

சென்னையை நோக்கிப் பலரையும் ஈர்க்கும் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமானது இசையும் நாட்டியமும். இந்தப் பட்டியலில் சென்னைப் புத்தகக் காட்சியும் இப்போது இணைந்திருக்கிறது. 38-வது ஆண்டாகப் புத்தகக் காட்சி நடக்கிறது என்றாலும், கடந்த 15 ஆண்டுகளாகத்தான் அது பெருந்திரளான வாசகர்களை ஈர்த்துவருகிறது. பதிப்பகங்களின் எண்ணிக்கை, நூல்களின் எண்ணிக்கை, வாசகர்களின் எண்ணிக்கை ஆகியவை படிப்படியாக உயர்ந்து, இன்று பிரமிக்கத்தக்க நிலையை எட்டியிருக்கின்றன. இது தமிழின் வளர்ச்சியையும் வீச்சையும் உணர்த்துகிறது.
ஆரோக்கியமான சலனங்களும் அபஸ்வரங்களும்
கண்காட்சியின் பிரமிக்கத் தக்க வளர்ச்சி சூழலில் ஆக்கபூர்வமான சலனங்களை ஏற்படுத்தியுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கின்றன. முக்கியமான பல புத்தகங்கள் ஆண்டுக் கணக்கில் விற்றுத் தீராமல் வாசகர்களுக்காக ஏங்கியிருந்த நிலை இன்று இல்லை. புத்தகங்களைக் கவனப்படுத்த இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் பெரும் பங்காற்றுகின்றன. புத்தகக் குவியல்களில் சிக்கிப் பல முக்கியமான புத்தகங்கள் கவனம் பெறாமல் போவது இப்போதும் நடக்கிறது என்றாலும், பதிப்பாளரோ எழுத்தாளரோ நினைத்தால், அந்த நூலைப் பிரபலப்படுத்த இன்று பல வழிகள் உள்ளன.
ஆரோக்கியமான இந்த மாற்றங்களுக்கு மத்தியில் கவலை தரும் சில போக்குகளும் இருக்கின்றன. விற்பனை அதிகரித்துவிட்ட நிலையிலும் பல பதிப்பகங்கள் காப்புரிமைத் தொகை தராமல் எழுத்தாளர்களைச் சுரண்டிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் மீது கவனம் ஈர்ப்பதற்காக நடத்தப்படும் கூட்டங்கள் திரைப்படக் கவர்ச்சி, மலினமான பரபரப்பு, நட்சத்திர மதிப்பு ஆகியவற்றாலேயே அதிக கவனம் பெறுகின்றன. இந்த அதிரடிகளுக்கு மத்தியில் நூல்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகளின் முக்கியத்துவம் தேவையற்ற சங்கதியாகிவருகிறது. தீவிரமானதும் உண்மையானதுமான இலக்கிய உரையாடல்களையும் சந்திப்புகளையும் மீட்டெடுக்க மெய்யான இலக்கிய ஆர்வலர்கள் போராட வேண்டியிருக்கிறது.
நூல்களின் பெருக்கமும் வாசகர்களின் பெருக்கமும்
நூல்களின் வெள்ளம் பெருகும் அளவுக்கு வாசகர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால், அந்த அளவுக்கு வாசிப்புப் பெருகியிருக்கிறதா என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. வாசிப்பதற்காகத்தான் புத்தகங்கள் வாங்கப்படுகின்றன என்ற நியாயமான அனுமானத்தின் அடிப்படையில் மட்டும் இதை அணுக முடியாது. எனில், வாசிப்பை அளவிடுவதற்கான அளவுகோல் என்ன எனும் கேள்வி எழுகிறது. கேளிக்கை, பொழுதுபோக்கு என்பவற்றைத் தாண்டி அறிவை வளர்ப்பதும் விழிப்புணர்வைக் கூர்மைப்படுத்துவதும் வாசிப்பின் முக்கியமான பலன்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
அறிவின் பெருக்கம் என்பதைத் தாண்டி நுண்ணுணர்வைக் கூர்மைப்படுத்தும் செயலையும் வாசிப்பு ஆற்ற முடியும். சிந்தனையிலும் நுண்ணுணர்வின் தளங்களிலும் வாசிப்பின் மூலம் ஏற்படுத்தப்படும் ஆழமான சலனங்கள் மனிதர்களின் அடிப்படையான போக்குகளிலும் வாழ்வுகுறித்த அணுகுமுறையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. சக மனிதர்கள் மீதும் வாழ்வின் மீதும் அவர்களுக்கு இருக்கும் உறவின் மீதும் ஆக்கபூர்வமான தாக்கங்களைச் செலுத்தக்கூடியவை.
நூல்கள் பெருகுவதும் வாசகர் எண்ணிக்கை அதிகரிப்பதும் இத்தகைய ஆழமான மாற்றங்களைக் காலப்போக்கிலேனும் ஏற்படுத்தும் என நம்பவே எழுத்தாளர்கள் விரும்புவார்கள். அந்த மாற்றங்களின் அறிகுறிகளைத் தமிழ்ச் சமூகத்தில் இன்று அதிகம் காண முடியவில்லை. எனினும், விரைவில் அவை உருவாகும் என்னும் நம்பிக்கைக்கு உரம் சேர்க்கும் விதமாக சென்னைப் புத்தகக் காட்சி எல்லா விதங்களிலும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையோடு அதை வரவேற்போம்.