இனி இவர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!- ஐசிஐசிஐ தொழில்திறன் அகாடெமி வழிகாட்டுகிறது

இனி இவர்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!- ஐசிஐசிஐ தொழில்திறன் அகாடெமி வழிகாட்டுகிறது
Updated on
4 min read

60 வயது மதிக்கத்தக்க அந்த முதியவரைச் சந்தித்தபோது, அவர் பார்க்கும் வேலைதான் அவருக்கு முதிய தோற்றத்தை அளித்துள்ளது என்பது புரிந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அமரனார் கிராமத்தைச் சேர்ந்த பகவான் சஹாய் காதிக்கிற்கு வயது 50-தான் என்பது அவரிடம் பேசியதிலிருந்து புரிந்தது.

முகம் முழுக்கச் சுருக்கமும், முழங்காலில் வலியும்தான் இந்த வேலை தனக்குத் தந்ததாகக் கூறிய அவர், விரைவிலேயே இந்த வேலையை விட்டுவிடப் போவதாகக் கூறினார். தனது மகன் விக்கி-க்கு வேலை கிடைத்துவிட்டது என்று அவர் மகிழ்ச்சி பொங்கக் கூறினார். மாதம் ரூ. 7,500 சம்பளம் கிடைக்கும் என்று அவர் உற்சாகத்துடன் கூறினார்.

கடந்த மாதம் ஜெய்ப்பூரில் ஐசிஐசிஐ திறன் மேம்பாட்டு அகாடமி நடத்திய 12 வார பயிற்சியை சிறப்பாக முடித்த 19 மாணவர்களில் விக்கியும் ஒருவன். அவருக்கு ஜெய்ப்பூரில் வேலை கிடைத்துவிட்டது. இதைவிட அவனது தாயாருக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்த விஷயம் என்னவெனில் வழக்கமான ரொட்டி மற்றும் மிளகாய் தொக்கு உணவிலிருந்து மாறுபட்டு 12 வார காலமும் விக்கிக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைத்தது என்பதுதான்.

வயிறு நிறைய உணவு

இந்திய இளைஞர்களுக்கு ஸ்திரமான வாழ்வாதாரத்தை அளிப்பதோடு அவர்களின் சம்பாதிக்கும் திறனை வளர்ப்பது அகாடமியின் முக்கிய நோக்கமாகும். இந்த அகாடமிக்கு வந்து சேர்ந்த 150 இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சியோடு உணவு வழங்குவதும் முக்கியமானதாக இருந்தது.

இந்த அகாடமியில் தொழில் திறன் பயிற்சி முடித்த முதலாவது பிரிவு மாணவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியே வந்தனர். இதேபோன்ற பயிற்சி அளிக்கும் அகாடமிக்களை சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், புணே, கோல்காபூர், பாட்னா, குவஹாத்தியில் மார்ச் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5,000 இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பாடத்திட்டம் என்ஐஐடி, புளூஸ்டார், ஷ்னிடர் எலெக்ட்ரிகல், டாலி மற்றும் கிராம்டன் கிரீவ்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அகாடமியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் இந்நிறுவனங்களின் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும் உள்ளது.

இந்த 12 வார திறன் மேம்பாட்டு பயிற்சியில் எலெக்ட்ரிகல், மோட்டார் பம்ப் ரிப்பேர் செய்வது, ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி ரிப்பேர் மற்றும் நிர்வாகம், விற்பனை மற்றும் சந்தை திறன், வெப் டிசைனிங், அலுவலக நிர்வாகம் மற்றும் அடிப்படையான அக்கவுண்டிங், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட பல விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. அலுவலக நிர்வாக பயிற்சி முடித்தவர்ளுக்கு சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் கடுமையான கிராக்கி இருப்பதும் உணரப்பட்டுள்ளது.

திறன் வளர்ப்பு மற்றும் ஒழுக்கம்

மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு அவர்களிடம் பொதிந்துள்ள திறனை வளர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முதல் இரண்டு வாரங்களில் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். வாடிக்கையாளரிடம் எப்படிப் பேச வேண்டும், எவை மரியாதையான வார்த்தைகள் என்பதைக் கற்றுத் தருகிறோம்.

புறக்கணிக்கப்பட்ட பிரிவிலிருந்து தாங்கள் வருவதால் யாரிடமும் முரட்டுத்தனமாக பேசக் கூடாது என்பது கற்றுத் தரப்படுவதாக அகாடமியில் உள்ள ஆசிரியர் கூறினார். விடுதியில் உள்ள மாணவர்கள் காலை 6 மணிக்கு கட்டாயம் எழுந்திருக்க வேண்டும். முகச் சவரம் செய்து குளித்து, தூய ஆடைகளை அணிந்து 7 மணிக்கு காலை உணவருந்தத் தயாராக வேண்டும்.

அனைத்து மாணவர்களும் காலை 8 மணிக்கு வகுப்பறைக்குள் இருக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதி அளிக்கப்படுவதோடு இங்கு அனைவருக்கும் சத்து நிறைந்த சைவ உணவு வழங்கப்படுகிறது. ஒரு வாரத்தில் அவர்கள் உடல் திறன் மேம்படுவதோடு பயிற்சியைக் கற்க அவர்கள் தயாராகிவிடுகின்றனர். இவர்களுக்கு எளிய ஆங்கில வார்த்தைகளும் கற்றுத் தரப்படுகின்றன.

ஏழை மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும்போதே அவர்களில் சிறந்த மாணவர்களுக்கு அலுவலக நிர்வாகம், வெப் டிசைனிங் போன்ற பயிற்சிகளும் தரப்படுகின்றன. இங்குள்ள மையத்தில் வீட்டிலிருந்து வந்து படிக்கும் மாணவர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளங்கலை பட்டம் பெற்றவர்கள்.

ஆனாலும் அவர்கள் பெற்ற பட்டம் அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தரவில்லை என்பதுதான் உண்மை. இதுவரை எவருக்கும் இந்த அகாடமியில் பயிற்சி அளிப்பது மறுக்கப்படவில்லை. இந்த அகாடமி தொடங்கப்பட்டதன் நோக்கமே உரிய சூழலில், வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் அனைவராலும் சாதனை படைக்க முடியும் என்பதே ஆகும்.

பாலின பாகுபாடில்லை

ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ள முன்வந்துள்ளனர். அதாவது திறன் மேம்பாட்டில் மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை தேர்வு செய்கின்றனர். அதேசமயம் மாணவிகள் வெப் டிசைனிங் மற்றும் அலுவலக நிர்வாகத்தைத் தேர்வு செய்கின்றனர். கோவையில் உள்ள அகாடமியில் இந்த முறைகளையும் தகர்த்துவிட்டனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆர் காவ்யா என்ற மாணவி, எலெக்ட்ரிகல் சார்ந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளார். எலெக்ட்ரிகல் என்ஜினியராக வேண்டும் என்பது அவர் ஆசை, ஆனாலும் குடும்ப சூழல் அதற்கு அனுமதிக்கவில்லை என்கிறார். ஆனால் அவரது ஆசையை ஓரளவு பூர்த்தி செய்துள்ளது இந்த பயிற்சி. இப்போது அவர் வளர்ந்துவரும் எலெக்ட்ரீசியன்.

அகாடமியில் பயிற்சி முடித்து பணியில் சேரும் முதல் பிரிவு மாணவிகளுக்கு தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சாந்தா கொச்சார். ஜெய்ப்பூரில் நடந்த பயிற்சியில் ஹரியாணா மற்றும் பிஹாரைச் சேர்ந்த சிலரும் பங்கேற்றது தன்னை நெகிழ்ச்சியடையச் செய்ததாக கொச்சார் குறிப்பிட்டார்.

சமூக அக்கறையுள்ள ஒரு நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஐசிஐசிஐ வங்கி இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது. வாய்ப்புகளை அதற்குத் தகுந்த சூழலில் நமது இளைஞர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் இத்தகைய அகாடமியைத் தொடங்க திட்டமிட்டு அதைச் செயல்படுத்தி வருகிறது.

வேலை வாய்ப்பு

ஜெய்ப்பூரில் முதல் பிரிவில் பயிற்சியை முடித்த 146 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. வங்கி மற்றும் வங்கியின் வாடிக்கையாளராக உள்ள நிறுவனங்கள், அகாடமியில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் தங்களது தொழிலகங்களில் இவர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளன. இவர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ. 6,000 ஆகும். தொழில்திறன் பெற்றவர்களுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை சம்பளம் கிடைத்துள்ளது.

புளூஸ்டார் ரெப்ரிஜிரேஷன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் பயிற்சி மையத்தில் ஏசி மெக்கானிக் படித்த 7 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததோடு மேலும் பலர் தங்களுக்குத் தேவைப்படுவதாகக் கூறியுள்ளனர் என்று புளூஸ்டார் நிறுவன ஆலோசகரும் ஆசிரியருமான ஆர்.கே. சர்மா தெரிவித்தார்.

காய்கறிகள், பழங்களை பாதுகாக்கும் குளிர் பதன கிடங்குகளைக் காக்கும் பணியில் இத்தகைய பயிற்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இவர்களது மாத சம்பளம் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை உயரும் என்று குறிப்பிட்டார். ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டுகளில் ஏசி மெக்கானிக்குகளுக்கு அதிக தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுத் தரத் தேவையில்லை. மேலும் இவர்கள் வாடிக்கையாளர்களிடம் மிகவும் கனிவாக பேசுவது வியாபாரத்துக்கு சாதகமாக உள்ளது என்று ஷியாம் ஏர்கான் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மனோஜ் சர்மா குறிப்பிட்டார்.

பயிற்சி முடித்த 146 பேரில் 13 பேருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை. அவர்கள் மீண்டும் இங்கு வந்து தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வந்துள்ளனர். இவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க கடனுதவி அளிப்பது குறித்து வங்கி பரிசீலித்து வருகிறது.

இங்கு எலெக்ட்ரிகல் பயிற்சி மேற்கொள்ள வந்துள்ள ராம்ஜிபுரா கிராமத்தைச் சேர்ந்த ஹனுமன் சாகிப் பைர்வானுக்கு வயது 19. ஆனால் அவன் மீது உள்ள குடும்பச் சுமைகளோ அதிகம். தந்தை வாங்கிய கடனை அடைத்தாக வேண்டும். 2 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் வருமானமும் போதவில்லை. பெரிய குடும்பத்தைக் காக்க தினசரி கூலி வேலைக்குச் செல்கிறார் இவரது தந்தை. இரண்டு சகோதரர்கள் மற்றும் 5 சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு உள்ளது. இதில் நான்கு சகோதரிகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் வரதட்சிணையாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை தரப்பட்டதாம். தான் இங்கு பயிற்சி பெற வந்தது தனது தந்தைக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளாகக் கூறுகிறார் ஹனுமன் சாகிப்.

ஹரியாணா கிராமத்தைச் சேர்ந்த திவேஷ் குமாரின் தந்தை சிகை அலங்காரம் செய்பவர். மாதம் ரூ. 5 ஆயிரம் கிடைத்தால் அதிகம். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர். மிகவும் கஷ்டப்பட்டு பிளஸ் 2 படித்துள்ள இவர் அகாடமியில் பயிற்சியோடு வயிறார உணவு கிடைப்பதை மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.

பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்களும் இங்கு பயிற்சிக்கு வந்துள்ளனர். இதேபோல கல்லூரிக்குச் சென்றவர்களும் இங்குள்ளனர். ராணுவத்தில் விமானப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேப்டன் அமர் சிங், இங்கு மாணவர்களுக்கு எலெக்ட்ரிகல் பயிற்சியை அளிக்கிறார். பிளஸ் 2 படித்து முடித்தவர்கள் அஞ்சல் வழியில் மேற்படிப்பைத் தொடர மாதம் ரூ. 300 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களும் இளங்கலை பட்டம் பெற முடியும் என்றார்.

இங்கு விடுதியின் வார்டனாகவும் உள்ள அமர்சிங், தனது வாழ்க்கை முழுவதும் எந்திரங்களோடு கழிந்துவிட்டது. இனியிருக்கும் காலத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார். சர்கியூட் பற்றி இவர்களுக்குக் கற்றுத் தருவது மிகவும் சிரமமாக உள்ளது. இவர்கள் பிளஸ் 2 படித்திருந்தாலும் இவர்களது புரிந்து கொள்ளும் திறன் மிகக் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

‘ரெஸிஸ்டன்ஸ் பற்றி குறிப்பிடும் போது உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் ஹுசைன் போல்டை உவமையாகக் கூற வேண்டும். அவருக்கு உரிய ஓடுதளத்தை அளித்தால் அவர் எப்படி மிக விரைவாக ஓடுவார். அவரை பிகானீரில் உள்ள மணல் பகுதியில் ஓடச் சொன்னால் அவரது வேகம் குறையும். இதற்கு இங்கு சமதளம் இல்லாததுதான் காரணம் என்று உதாரணம் கூறினால் அவர்களால் புரிந்து கொள்ள முடிகிறது’ என்று குறிப்பிட்டார்.

பயிற்சி முடித்த மாணவர்களின் மகிழ்ச்சியை அவர்களது உடல் மொழியில் காண முடிகிறது. கௌரவ் சர்மா பயிற்சி முடித்து இப்போது எலெக்ட்ரீசியனாக மாதம் ரூ. 10 ஆயிரம் சம்பாதிக்கிறார். இந்த வேலை மிகவும் பிடித்திருக்கிறது என்று குறிப்பிடும் அவர் விரைவிலேயே இதில் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறுகிறார்.

ஐசிஐசிஐ அகாடமியின் நோக்கம் மூலம் தொழில் திறன் மிக்க இளைஞர்கள் உருவாவது நிச்சயம் என்பது புலனாகியது.

தமிழில்: எம். ரமேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in