

2025ஆம் ஆண்டில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. உள்நாட்டு நிகழ்வுகள், வெளியுறவு விவகாரங்கள் எனப் பல்வேறு விஷயங்களை முன்வைத்து பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.
எனினும், தேர்தல் களத்தில் தொடர் வெற்றிகளைச் சுவைத்துவரும் பாஜகவுக்கு இந்த ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. எதிர்க்கட்சிகளிடம் பலவீனமும், பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் அமைப்பதில் தடுமாற்றமும் நீடித்தன.
குற்றச்சாட்டுகளும் எதிர்வினையும்: 2024 மக்களவைத் தேர்தலிலும் ஹரியாணா சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு தேசிய அரசியலில் அனலைக் கிளப்பியது. வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப் பணியின் (எஸ்.ஐ.ஆர்) மூலம் குழப்பங்களை ஏற்படுத்தத் தேர்தல் ஆணையத்தின் மூலம் மத்திய அரசு முயல்வதாகவும், பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
நீக்கப்பட்ட அனைவரும் ஏழை மக்கள் என்றும் சுட்டிக்காட்டினார். ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்கிற பெயரில் பேரணியையும் நடத்தினார். ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும் வாக்காளர்களின் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறின. பிஹார் சட்டமன்றத் தேர்தலில் 202 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டாலும், உள்துறை அமைச்சகத்தை பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் செளத்ரிக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது, அவருக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் என விமர்சனங்கள் எழுந்தன.
முதல்வர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 சேர்க்கப்பட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான முக்கியக் காரணி என்று பேசப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகச் சில ஆண்களின் கணக்குகளுக்கு இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டதாகவும், அதைத் திரும்பப்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.