

மனோகர் பாரிக்கர், பாதுகாப்புத் துறை
ஆரம்பத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் இருந்த இத்துறை மனோகர் கைகளுக்கு வந்த பின் சுறுசுறுப்பானது. பல்லாண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த ‘ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத் திட்ட’த்தை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறார். முதல் தவணையாக ரூ.1,465 கோடி தரப்பட்டுள்ளது. ராணுவத்துக்குத் தேவைப்படுவதை இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கை காரணமாக மட்டும் ரூ.49,300 கோடியை மிச்சப்படுத்தியிருக்கிறார். ராணுவத்துக்குத் தேவைப்படும் ஜீப்புகள், லாரிகள், கவச வாகனங்கள் போன்றவை இந்தியாவிலேயே உள்ள தனியார் பெருநிறுவனங்கள் மூலமாகக் கொள்முதல் செய்ய வழிவகுத்திருக்கிறார். அவசரத் தேவைக்கு பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேர் ரக போர் விமானக் கொள்முதலை முடித்திருக்கிறார். போர் விமானங்கள், சிறு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சரக்கு விமானங்கள் போன்றவற்றை இந்தியாவில் உள்ள அரசுத் துறை, தனியார் துறை நிறுவனங்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கில் தயாரிக்க உடன்பாடுகளைத் தயாரித்துவருகிறார். இந்தியக் கடல் படைக்குத் தேவைப்படும் போர்க் கப்பல்களை கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட கப்பல் கட்டும் தளங்களில் தயாரிக்க ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. ராணுவத்துக்கான ஆராய்ச்சி, வளர்ச்சி மன்ற ஆய்வுக் கூடங்கள் அதிக நிதி ஒதுக்கீட்டில் நவீனப்படுத்தப்பட்டுவருகின்றன. ராணுவ வீரர்களின் உடை, கவசங்கள், தொலைநோக்கிகள், எதிரிகளின் இருப்பைக்காட்டும் தொலையுணர் நவீனக் கருவி, பனிமலையில் வீரர்களுக்குத் தேவைப்படும் கவசம், கூடாரங்கள், வாகனங்கள் போன்றவையும் வெளிநாட்டு ஒத்துழைப்புடன் இந்தியாவிலேயே தயாரி்க்கப்பட திட்டங்களைத் தயாரித்துவருகிறார்.
ராதா மோகன் சிங், வேளாண் துறை.
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 7% ஆக இருக்கும் சூழலில்கூட விவசாயத் துறையின் வளர்ச்சி 1%-க்கும் குறைவாகவே இருக்கும் சூழலில் அதற்கான அமைச்சரை எப்படி மதிப்பிடுவது? நாட்டின் விளைநிலங்களில் 35%-க்கும் மேல் வறட்சியின் பிடியில் தவிக்கிறது. வறட்சி நிவாரணப் பணிகளை நீதிமன்றங்கள் தலையிட்டு ஒருங்கிணைக்கும் நிலையில் இருக்கிறது. மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தாங்களாகவே தங்கள் பகுதிக்குத் தேவைப்படும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களையும் பாசன வாயக்கால் வசதிகளையும் செய்துகொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள வேளாண் அமைச்சர்களைக் கூட்டி துடிப்பான செயல்திட்டங்களை வகுக்கத் தவறிவிட்டார். யூரியா உரப் பயன்பாட்டைக் குறைத்து இதர உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கான பணிகளையும் சரியாக ஒருங்கிணைக்கவில்லை. 2016-17-ல் கோதுமை விளைச்சல் 880 லட்சம் டன், அரிசி 1050 லட்சம் டன், இதர தானியங்கள் 417 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய கோதுமையே 10 லட்சம் டன் இறக்குமதி செய்ய வேண்டும் என்று தெரிகிறது. பருப்பு மற்றும் கோதுமை, நெல் விளைச்சல் குறைவுக்கு முக்கியக் காரணம் சீனா, பிரேசில் போன்ற நாடுகளைவிட நாம் இரண்டு மடங்கு தண்ணீரைப் பயன்படுத்துவதுதான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தக் குறைகளைக் களைய வேளாண் அமைச்சகம் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்றன.