Published : 04 Oct 2013 10:21 AM
Last Updated : 04 Oct 2013 10:21 AM

இந்தியா கசக்கிறதா?

என்னைச் சந்திக்க வரும் இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போது பெரும்பான்மையோர் இந்தியா மீது கடும் சலிப்பும் கோபமும் கொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஓர் இளைஞர் “இந்தியாவை சீனாவின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும், அப்போதுதான் இந்தியா உருப்படும்” என்றார்.

இன்னொருவர் “பிரிட்டிஷ்காரர்களிடமே திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும், அவர்கள்தான் இன்றுள்ள எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம். நம்மால் ஆட்சி செய்ய முடியவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று ஆவேசப்பட்டார். இவர்களைப் போல இந்தியாவைப் பிரிக்க வேண்டும், உடைக்க வேண்டும், இந்தியாவுக்கு எதிர்காலமே கிடையாது, இந்தியா ஓர் இருண்ட தேசம் என எதிர்மறையான எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.

படித்த, மத்தியதர, உயர்தர இளைஞர்களே இந்தியாவை வெறுப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை வெறுக்கக் காரணம், அதன் குழப்பமான அன்றாட வாழ்க்கை. வாகன நெருக்கடி துவங்கி குடிநீர், வீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, கேளிக்கை என அவர்கள் விரும்பும் வசதிகள் இந்தியாவில் கிடைப்பதில்லை.

இளைஞர்கள் பலருக்கும் இந்தியா பிடிக்காமல் போனதற்கு முக்கியக் காரணம், ஊழல் மலிந்துபோன அரசியல் மற்றும் பொருளாதார மோசடிகள். இவற்றிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றக்கூடிய உண்மையான வழிகாட்டிகள், தேர்ந்த தலைவர்கள், நம்பிக்கையூட்டும் முன்மாதிரிகள் இந்தியாவில் இல்லை என்பதே அவர்களின் பெருங்குறை.

இளைஞர்களின் கோபத்தை நாம் ஒதுக்கிவிட முடியாது. இவர்கள்குறித்து நாம் கவனம்கொள்ளவும் இந்தப் பிரச்சினைகளின் ஆணிவேர்குறித்து ஆராயவும் வேண்டியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு தேசத் தலைவர்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டினார்கள். இன்று அப்படிப் பெயர் சூட்டும் தகுதியுள்ள தலைவர்கள் பொதுவாழ்க்கையில் அருகிவிட்டார்கள் என்பதே உண்மை. இந்தியாவின் இன்றைய அரசியல் ஏமாற்றம் தருகிறது. அதிகாரப் போட்டி அருவருக்க வைக்கிறது. மதவாதம் நம்மைத் துண்டாட நினைக்கிறது. ஆனால், இந்தக் காரணங்களுக்காகவெல்லாம் இந்தியா மீண்டும் அடிமைப்பட வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்றே நான் நினைக்கிறேன்.

இந்தியா பற்றிய எனது மதிப்பீடு அனுபவங்களிலிருந்து உருவானது. இந்தியாவின் எல்லையோர மாநிலங்கள் வரை சுற்றிவந்தவன் என்ற முறையில், நான் அதன் இன்றைய சமூக, அரசியல் நெருக்கடிகளை நன்றாகவே அறிவேன். அவை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளே. ஆனால், இந்த நெருக்கடிகள் அத்தனையும் மீறி ‘இந்தியா ஒன்றிணைந்து இருக்க வேண்டும், ஒருமித்து வளர வேண்டும்’ என்ற குரல் இந்தியாவின் ஏழை, எளிய மக்களிடம் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

இந்தியா குறித்த எதிர்மறை எண்ணங்கள் உருவாவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. அவை ஒருநாளில் உருவானதில்லை, காலனிய ஆட்சிதொட்டுப் பரவிவருபவை. இந்த எண்ணங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுகின்றன, செயல்படுத்தப்படுகின்றன. கடலில் மிதக்கும் பனிப்பாளம்போல பிரச்சினைகளின் மேல் நுனி மட்டும்தான் நம் கண்களுக்குத் தெரிகின்றது.

இன்று இந்திய அரசியல் என்பது தேசியம் சார்ந்த ஒன்றில்லை, பிராந்தியக் கட்சிகளின் அரசியல் சார்ந்தது. ஈழப் பிரச்சினையின் குரல் வடக்கே ஒலிக்கவேயில்லை. காஷ்மீர் பிரச்சினை நமக்கு வெறும் செய்தி. இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை. இப்படி உள்ள இந்தியா எப்படி ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்ற கேள்வி எழக்கூடும். இந்தியாவை மதிப்பிட அதன் இன்றைய அரசியல், பொருளாதாரச் சீர்கேடுகள், அகம், புறம் சார்ந்த பிரச்சினைகள் மட்டும் போதாது. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்தியா வளர்ந்துள்ள விதம், இதன் பல்வேறு பண்பாட்டுக் கூறுகள், உயரிய ஜனநாயகம், மக்களின் நம்பிக்கைகள், இந்த நிலையை அடைவதற்குத் தந்த உயிரிழப்புகள், போராட்டங்கள் இத்தனையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவைப் பற்றிக் கடுமையாகப் பேசுபவர்களில் பலர் ஒருமுறைகூட இந்தியாவைக் குறுக்கும் நெடுக்கும் பயணம் செய்ததில்லை. அவர்களுக்கு இந்தியா என்பது ஒரு சொல், ஒரு வரைபடம், ஊடகம் உருவாக்கிவைத்த ஒரு பிம்பம், அவ்வளவே. இந்திய சுதந்திரம் என்பது இன்றுள்ள இளைஞனுக்கு வெறும் கறுப்பு வெள்ளை நினைவு. சுதந்திர தினம் என்பது விடுமுறை நாள். தேசம் என்பது ஓர் அடையாளம், அவ்வளவே. வரலாற்றை, சமூக நீதிக்கான போராட்டத்தின் கள அனுபவங்களை இன்றுள்ள தலைமுறைக்குக் கற்றுத்தர மறந்துவிட்டோம் என்பதே உண்மை.

இந்தியாவை வெறுக்கும் ஓர் இளைஞனிடம் நான் சொன்னேன், “ஒரேயொரு முறை மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கன்னியாகுமரி தொடங்கி இமயம் வரை இலக்கில்லாமல் போய் வா, அதன் பிறகு இந்தியா பற்றிய உனது எண்ணங்கள் தானே மாறிவிடும்.”

அவன் என்னிடம் கேட்டான்: “வறுமையும் ஊழலும் மதச் சண்டைகளும் பொருளாதார மோசடிகளும் நிரம்பிய இந்தியாவில் காண என்ன இருக்கிறது?”

“நீ சொல்வது உண்மைதான் நண்பனே, ஆனால் இவை மட்டுமே இந்தியா இல்லை. கண்ணுக்குத் தெரிகிற இந்தியாவுக்குள், முனைந்து காண வேண்டிய இன்னொரு இந்தியா ஒளிந்திருக்கிறது” என்றேன்.

இந்தியாவை ஒன்று சேர்த்து வைத்திருப்பது நிலப்பரப்பு மட்டுமில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக நீளும் அதன் அழியாத நினைவுகள், அந்த நினைவுகளின் வழியாக வலியுறுத்தப்படும் அறம், தர்மம், நம்பிக்கை.

வரலாற்றில் இந்தியா எத்தனையோ நெருக்கடிகளை, சவால்களைச் சந்தித்துக் கடந்து வந்திருக்கிறது. அந்த அனுபவக் குரல் இந்தியப் பெருநிலத்தின் ஊடே கதைகளாக, கவிதைகளாக, வாய்மொழி மரபாக, வரலாறாகத் திரும்பத் திரும்ப நினைவூட்டப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அதிகாரத்துக்கு இந்தக் குரல் கேட்காமல் இருக்கலாம். ஆனால், எழுதுபவர்களுக்கு இந்தக் குரல் நன்றாகக் கேட்கவே செய்கிறது. மனசாட்சியுள்ள மனிதர்களுக்கு இக்குரல் கேட்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர், தொடர்புக்கு: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x