

நவம்பர் 26. மறக்க முடியுமா இந்த நாளை? ஐந்தாண்டுகளுக்கு முன்னர், இதே நாளில்.. அதாவது, நவம்பர் 26, 2008 அன்று, ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்தேன். இந்நாளில் தாயகம் திரும்ப எல்லா ஏற்பாடு களையும் செய்து விட்டேன். அன்றைய தினம் மஸ்கட்டிலிருந்து புறப்பட்டு மும்பை திரும்ப திட்டமிட்டிருந்தேன். ஆனால், இங்கு மும்பை நகரம் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் வந்திறங்கவோ, புறப்படவோ அனுமதிக்கப்படவில்லை. பேசாமல் என் மும்பை பயணத்தை ஒத்திப்போடுமாறு எனது மகன் தொலைபேசி மூலம் தகவல் அனுப்பிவிட்டான்.
காரணம், அன்றுதான், மும்பை மாநகரத்தில் தீவிரவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல்களின் கோரதாண்டவங்கள் அரங்கேற்றப்பட்டிருந்தன. அழகிய கட்டிடக்கலைச் சிற்பத்தின் மறு உருவாய்க் காட்சிதந்து விளங்கிய - மும்பை நகரின் ‘கேட்வே ஆஃப் இந்தியா’ பகுதியில் ராஜகம்பீரத்துடன் காட்சி தந்த தாஜ் மஹல் பேலஸ் ஹோட்டல், கொடும் பயங்கரவாதிகளின் வன்முறை வெறியாட்டத்தினால் சீர்குலைந்து சிதையுண்டு காட்சி தந்தது. அந்த ஹோட்டலில் தங்கியிருந்தோர் பலரும் தீவிரவாதிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகிவிட்டனர். மும்பை நகரத்தின் குழப்பமும் கொந்தளிப்பும் அழுகையும் அலறலும் ஆர்ப்பாட்டமும் அனைவரையும் உறையவைத்துவிட்டன.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் கண்கொட்டாமல் ஆடாமல் அசையாமல் வாயடைத்துப்போய் மஸ்கட்டில் இருந்தவாறே தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இன்று காலையில், நாளேட்டைப் புரட்டியவாறே இன்றைய மும்பை நகரத்தின் நிலைமையை சற்று அசைபோட்டேன். இந்த ஐந்து ஆண்டுகளில்தான் எவ்வளவு மாற்றங்கள்.. எந்த ஒரு நிலைமையையும் எதிர்த்து ஈடுகொடுத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதில் மும்பை நகரத்துக்கு நிகரே கிடையாது என்பேன்.
நான் பிறந்து வளர்ந்து படித்து மணமுடித்த பின்னரே மும்பையை விட்டு தலைநகர் டெல்லிக்குச் சென்றேன். என் மும்பை மோகம் இன்னமும் என்னைவிட்டுப் போகவே இல்லை.
இன்று மும்பை நகரம் புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது. உருக்குலைந்துபோன தாஜ் மஹல் ஹோட்டல் மிக அழகாய் மெருகூட்டப்பட்ட தோரணையில் அலங்காரமான அழகியதோர் தோற்றத்தில் அமர்க்களமாய் நிற்கிறது. இந்த ஹோட்டலிலா தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு அப்படியொரு பெருத்த மாற்றம்! பொதுமக்களிடையே நல்லதோர் ஒற்றுமை உணர்வும் தோழமையும் எதையும் தாங்கும் இதயமும் பாராட்டத்தக்க மன உறுதியும் பளிச்சிடுகிறது.
தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை தற்போது ஓரளவுக்கு அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. நல்லது. அப்படியே இருக்கட்டும். இளைஞர்களிடையே ஒருவித பொறுப்புணர்ச்சி காணப்படுகிறது. இந்த முன்னேற்றங்களுக்கு மீடியாவும் முக்கிய காரணம் எனலாம்.
ஆயினும், ஒரு சில தேசவிரோத சக்திகளின் ஆதிக்கமும் இங்கும் அங்குமாய் அவ்வப்போது தலைதூக்குவது சற்று கவலை அளிப்பதாய் இருக்கிறது. ஒரு காலத்தில் நடுநிசியில்கூட, பெண்கள் பயமில்லாமல் புறநகர் ரயில் வண்டிகளில் சர்வசாதாரணமாக பயணித்துவந்த அந்த நாட்கள் மலையேறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்கள் அணியும் திருமாங்கல்யத்தை அறுப்பதில் தொடங்கி, வீடுகளில் புகுந்து பகல்கொள்ளை, கொலை போன்ற கிரிமினல் குற்றங்கள் பஞ்சமில்லாமல் நடக்கின்றன. எவ்வளவுதான் போலீஸ் பாது காப்பை அதிகரித்தாலும், மும்பை நகரில் குடியேறு பவர்களின் எண்ணிக்கை ஏறுமுகமாகவே இருப்ப தால், இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பது சற்று சிரமமானதாகவே தெரிகிறது. அடுத்து காணப்படும் பிரச்சினை, காதலர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பெருகிவரும் ‘தற்கொலை முயற்சிகள்’. பரீட்சைகள் நெருங்கிவிட்டால் கூடவே இந்த தற்கொலை முயற்சிகளும் பெருகத் தொடங்கிவிடுகின்றன.
சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் மும்பை உயிர்த்தெழுந்து பழைய பம்பாய் நகரத்தின் பளிச்சென்ற தோற்றமும் பெண்களிடையே அச்சமில்லாத உணர்வும் அதற்கு ஏற்ற சூழ்நிலைகளும் விரைவில் திரும்பும் என்ற நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது.