

மனதைக் கல்லாக்கிக்கொள்வதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு கல்லிடம் மனம் திறந்து பேச முடியுமா? பாரசீகப் புராணக் கதைகளில் ‘பொறுமைக் கல்’ என்ற ஒன்றைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களுடைய நம்பிக்கையின்படி இந்த ‘மாயக் கல்’ முன் உட்கார்ந்துகொண்டு உங்களுடைய சோதனைகள், துன்பம், வலி, மனஉளைச்சல் இவற்றை அந்தக் கல்லிடம் கொட்டித்தீர்க்கலாம். இதுவரை வேறு யாரிடமும் சொல்ல உங்களுக்குத் தைரியம் இல்லாமல் இருந்த அனைத்தையும் இதனிடம் தயங்காமல் சொல்லலாம். நீங்கள் சொல்வதை எல்லாம் அது பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, உங்களுடைய சொற்களையும் ரகசியங்களையும் ஒரு கடல்பஞ்சைப் போல உறிஞ்சிக்கொள்ளும்... எதுவரை? அந்தக் கல்லே ஒருநாள் வெடித்துவிடும்வரை. அதுதான் உங்களுடைய விடிவுகாலம்.
பாரசீக மொழியில் இந்த ‘பொறுமைக் கல்’லைக் குறிக்கும் ‘சிங்கே சபூர், பியர் தெ பாஷியான்ஸ்’ என்ற தலைப்பில் பிரெஞ்சு மொழியில் வெளிவந்த ஒரு நாவல், பிரான்ஸின் சிறந்த இலக்கிய விருதான ‘கான்கூர்’ விருதை 2008-ல் பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் ஆசிரியர் அதிக் ரஹிமி (Atiq Rahimi). 1962-ல் ஆப்கானிஸ்தானில் பிறந்த இவர், 1984-ல் பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்து, பின்னர் அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றார். தன் முதல் மூன்று புத்தகங்களைப் பாரசீக மொழியில் எழுதிய இவருடைய நான்காவது புத்தகம் ‘பொறுமைக் கல்’ நேரடியாக பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டுப் பெரும் கவனத்தைப் பெற்றது. திரைப்பட நிறுவனம் ஒன்றில் சேர்ந்து, திறமையான இயக்குநர் என்ற பரிமாணமும் இவருக்குக் கிடைத்தது. பாரசீக மொழியில் இவர் எழுதிய முதல் நாவல் ‘மண்ணும் சாம்பலும்’ (எர்த் அண்ட் ஆஷஸ்), 2004-ல் இவருடைய இயக்கத்தில் திரைப்படமாக வந்தது. இவருடைய பிரெஞ்சு நாவல் ‘பொறுமைக் கல்’ பாரசீக மொழியில் 2012-ல் இவருடைய இயக்கத்தில் படமாக்கப்பட்டு, ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டாலும், இறுதிப் பட்டியலில் தேர்வுசெய்யப்படவில்லை.
கல்லான கணவன்
1990-களில் ஆஃப்கனில் போரில் அடிபட்டு, கிட்டத்தட்ட நிரந்தரமாக நினைவிழந்த நிலையில் இருக்கும் ஒருவனின் இளம் மனைவி அவனைக் கவனித்துக்கொள்வதற்காக அவனுடனேயே இருக்கிறாள். ஊரில் பயங்கரப் போர்ச் சூழல்; குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அப்போ தெல்லாம் கணவனை முன்புற அறையில் விட்டுவிட்டு, அண்டை வீட்டாருடன் பாதாள அறையில் அவள் தஞ்சம் புகுந்துவிடுவாள். ஊரின் மறுகோடியில், பாலியல் தொழில் செய்தபடி தன்னுடைய பிழைப்பை நடத்திக்கொண்டிருந்த தன் சித்தியிடம் குழந்தைகளை அனுப்பிவிடுகிறாள். சுற்றியுள்ள பலரும் கொஞ்சம்கொஞ்சமாகப் போரில் கொல்லப்படுகிறார்கள். கணவனுடன் தனியே இருக்கும் அவளுடன், கணவனின் கண்ணெதிரிலேயே, ஒரு போர் வீரன் உடலுறவுகொள்கிறான். கணவனுக்கு மீண்டும் நினைவு திரும்புமா என்பது சற்றும் நிச்சயமில்லாத நிலையில், அவனுடன் அவள் பேசுவதென்று முடிவு செய்கிறாள். தன்னுடய ஆசைகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் மட்டுமன்றி தன்னுடைய ரகசியங்கள் அனைத்தையும் அவனுக்கு முன்னால் கொட்டுகிறாள். சுயநினைவில்லாமல், படுத்தவாறு இருக்கும் கணவனே அவளுடைய மாயக் கல்லாக, ‘பொறுமைக் கல்’ஆகிறான்.
நாவலின் திரைவடிவம்
ஆப்கனில் பெண்களின் நிலைமையைப் பற்றிய இந்தப் படத்துக்குத் திரைக்கதை-வசனம் எழுதியவர் ழான்-க்லோத் காரியேர். பீட்டர் ப்ரூக்கின் ‘மகாபாரதத்துக்கு’ வசனம் எழுதிய இவர், பிரபலமான வேற்று மொழி நாவல்கள் பலவற்றுக்குத் திரைக்கதை வடித்துப் புகழ் பெற்றவர். நாவல் அல்லது நீண்ட சிறுகதை ஒன்றைத் தழுவி, திரைக்கேற்ற சம்பவங் களை அடையாளம் கண்டுகொண்டு, அவற்றுக்குப் பொருத்தமான வசனங்களுடன் மாற்று வடிவம் கொடுப்பதில் இவருக்கு இருந்த அசாத்தியத் திறமை தன்னைப் பிரமிக்க வைத்ததாக இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அதிக் ரஹிமி சொல்கிறார். “சொற்களைச் செயல்களாகப் படமாக்குவதுதான் சினிமாவின் மொழி” என்கிறார் இவர். ஒரு பெண்ணின் உடலைப் படமாக்குவது இவருக்குச் சவாலாக இருந்திருக்கிறது. இலக்கியத்தில் உடல் கண்ணுக்குத் தெரியாது. சொற்களின் உதவியுடன் அதை மனக் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். மாறாக, திரையிலோ உடலைப் பார்க்க முடிகிறது, முகம் தெரிகிறது, பார்வைகளைச் சந்திக்கிறோம். ஸ்தூல உடலைச் சொற்கள் மூலம் உணர்த்துவது இலக்கியம்; உடலுக்குள் சொற்களைப் புகுத்தி அதற்கு இயக்கம் அளிப்பது திரைப்பட மொழி. “இது ஒருவித மறு அவதாரம்” என்கிறார் ரஹிமி. மேலும், “உணர்ச்சிகளைச் சரியாகப் பிரதிபலிக்கும் சொற்களை எழுத்தாளர் தேடிப்பிடிக்கிறார் என்றால், அந்தச் சொற்கள் குறிப்பிடும் உணர்ச்சிகளை உடலில் புகச் செய்து உயிரளிக்கிறார் திரைப்பட இயக்குநர். எழுத்து மூலம் சொல்லப்படும் விவரணையில் பொதிந்துள்ள இன்னொரு பரிமாணத்தைத் திரைப்படம் வெளிக்கொண்டுவர வேண்டும். ஒளிந்திருக்கும் இந்தப் பரிமாணம் காட்சிகள் மூலமாக மட்டுமே தன்னைக் காட்டிக்கொள்ளும்” என்கிறார்.
கோல்ஷிஃப்தெ ஃபராஹானி
நாவல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், பாரசீக மொழியில்தான் இதைத் திரைப்படமாக்க வேண்டும் என்று ரஹிமியும், காரியேரும் முடிவுசெய்தார்கள். “ஏனென்றால், இது திரைப்படத்தின் மற்றொரு பரிமாணம். எழுத்தாளர் தனக்குத் தெரிந்த வேற்று மொழியில் எழுதலாம், ஆனால் ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கு அதைப் போன்று தப்பிக்கும் வழி எதுவும் இல்லை. குறிப்பிட்ட ஒரு பௌதிக உடல், காலகட்டம், வரலாறு இவற்றைச் சார்ந்திருக்கிறது திரைப்படம். அந்த உடல் ஒரு சமூக வட்டத்துக்குள் இருக்கிறது, காட்சி அமைப்பு அந்த மண்ணோடு சம்பந்தப்பட்டிருக்கிறது” என்று சொல்லும் ரஹிமி, நடிகையைத் தேர்ந்தெடுக்கச் சிரமப்பட்டிருக்கிறார். ரிட்லி ஸ்காட்டின் ‘ஸ்டேட் லைஸ்’படத்தில் நடித்த ஈரானிய நடிகை கோல்ஷிஃப்தெ ஃபராஹானி, ஈரானுக்குத் திரும்பிப் போகத் தடை விதிக்கப்பட்டிருந்ததால் பாரிசில் அப்போது இருந்தார். ஆனால், இந்தப் பாத்திரத்துக்குப் பொருந்தாத அளவுக்கு அவ்வளவு அழகாக அவர் இருப்பதாகக் கருதிய ரஹிமி, அவருடைய வலது கண் ஓரத்தில் செயற்கைத் தழும்பு ஒன்றை ஏற்படுத்தப்போவதாகச் சொன்னார். அவர் ஒப்புக்கொண்டுவிட்டாலும் இவர் மேலும் தயங்கினார். நடிகை சொன்னார்: “அதிக், நீ இந்தப் படத்துக்கு என்னை எடுத்துக்கொள்ளாவிட்டால், உன்னுடைய நாவலை நான் பாரிஸ் தெருக்களில் நாடகமாகப் போடுவேன்!” அவருடைய விடாமுயற்சியும் துணிவும் அவருக்கு இந்த வாய்ப்பை அளித்தன.
ஆப்கன் போன்ற நாடுகளில் பெண்களின் நிலை ஓரளவு மாறியிருந்தாலும், இன்னும் நிறையவே மாற வேண்டியிருக்கிறது என்று கருதுகிறார் ரஹிமி. பெண்களின், குழந்தைகளின் நிலை இன்னும் முன்னேற்றமடையாமல் இருப்பதற்குப் பல நூற்றாண்டுகளின் பண்பாட்டின் சுமையை, பழக்கங்களின் நிர்ப்பந்தங்களைக் காரணமாக இப்படிச் சொல்கிறார்: “மனித உரிமை என்ற கொள்கையை இங்கே அறிமுகப்படுத்த வேண்டும். இங்கே தனிநபருக்கு மதிப்பு இல்லை; அவர் முற்றிலுமாகத் தன் குடும்பத்துக்கு, தன் குலத்துக்கு, தன் சமூகத்துக்குச் சொந்தமாகிவிடுகிறார். மக்களின் மனோபாவம் மாறாத வரையில், அரசியல் தீர்வுகள் எதுவும் செய்துவிட முடியாது.”
- வெ. ஸ்ரீராம், பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர், இருமுறை செவாலியே விருது பெற்றவர்,
தொடர்புக்கு: ramcamus@hotmail.com