தொழில்நுட்பமும் மனிதமும்!

தொழில்நுட்பமும் மனிதமும்!
Updated on
3 min read

| இயந்திரங்கள் 'புரோகிராம்' செய்யப்படலாம்.

மனிதர்களால் மட்டும்தான் அந்த வேலையைச் சரியாகச் செய்ய முடியும். |

மென்பொருட்கள் இப்போதெல்லாம் கவிதைகள், விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான கட்டுரைகள் முதல் வணிகச் செய்திகள் வரை எழுதத் தொடங்கிவிட்டன. ஐபிஎம் நிறுவனத்தின் வாட்ஸன் ரோபோ 'பாப்' இசைப் பாடல்களை எழுதுகிறது. ஊபர் நிறுவனம் நிஜமான நகரச் சாலைகளில் தானியங்கி கார்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. கடந்த மாதம், பிரிட்டனின் கிராமப்புறப் பகுதியில் ஆளில்லா விமான மூலம் ஒரு வாடிக்கையாளருக்குத் தனது முதல் பொதியை அனுப்பியிருக்கிறது அமேசான். இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் ட்ரம்ப் அதிபரானது மட்டும் சமூகத்துக்குத் தொந்தரவு தரும் செய்தி அல்ல என்று தோன்றும். அதிகமாகத் தொடந்தரவு செய்பவை நமது பணியிடங்களில் நடக்கும் விஷயங்களும், பொருளாதாரத்தில் நடக்கும் விஷயங்களும்தான். தொழில்நுட்பத்தின் தொடர் அணிவகுப்பு, இயந்திரங்கள் மற்றும் மென்பொருட்கள் காரணமாக நமது பணித்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதிவேகமாகச் சிந்திக்க வைக்கும் ஒரு புள்ளிக்கு நம்மை நகர்த்தியிருக்கிறது.

இந்த அதிவேக மாற்றத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதறாக, எனது ஆசானும் நண்பருமான டோவ் சீட்மேனுடன் அமர்ந்தேன். அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகள் புனிதப்படுத்தப்பட்டுவிட்ட பிறகு, நமது வழியில் முன்னேறிச் செல்ல அறிவியலையும் பகுத்தறிவையும் நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம் என்று சொன்ன சீட்மேன் இன்னொரு விஷயத்தையும் சொன்னார். "இந்தப் பகுத்தறிவின் யுகத்தை ஒரு சொற்றொடர் மூலம் படிமமாகச் சொல்வார் பிரெஞ்சு தத்துவவியலாளர் ரேன் டெகார்டே - 'சிந்திக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்'. "அவர் சொல்வது இதுதான் - உலகின் பிற விலங்குகளிலிருந்து நம்மை வேறுபடுத்திக்காட்டுவது சிந்திப்பதற்கான நமது திறன்தான்" என்றார் சீட்மேன்.

21-ம் நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சி என்பது அறிவியல் புரட்சியைப் போலவே விளைவின் அடிப்படை யிலானது என்று சொல்லும் சீட்மேன், "அது மிக ஆழமான ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல நம்மைக் கட்டாயப்படுத்துகிறது - இதற்கு முன்னர் நாம் கேட்டிராத அந்தக் கேள்வி: 'நுண்ணறிவு கொண்ட இயந்திரங்களின் யுகத்தில் மனிதராய் இருப்பதன் அர்த்தம் என்ன?"" என்கிறார். "மனித மனம் செய்யக் கூடிய வேலைகள்தான் அதெல்லாம். மனிதர்களால் காதலிக்க முடியும்; பரிவு காட்ட முடியும்; கனவு காண முடியும். பயம், கோபத்தின் அடிப்படையில் செயல்பட முடியும், ஆபத்தானவர்களாக முடியும். தங்களது உயர்ந்த நிலையில் மற்றவர்களுக்கு உத்வேகம் தரக்கூடியவர்களாகவும், நேர்மையாளர்களாகவும் இருக்க முடியும். இயந்திரங்களால் பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். ஆனால், மனிதர்களால் நம்பிக்கையின் அடிப்படையில் ஆழமான உறவுகளை உருவாக்க முடியும்" என்கிறார் சீட்மேன்.

எனவே, "நமது உயர்ந்த சுயசிந்தனை, 'சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்' என்பதிலிருந்து 'அக்கறை செலுத்துகிறேன், எனவே நான் இருக்கிறேன்; நம்புகிறேன், எனவே நான் இருக்கிறேன்; கற்பனை செய்கிறேன்; அதனால் நான் இருக்கிறேன். நான் அறம்சார்ந்தவன் எனவே நான் இருக்கிறேன். எனக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, எனவே நான் இருக்கிறேன். நான் நிதானித்து, பிரதிபலிக்கிறேன். அதனால் நான் இருக்கிறேன்' என்று மாற்றியமைக்கப்பட வேண்டும்" என்கிறார் அவர். எதிர்காலத்திலும் நமக்கு மனித உழைப்பு தேவைப்படும். இயந்திரங்களுடன் அசாதாரணமான பணிகளை மக்கள் தொடர்வார்கள். தொழில்நுட்பப் புரட்சி மனங்களுக்கும் மனங்களுக்கு இடையிலும் அதிக மதிப்பை உருவாக்க மனிதர்களுக்குத் தொழில்நுட்பப் புரட்சி அழுத்தம் தருகிறது என்று அவர் வாதிடுகிறார். ஒப்புக்கொள்கிறேன். இயந்திரங்களும் மென்பொருட்களும் பெரிய அளவில் மனித வாழ்வைக் கட்டுப்படுத்தும்போது, மனிதர்கள் தங்களுக்குள் இன்னும் அதிகமான உறவுகளைத் தேடத் தொடங்குவார்கள். எல்லாவற்றையும் நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஆனால், பழைய பாணியில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருக்கும், ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்வதன் மூலம்!

சீட்மேனின் கருத்துகள் தல்மூத் பழமொழியை எனக்கு நினைவுபடுத்தின, "இதயத்திலிருந்து வரும் விஷயம்தான், இதயத்துக்குள் செல்லும்." அதனால்தான், பெரிய அளவிலான தொழில்நுட்பக் கூறுகள் அடங்கிய பணிகளும் மனித இதயத்தால் மேலும் பலன் பெறும். வேகமாக வளர்ந்துவரும் அமெரிக்க நிறுவனங்களில் ஒன்றான 'பெயின்ட் நைட்', வயது வந்த மாணவர்கள் பானங்கள் அருந்தியபடி ஓவியம் கற்றுக்கொள்ள அனுமதிக்கும் நிறுவனமாக முன்னேறிவருகிறது. "வழக்குரைகள், ஆசிரியர்கள், தொழில்நுட்பத் தொழிலாளர்கள் போன்றவர்கள் பணி நேரம் முடிந்து 'பெயின்ட் நைட்' நிறுவனத்தில் படைப்பாற்றல் கொண்ட பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்கிறார்கள்" என்று 2015-ல் 'புளூம்பெர்க் பிஸினஸ்வீக்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கு ஓவியம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், வாரத்துக்கு ஐந்து இரவுகள் பணி புரிவதன் மூலம் ஆண்டுக்கு 50,000 டாலர்கள் சம்பாதிக்க முடியும் - இதயங்களுடன் இணைந்து பணிபுரிவதன் மூலம்!

மக்கள் விழுமியங்களை உருவாக்கும் பிரதான வழி மூலம் பொருளாதாரம் மீது முத்திரை விழும் என்று சுட்டிக்காட்டுகிறார் சீட்மன். 'ஹவ்: ஒய் வி டு எனிதிங் மீன்ஸ் எனிதிங்' எனும் புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறார். எனவே, "தொழில்நுட்பப் பொருளாதாரம் என்பது 'கைகளை'ப் பணிக்கு அமர்த்துவது தொடர்பானது; அறிவுசார்ப் பொருளாதாரம் என்பது மூளைகளைப் பயன்படுத்தும் பொருளாதாரம்" என்கிறார் அவர். தொழில்நுட்பப் புரட்சி நம்மை 'மனிதப் பொருளாதார'த்துக்குள் திணிக்கிறது. அது, இதயங்களைப் பணியமர்த்துவதன் மூலம் மதிப்பை உருவாக்குவதில் அதிகம் செயல்படுகிறது. உணர்வு, குணம், கூட்டுணர்வு போன்ற எல்லாப் பண்புகளையும் மென்பொருள் மூலம் 'புரோகிராம்' செய்துவிட முடியாது!

ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நிறுவனங்கள், பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழில்நுட்பத்திடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தங்கள் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசே கேட்டுக்கொண்டிருக்கிருப்பதில் ஆச்சரியமில்லை. 'எந்நேரமும் அலுவலகப் பணி' எனும் கலாச்சாரத்தை எதிர்கொள்ளும் முயற்சி இது! "தலைவர்கள், வணிகம், சமூகம் தங்களுக்குச் சாதகமாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள் ளலாம். ஆனால், மனிதத் தொடர்பை மையமாக வைத்து இதைச் செய்பவர்கள்தான் நிலைத்த வெற்றி பெறுவார்கள்" என்கிறார் சீட்மேன். "அடுத்து என்ன செய்ய வேண்டும் இயந்திரங்கள் 'புரோகிராம்' செய்யப்படலாம். ஆனால், மனிதர்களால் மட்டும்தான் அந்த வேலையைச் சரியாகச் செய்ய முடியும்!"

- 'தி நியூயார்க் டைம்ஸ்' | தமிழில் சுருக்கமாக:வெ.சந்திரமோகன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in