

பாரதியைக் கொண்டாடுபவர்கள் எவராலும் தவிர்க்க முடியாதவர் அவர். பாரதி இறந்த பின், அவருடைய தொகுக்கப்படாத படைப்புகள் அனைத்தையும் தொகுத்தவர். பாரதியின் சமகாலத்தவர்கள் பலரையும் சந்தித்து, அவர்கள் வாயிலாக பாரதி என்கிற ஆளுமையை முழுமையாக நாம் அறிய வழிவகுத்தவர்.
பாரதியின் பல கடிதங்களைச் சேகரித்து அச்சுக்குக் கொண்டுவந்தவர் அவர்தான். தமிழகத்தில் வேறெந்த ஆளுமைக்கும் வாய்க்காத சித்திர வடிவிலான வரலாற்றைப் பாரதிக்கு ‘சித்திர பாரதி’நூல் மூலமாக உருவாக்கியவரும் அவரே. பாரதியின் வாழ்நாளில் எடுத்த புகைப்படங்களில் இன்று நமக்கு ஐந்து புகைப்படங்களே கிடைக்கின்றன. அந்தப் புகைப்படங்களில் இரண்டு படங்கள் அவரால் கண்டுபிடிக்கப்பட்டவை. ரா.அ. பத்மநாபன். பாரதி ஆய்வாளர்களின் முன்னோடி.
படிப்பையே முழுமையாக முடிக்காத பத்மநாபன் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் கல்கியின் கீழ் வேலைக்குச் சேர்ந்தபோது அவருக்கு வயது 16. அங்கே தொடங்கி ‘தினமணிக் கதிர்’, ‘தி இந்து’ (ஆங்கிலம்) என முன்னணிப் பத்திரிகைகளில் பணியாற்றிய பத்மநாபன், ஒரு பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டே தீவிரமான ஆய்வுகளிலும் ஈடுபட்டவர். ‘பாரதி கடிதங்கள்’, ‘சித்திர பாரதி’, ‘ பாரதி புதையல்’, ‘பாரதி கவிநயம்’, ‘பாரதி பற்றி நண்பர்கள்’, ‘பாரதியார் கடிதங்கள்’, ‘பாரதியார் வாழ்க்கை வரலாறு’ என பாரதி நூல்களாக எழுதி, பாரதிமயமாகவே வாழ்ந்தவர் பத்மநாபன்.
பத்மநாபனின் குரல்
பாரதி மீது பத்மநாபனுக்கு எப்படி ஆர்வம் வந்தது? பாரதி ஆய்வுகளுக்கான களம் எப்படி அமைந்தது? பத்மநாபனின் சொந்த வார்த்தைகள் இவை.
“1933-ல் முதன்முதலாக ஒரு பாரதி கவிதை நூல் என் வசம் வந்தது. 1928-ம் ஆண்டுப் பதிப்பு. அதிலுள்ள கவிதைகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தன; பாடி மகிழ்ந்தேன். அக்காலத்தில் முறையான பாரதி வாழ்க்கை வரலாறு இல்லை. பாரதி ஏன் புதுச்சேரிக்குப் போனார்? கைதுக்குப் பயந்தா? என்ற சந்தேகம் எழும்படி இருந்தது. அருமையான, வீராவேசம் தூண்டும் பாடல்களைப் பாடிய கவிஞர் கைதுக்குப் பயந்தவரா? இராது என நினைத்தேன்.
அச்சமயம், பாரதி சீடர் வ.ரா., ‘காந்தி’ மாத இதழில் பாரதி வாழ்க்கை வரலாற்றை எழுதலானார். அவர்கூடப் பல சம்பவங்களின் தேதி விவரங்கள் சரிவர நினைவில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இச்சமயம், ஓர் உறவினர் திருமணத்துக்காக நான் புதுவை செல்ல நேர்ந்தது. அங்கே பாரதியைக் கண்காணித்த பிரெஞ்சு இந்திய போலீஸ் அதிகாரியைச் சந்திக்கலாயிற்று. அவர் பாரதியைச் சிலாகித்துப் பேசினார். சில ஆண்டுகள் கழித்து, ‘ஹிந்துஸ்தான்’ தமிழ் வார இதழில் பணிபுரிய நேர்ந்த சமயம், நானும் ஒரு சிறந்த புகைப்படக்காரரும் புதுவை சென்று பாரதி இருந்த இடங்களைப் படம் எடுத்தோம்; பாரதியை அறிந்தவர்களை எல்லாம் சந்தித்தோம்.
இதன் பலனாக ‘ஹிந்துஸ்தான்’ 1938, 1939, 1940, 1941 ஆகிய ஆண்டுகளில் பாரதி மலர்கள் வெளியிட்டன. பாரதி அன்பர்கள் பாராட்டினார்கள். பின்னர், பாரதி சம்பந்தமான புகைப்படங்களைக் கண்காட்சியாக வைக்க ஏற்பாடாயிற்று. கண்காட்சியைக் கண்ட ‘அமுத நிலையம்’ நிர்வாகி, அவற்றை நூலாக்கலாம் என்றார். அதன் பேரில் எட்டயபுரம், கடயம் முதலிய ஊர்களுக்குச் சென்று, மேலும் பல படங்களும் தகவல்களும் சேர்த்து, 1957 பாரதி நினைவு நாளில் ‘சித்திர பாரதி’ என்ற பாரதி வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டோம். பாரதியார் சங்கம் நூலுக்குத் தங்க மெடல் அளித்துக் கௌரவித்தது.
1982 பாரதி நூற்றாண்டு விழாவில் (முதல் பதிப்பு வந்து 25 ஆண்டுகள் கழித்து) சித்திர பாரதியின் இரண்டாம் பதிப்பு வந்தது. இதை பாரதி நூற்றாண்டு விழா வெளியீடாக வெளியிட்டோம்.
பாரதியின் சமகாலத்தவர்களைப் பேட்டி கண்டு விவரம் சேர்த்ததும், அக்காலப் புகைப்படங்களைக் கண்டுபிடித்து நூலில் சேர்த்துள்ளதுமே மிக முக்கியமான சாதனை எனக் கருதுகிறேன். பாரதி கையெழுத்துக் கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்துப் பாதுகாக்க முடிந்ததும் சாதனையே.” (காலச்சுவடு இதழில் வெளியான பேட்டி, 2006, டிசம்பர்)
தன்னுடைய அரிய பணிக்கான பாராட்டையும் “இதிலெல்லாம் என்ன இருக்கு?” என்று சர்வசாதார ணமாகக் கடப்பவர் பத்மநாபன். பின்னர் எப்படி இந்த விஷயங்களைச் சாதனை என்கிறார்? பின்னொரு சமயத்தில் பத்மநாபனே சொன்னார்: “ஐயா, நான் சாதாரணமானவன்தான்; ஆனால், நான் கண்டுபிடித் தவை யாருடையவை? பாரதியினுடைய எழுத்துகள் அல்லவா? அதனால்தான், அவை சாதனைகள்.”
காலமெல்லாம் பாரதிமயமாக வாழ்ந்த பத்ம நாபன் தன்னுடைய 96-வது வயதில் சென்னையில் ஜனவரி 27 அன்று காலமானார். பாரதி ஆய்வுலகம் தன் தலைமகனுக்கு முத்தமிட்டு வழியனுப்புகிறது.