

இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம், ஞானம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள 150 புதிய வீடுகளைத் தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் வைகோ, ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பின் காரணமாக அதை ரத்துசெய்துவிட்டார். அதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை சிந்திக்க வைக்கிறது. “தங்களது உரிமைக்காக, சுய கௌரவத்துக்காக ரத்தம் சிந்தி மடிந்து, தங்களைத் தாங்களே சுய சமாதியாக்கிக்கொண்டு பூமிக்குள் புதைந்து கிடக்கும் அந்த வீர மண்ணை வணங்கி, அந்த மாவீரர்கள் நடமாடிய இடங்களைப் பார்த்துச் சுவாசிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக என்னுள் இருந்தது” என்று அந்த அறிக்கையில் ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார். இது நல்ல விஷயம் அல்லவா! ரஜினியைப் போன்ற புகழ்மிக்க நடிகரை வைத்து இலங்கை அரசு ஆதாயம் தேடும் என்று திருமாவளவனே சொல்லியிருக்கிறார். எனில், தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க ரஜினி வேண்டுகோள் விடுத்தால், அதற்கு இலங்கை அரசு செவிசாய்க்கும் என்றே எடுத்துக்கொள்ளலாமா?
சரி, இலங்கைப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் திருமாவளவன், வைகோ உள்ளிட்டோர் செய்தது என்ன? அறிக்கைப் போராட்டம்தானே? திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி வைத்தார்கள். இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டால்தான் ஆதரவு தருவோம் என்ற அடிப்படையிலா கூட்டணி உடன்பாடு செய்துகொண்டார்கள்?
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். போராட்டம் என்பது தீர்வு சார்ந்தாக இருக்க வேண்டும். அதற்கு மக்கள் ஆதரவு தேவை. அது இந்த விஷயத்தில் அவர்களுக்கு இருக்கிறதா?
“மக்களை மகிழ்விப்பதுதான் என்னுடைய கடமை. அடுத்த முறை கலைஞன் என்ற முறையில் நான் இலங்கை சென்றால், அதை அரசியலாக்கி என்னைத் தடுக்காதீர்கள்” என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். அதன் அர்த்தங்கள் பல.
திருமாவளவன், கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை அதிபர் ராஜபக்சவைச் சந்தித்த பிறகு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டனவா? சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சி வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை வைத்தது. அதன் பின்னர் புகை பிடிக்கும் காட்சியில் ரஜினி நடிப்பதில்லை. இலங்கை போகக் கூடாது என்றார்கள். அவர் போகவில்லை. பதிலுக்கு அந்தக் கலைஞன் அரசியல் தலைவர்களிடம் ஏதாவது கோரிக்கை வைத்தால், அதை அவர்கள் ஏற்பார்களா? சம்பந்தப்பட்ட தலைவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
- ஜாசன், மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: jasonja993@gmail.com