

கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் இன்றைய நாளில் இயேசு உலகிற்கு ஏன் வந்தார் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். “கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்று கூறுகிறார் புனிதப் பவுலடியார். 'பிறந்தார்' என்று கூறாமல் 'வந்தார்' என்று கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
இந்த உலகில் தினமும் ஏராளமானோர் பிறக்கிறார்கள். இயேசுவோ பிறந்தவரல்ல, வந்தவர். ஒவ்வொருவரும் பிறந்ததில் இருந்துதான் வாழ ஆரம்பிக்கிறார்கள். அல்லது தாயின் கருவில் இருந்தே வாழ்க்கை தொடங்குகிறது என்றும் சொல்லலாம்.
ஆனால், இயேசு கிறிஸ்தின் பிறப்பு என்பது அவருடைய வாழ்க்கையின் ஆரம்பமல்ல. அவர் ஏற்ெகனவே இருந்தவர். பிறப்பின் மூலமாக அவர் இந்த உலகத்திலே வந்தவர்.
கிறிஸ்துமஸ் என்பது ஒரு சாதாரண மனிதனின் பிறப்பையல்ல, கடவுளே மனிதனாக இந்த உலகத்திற்கு வந்ததைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒரு சாதாரண மனுஷனின் பிறப்பைப் போலத் தோன்றினாலும், அது எல்லாம் வல்ல கடவுளின் உலகப் பிரவேசம்! இது எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. வேதாகமம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே இவரது பிறப்பையும், அதன் தொடர்பான பல விவரங்களையும் முன்னறிவித்திருக்கிறது.
இயேசு கிறிஸ்து எந்த ஊரில் பிறப்பார் என்பதை அவர் பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மீகா என்ற தீர்க்கதரிசி முன்னறிவித்தார். ஒரு கன்னி பெண்ணின் மூலமாக இயேசு பிறந்தார் என்றும் வேதம் கூறுகிறது. இவருடைய பிறப்பில் ஆணுக்குப் பங்கில்லை. மாறாக, தூய ஆவியானவரின் உதவியால் கன்னிப் பெண்ணாகிய மரியாள் கர்ப்பந்தரித்தாள். இப்படி ஒரு கன்னிப் பெண் வயிற்றில் மாம்சத்தில் உருவாகி இவர் பிறப்பார் என்பதை ஆதியிலே “இவர் ஒரு ஸ்திரீயின் வித்தாகப் பிறப்பார்” என்று சொன்னதன் மூலம் கடவுள் அறிவித்துவிட்டார். (ஆதியாகமம் 3:15).
இப்படி இவருடைய அற்புதப் பிறப்பை மக்கள் காலாகாலமாய் எதிர்பார்த்து வந்தார்கள். அதுமட்டுமல்ல, இயேசு பிறந்தபோது, குறிப்பாக யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா தீர்க்கதரிசி சொன்னதை அறிந்து வைத்திருந்த வேத அறிஞர்கள், ஏரோது ராஜாவுக்கும், இயேசுவைப் பணிந்து, தொழுது கொள்ளத் தேடி வந்த ஞானிகளுக்கும் அவர் எங்கே பிறந்திருக்கக் கூடும் என்ற தகவலைத் தெரிவித்தார்கள்.
ஒரு நட்சத்திரம் அவர்களுக்கு முன்னால் சென்று, இயேசு கிறிஸ்து பிறந்த இடம் வரை அவர்களை அழைத்துச் சென்றது என்ற அற்புதத்தையும் வேதத்தில் வாசிக்கிறோம். மேலும் ஒரு தேவதூதனே மேய்ப்பர்களுக்குக் காட்சியளித்து, இயேசு பிறந்த செய்தியைக் கூறியது மட்டுமல்லாமல், இன்னும் பல தேவதூதர்கள் கூட்டமாய்த் திரண்டு வந்து, 'உன்னதத்தில் இருக்கிற கடவுளுக்கு மாட்சியும், பூமியிலே சமாதானமும், மனுஷன்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, கடவுளைத் துதித்தார்கள்’ (லூக்கா 2:14).
இப்படி இந்தச் செய்தியைக் கேட்ட மேய்ப்பர்கள் இயேசு கிறிஸ்து பிறந்த செய்தியைப் பிரபலப்படுத்தினார்கள். இந்தக் காரியங்களெல்லாம் இவர் பிறப்பு சாதாரணமானதல்ல, கடவுளே மனுஷ ரூபத்திலே இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
ஆகவே கிறிஸ்துமஸ் என்பது ஒரு மனிதன் இந்த உலகத்தில் பிறக்கும் ஒரு சாதாரணச் சம்பவமல்ல. அனைத்தையும் படைத்த கடவுளே மனுஷ ரூபம் எடுத்து, ஒரு கன்னிப் பெண்ணின் மூலமாக இந்த உலகத்தில் பிரவேசித்த இந்த ஆச்சரியமான நிகழ்வைத்தான் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகிறோம். ஆக, அவர் உலகத்தில் பிறந்தவர் மட்டுமல்ல, அவர் உலகத்திலே வந்தவர்!