Published : 07 Sep 2016 09:23 am

Updated : 14 Jun 2017 18:55 pm

 

Published : 07 Sep 2016 09:23 AM
Last Updated : 14 Jun 2017 06:55 PM

பணக்கார, ஏழை மாநிலங்களிடையே பெரும் இடைவெளி!

உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில்தான் இருக்கிறது” என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் வலியுறுத்தியுள்ளார். அவர் இங்கே குறிப்பாக உணர்த்தியது ‘பொது சரக்கு, சேவை வரிகள் (ஜி.எஸ்.டி.) மசோதா’பற்றித்தான். இம்மசோதாவை அவரும் அவருடைய அதிமுக கட்சியும் ஆதரிக்கவில்லை. மாநிலங்களின் நிதி நிர்வாகச் சுதந்திரத்தில் இம்மசோதா குறுக்கிடுகிறது என்று அவருடைய கட்சி மட்டுமே நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்தது. அதற்கும் முன்னதாக அவர், மாநில அரசுகளுக்கு அதிகச் செயல்பாட்டுச் சுதந்திரம் வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். “இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடமிருந்து விலகிச் செல்லும் போக்காகவோ, கட்டுப்படுத்தப்பட வேண்டிய பிளவு மனப்பான்மையாகவோ கருதக் கூடாது, பல்வேறு மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட நாடாக இந்தியா பக்குவப்பட்டு வருவதன் பின்னணியில் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார்.

தமிழ்நாடும் அதன் முதலமைச்சரும் தங்களுடைய இறையாண்மையுள்ள உரிமைகள் குறித்தும், டெல்லியிலிருந்து திணிக்கப்படும் கொள்கைகள் குறித்தும் என்ன நினைக்கின்றனர் என்பதை இந்தப் பேச்சு தெளிவாக உணர்த்துகிறது. அரசியல்ரீதியாகத் தனக்கு ஆதாயம் ஏற்படுவதற்காக ஜெயலலிதா இப்படிப் பேசியிருக்கிறார் என்று இதைத் தள்ளிவிடவே தோன்றும். இந்தியாவின் பொருளாதாரப் பன்முகத் தன்மையைப் பொறுத்தவரை ஜெயலலிதா சரியாகவே சொல்லியிருக்கிறார். இந்தியாவின் 12 பெரிய மாநிலங்களின் நபர்வாரி நிகர உற்பத்தி மதிப்புத் தரவுகளை 1960 முதல் 2014 வரையிலான காலத்துக்குத் திரட்டி, ஒப்பு நோக்கியபோது இது நிரூபணமானது. இந்த 12 பெரிய மாநிலங்களில்தான் இந்தியாவின் 85% மக்கள் வசிக்கின்றனர். உலகின் வேறு எந்தக் கூட்டாட்சி நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் மட்டுமே மாநிலங்களுக்கிடையில் பொருளாதார அந்தஸ்தில் மிக மிக அதிகமான வேறுபாடு காணப்படுகிறது. பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் என்று ஜெயலலிதா கோருவது நியாயமே என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.


மாநிலங்களின் தர வரிசை

1960-ல் மேற்கு வங்கத்தில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.390 ஆக இருந்தது. அதே ஆண்டில் தமிழ்நாட்டில் ஒரு சாமானியரின் ஆண்டு வருமானம் ரூ.330. 2014-ல் ஒரு சாமானிய மேற்கு வங்கக் குடிமகனின் ஆண்டு வருவாய் ரூ.80,000. தமிழ்நாட்டிலோ அது ரூ.1,36,000. 1960-ல் ஏழை மாநிலங்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு 2014-ல் பணக்கார மாநிலங்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. தென் மாநிலங்களில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகியவை ஏழ்மை நிலையிலிருந்து பணக்கார நிலைக்கு வெகுவேகமாக முன்னேறின. அதே வேளையில், மேற்கு வங்கமும் ராஜஸ்தானும் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்து வெகு வேகமாகக் கீழே சரிந்தன. இந்த 12 மாநிலங்களில் பெருவாரியான மாநிலங்கள் 1960-ல் கிட்டத்தட்ட ஒரே இடத்தில்தான் இருந்தன. அதற்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் இம்மாநிலங்களில் சில தீவிரமான முயற்சிகள் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டதால், தர வரிசைப் பட்டியலில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

அதில் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால், மாநிலங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளின் நிலையும், போக்கும்தான். 1960-ல் பணக்கார மாநிலங்கள் பட்டியலிலிருந்த முதல் 3 மாநிலங்கள், பட்டியலின் கீழ் வரிசையில் இருந்த கடைசி 3 மாநிலங்களைவிடச் சராசரியாக 1.7 மடங்கு செல்வ வளம் மிக்கதாக இருந்தன. 2014-ல் இந்த இடைவெளி கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. முதல் 3 இடங்களில் இருந்த மாநிலங்கள், பட்டியலின் கடைசியில் இருந்த 3 மாநிலங்களைவிட மூன்று மடங்கு செல்வ வளத்துடன் இருந்தன.

1960-ல் பணக்கார மாநிலமான மகாராஷ்டிரம், ஏழை மாநிலமான பிஹாரை விட இரண்டு மடங்கு செல்வ வளம் கொண்டிருந்தது. 2014-ல் பணக்கார மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கேரளம், பிஹாரைவிட 4 மடங்கு செல்வ வளம் கொண்டிருந்தது. ஏழை மாநிலத்தைவிட பணக்கார மாநிலம் 4 மடங்காக இருப்பது உலகத்திலேயே அதிக அளவாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனம் ஆகியவற்றில் அந்த மாநிலங்களுக்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வு 2 மடங்கு அல்லது 3 மடங்குதான் அதிகமாக இருந்தது. இந்தியாவில் இந்த ஏற்றத்தாழ்வு வளர்ந்துகொண்டே போவதைத்தான் எமது ஆய்வுகள் உணர்த்தின. நாட்டின் வளம் பெருகப் பெருக மாநிலங்களுக்கு இடையிலான செல்வ வேறுபாடுகள் குறைந்துவிடும் என்ற கருத்துக்கு மாறான நிகழ்வுகளே இந்தியாவில் இடம்பெற்று வருகின்றன.

மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டு

பணக்கார மாநிலங்களுக்கும் ஏழை மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளியில், அமைப்புரீதியாகவே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு 1990 என்பது குறிப்பிடத்தக்கது. 1960 முதல் 1990 வரையிலான 30 ஆண்டுக் காலத்தில் செல்வ வளத்தில் பட்டியலின் முதல் 3 இடங்களில் இருந்த மாநிலங்கள், கடைசியாக இருந்த 3 மாநிலங்களைவிட இரண்டு மடங்கு பணக்கார நாடுகளாகத் தொடர்ந்து நீடித்தன. அதற்குப் பிறகு, 1990 முதல் 2015 வரையிலான காலத்தில் பணக்கார மாநிலங்களுக்கும் பட்டியலில் கடைசியாக இருந்த 3 மாநிலங்களுக்கும் இடையிலான செல்வ வளத்தின் வேறுபாடு இரட்டிப்பாகிவிட்டது. ‘1990-க்கு முன்னால்’, ‘1990-க் குப் பின்னால்’ என்று அடையாளப்படுத்தும் வகையில், இந்தியாவின் பொருளாதாரப் பன்முகத்தன்மை வரலாற்றில் இரு வேறு சகாப்தங்கள் ஏற்பட்டுவிட்டன. உலகம் முழுவதுமே வழக்கம் என்னவென்றால், ஏழை மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி கண்டு பணக்கார மாநிலங்களுக்கு இணையாக வந்துவிடுவதுதான். இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் பணக்கார மாநிலங்களுக்கும் வறிய மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு குறைவதற்குப் பதிலாக வலுவாக, நிரந்தரமாக அதிகமாகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால், பணக்கார மாநிலங்கள் மேலும் பணக்கார மாநிலங்களாகத்தான் ஆகும் என்று தெரிகிறது. மகாராஷ்டிரத்தில் இப்போது பிறக்கும் குழந்தை வளர்ந்து பெரியவானாகும்போது, பிஹாரில் இப்போது பிறக்கும் குழந்தையைவிட 4 மடங்கு பணக்காரனாகியிருக்கும்.

காரணங்கள் பல

பணக்கார மாநிலங்களின் செல்வ வளத்துக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த மாநிலங்களில் நிலவும் அரசியல் முதிர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் போன்றவை அவற்றில் சில. இவ்வாறு சில காரணங்களை நம்மால் கூற முடிந்தாலும், இவைதான் காரணம் என்று நிரூபிக்க இயலாது. அரசியல், மாநிலத்தின் தலைமை, கொள்கைகள், தொழிலாளர்களின் தொழில் திறன், அதிர்ஷ்டம் என்ற பல்வேறு அம்சங்களின் கூட்டுக் கலவையினால்தான் இப்படிப்பட்ட வளர்ச்சி ஏற்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும், பணக்கார மாநிலங்களின் முன்னுரிமை, ஏழை மாநிலங்களின் முன்னுரிமையைவிட வித்தியாசமானதாகத்தான் இருக்கும். இந்தியாவின் கலாச்சார பன்மைத்தன்மையும் அரசியல் பன்மைத்தன்மையும்கூட நன்றாக நிலைபெற்றுவிட்ட உண்மையான காரணிகள். இதைப் போன்றதுதான் பொருளாதாரப் பன்மைத்தன்மையும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது.

கலாச்சாரப் பன்மைத்தன்மைதான் சில மாநிலங்களை வளர முடியாமல் பின்னுக்கு இழுக்கும் காரணமாக இருக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குத் தொழிலாளர்கள் குடிபெயர முடியாமல் தடுப்பதும் இதுதான். இந்தி மட்டுமே பேசத் தெரிந்த, மூன்று வேளையும் கோதுமைச் சப்பாத்தியை முக்கிய உணவாகக் கொண்டிருக்கும் பிஹார்வாசியால் தமிழ் மட்டுமே அதிகம் பேசிக்கொண்டிருக்கும், அரிசிச் சோறு சாப்பிடும் தமிழ்நாட்டுக்கு வேலை தேடிச் செல்வது கலாச்சாரரீதியாகக் கடினமான முயற்சி. மாநிலங்களின் பொருளாதாரத் தேவைகளும் வித்தியாசமானவை, முன்னுரிமைகளும் வெவ்வேறானவை; இந்த நிலையில் டெல்லியிலிருந்து நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான நிதிக் கொள்கை, தொழில் கொள்கை என்று திணிப்பது காலத்துக்கு ஒவ்வாத செயலாகிவிடும். பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் என்று தான் கோருவது பிரிவினைப் போக்கு அல்ல என்று ஜெயலலிதா தன் உரையில் குறிப்பிட்டிருந்தாலும், வெவ்வேறு விதமான பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளை ஒரே சந்தையில் வைத்துச் சமாளிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து சில பாடங்களை நாமும் படிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தைவிட இந்திய மாநிலங்களின் பின்னணியும் பன்மைத் தன்மையும் ஆழமானவை, அகலமானவை, நிச்சயம் வெவ்வேறானவை.

(பிரவீண் சக்ரவர்த்தி, விவேக் தேஹேஜியா இருவரும் மும்பையில் உள்ள அரசியல், பொருளாதாரக் கல்வி அமைப்பைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள்.)

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.


பணக்காரஏழை மாநிலங்கள்பெரும் இடைவெளி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author