்ட கனவு. அரசு தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க ஒதுக்கிய ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் அவர் காலடி படாத இடமே இல்லை. காலடிபட்ட இடமெல்லாம் கனவுகள் துளிர்த்தன. நனவாகி, மரமாகி, நந்தவனமாகி மலரத் தொடங்கின.

டெல்லி திகைத்தது!

டெல்லிக்காரர்கள் அலட்சியமாய்ப் பார்த்தார்கள். எப்படி நடக்கிறது பார்க்கலாம் என்று ஏளனத்துடன் வ.அய்.சு. தந்த வரைவைப் புரட்டினார்கள். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு தந்த அங்கீகாரத்தைப் பற்றிக்கொண்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம் விசுவரூபம் எடுத்தபோது அச்சமும் வியப்பும் ஒருசேர ஏற்பட்டது அவர்களிடம். அவர்களின் அச்சத்தில் உண்மை இல்லாமல் இல்லை. கன்னடம், தெலுங்கு மொழிப் பல்கலைக்கழகங்கள் அமைக்கும் கோரிக்கைகள் வலுப்பெறலாயின.

ஆய்வுத் தேனீக்கள்

இலங்கையிலிருந்தும், ஜப்பானிலிருந்தும், மொரீஷியஸிலிருந்தும் ஆய்வுத் தேனீக்கள் பறந்துவந்தன. செனகல் குடியரசின் தலைவர் லியோபோல்டு செங்கார் ஒரு சிறந்த கவிஞர். பிரிட்டனின் எடின்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆஷர், ஜெர்மனியின் ஹைடெல் பெர்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெர்மன் பெர்கர், ஜப்பானிய அறிஞர் உச்சிடா மட்டுமன்றி, ரஷ்யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் கூட அறிஞர்கள் பலர் தஞ்சையின் வீதிகளில் கையசைத்துச் சென்றனர். பன்னாட்டுக் கருத்தரங்குகளில் அவர்கள் பங்குபெற்றனர். தமிழ்ப் பல்கலைக்கழக விருந்தோம்பலில் திளைத்தனர்.

செவ்வேள்!

நெடுநெடுவென்ற உயரம், நெற்றியில் தகதகக்கும் திருநீறு, கதர் கோட்டு தந்த கம்பீரம், முழங்கால் வரை நீளும் அரச லட்சணம் மிகுந்த கரங்கள், அறிஞர் வ. சுப. மாணிக்கம் அவரை ‘செவ்வேள்’ என்றே அழைப்பாராம். வில்லிலிருந்து விடுபட்ட அம்பாக நடப்பதில் அவர் காட்டிய வேகம் அவரது செயல்பாடுகளின் கூறாக அவரை அடையாளப்படுத்தியது.

ஒரு கட்டத்தில் துணைவேந்தராக அவர் நியமிக்கப்படக் காரணமான முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் சென்று, குறித்த நேரம் கடந்தும் முதல்வர் வராததால் தமக்கு வேறு பணிகள் இருப்பதாகக் கூறி தலைமைச் செயலகத்தை விட்டு வெளியேறிய துணிச்சல். பணியேற்ற முதல் நாளே, தமது பணிக் காலத்தில் பாக்கியிருக்கும் நாட்களைக் குறிப்பிட்டு, புதுவித நாட்காட்டி உருவாக்கி பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு வழங்கி ஒத்துழைப்பு கோரிய உத்தி.

ஏற்ற பணியில் பழுது இருந்தால் எவர் வேண்டுமானாலும் என் பணித் துறப்புக் கடிதத்தை அஞ்சலில் சேர்க்கலாம் என்று எழுதிவைத்த நெஞ்சுறுதி. காலன் அவர் மூத்த மகன் உயிரைக் கவர்ந்தபோதும் பற்றற்ற துறவியாய் பணியைத் தொடர்ந்த தீரம். இவையே வ.அய்.சு.வின் காலம்.

உடனே காலி செய்க

அரசின் செயல்பாடுகள் முரண்பட்டபோது, தன் பணித் துறப்புக் கடிதத்தைத் தானே (தனிச்செயலரான என் மூலம்) அஞ்சலில் சேர்த்தார். பணித் துறப்பு ஏற்கப்பட்டது. உடனே இல்லம் வந்து தனது துணைவியாரிடம், ‘மறுநாள் மாலைக்குள் வீட்டைக் காலி செய்து பல்கலைக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என கூறிவிட்டார்.

கல் எழுத்தில் ஒரு கடிதம்!

விடைபெறும் நாளில் அவர் தமிழ்ப் பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு எழுதிய கடிதம் கல்லெழுத்தில் எழுதிய கடிதமாக ஆய்வுலகுக்கே வழிகாட்டும் வகையில் அமைந்துவிட்டது.

“இன்று (31.07.1986) மாலை ஐந்து மணியுடன் என் பொறுப்பை ஒப்புவித்து ஆய்வுக்காக நான் திருவனந்தபுரம் செல்கிறேன். பரதன் பாதுகாத்த பாதுகையைப் போலப் பிறர் கையில் மகிழ்ச்சியுடன் விட்டுச் செல்லும் உணர்வு ஏற்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உங்கள் அனை வருடன் உழைத்துத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைப் படிப்படியாக உருவாக்குவதில் ஒரு பெருமிதம் எனக்கு இருந்தது. இணைந்த செயல்பாடுகளும், உறவு முறையும், தமிழுக்காகச் செய்கிறோம் என்ற மனநிலையும் இந்த வளர்ச்சிக்குக் காரணம். இவற்றுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் பிற பல்கலைக் கழகங்கள் போன்ற ஒன்றன்று. இது உயராய்வு மையம். இங்கே அறிவு சான்ற சிலரே இடம் பெற முடியும். இடம் பெற்றவர்களும் தமது அறிவாற்றலை வெளிப்படுத்தத் தொடர்ந்து தம்மைத் தாமே தேர்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதைப் போன்றே அலுவலகமும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். என்று ஆய்வின் தரம் குறைகிறதோ அன்று தமிழ்ப் பல்கலைக்கழகம் தளர்ந்துவிடும். நல்கைகள் குறையும். பொருள் முட்டுப்பாடு தோன்றி, தமிழ் பண்பாட்டைக் காத்து வளர்க்கும் இந்த நிறுவனம் நிலைகுலைந்துவிடும். இதனை ஒவ்வொருவரும் நினைவில் கொள்வது நன்று. இதன் வாழ்வும் வளர்ச்சியும் ஒவ்வொரு ஆய்வாளர்/அலுவலர் கையில் எப்போதும் இருக்கும்.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற புறநானூற்று அடிகள் நமக்கு மனப்பாடம் அறநெறி தவறாமல் செயல்படுவதே பெரும் அரச வெற்றி என்று அசோகன் கல்லெழுத்தில் கூறியதும் நமக்கு நினைவிருக்கலாம். தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சியைத் தமிழர் அனைவரும் ஏன் - பிற மாநிலத்தார்கூட உன்னிப்பாகக் கவனித்து வருவர். அயல் மாநிலத்தில் வாழ்ந்த தமிழ்மகன் என்ற முறையில் அகலவிருந்து பார்த்து உங்கள் வளர்ச்சியை என் மனம் வாழ்த்தும். தளர்ச்சி இருப்பின் என் முகம் வாடும்.

அன்றுள்ள பல்கலைக்கழக அதிகாரிகள் அனுமதித்தால் நான் காலமான பின் என் உடல் சாம் பலின் இம்மியளவை தஞ்சை - தென்வளாகத்தின் ஒரு மூலையில் என் கண் முன்னே வளர்ந்த, காஞ்சி, உதகை மண்டப மையங்களில் வளரும் மரத்தடியிலும் புதைத்திட என் குழந்தைகள் அனுப்புவர், புதைத்திடுக. நீங்கள் அனைவரும் வளமுற வாழ வாழ்த்துகிறேன்’’.

- வ.அய்.சுப்ரமணியம்,

துணைவேந்தர்.

தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x