தனிப் பெரும் கவிஞன்

தனிப் பெரும் கவிஞன்
Updated on
2 min read

அது 1968-69-ம் கல்வியாண்டு. பாபநாசம் வள்ளுவர் செந்தமிழ் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்; எங்கள் பேராசிரியர் க.ப. அறவாணனுக்கு ‘நடை’ சிற்றிதழ் வந்துகொண்டிருக்கும்; அவர், அப்போது ஆய்வுப் பணியில் இருந்ததால், நண்பர் சுப்பு. அரங்கநாதனும் நானும் அதை எடுத்துக்கொண்டு வந்துவிடுவோம்; அதில்தான், முதன்முதலாக ஞானக்கூத்தன் கவிதைகளைப் பார்க்கிறோம்; படித்ததும், முற்றிலும் புதியனவாக இருக்கின்றனவே என்று பேசிக்கொண்டோம். ‘திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்/ தலையை எங்கே வைப்பதாம் என்று/ எவனோ ஒருவன் சொன்னான்/ களவு போகாமல் கையருகே வை’ (பிரச்னை).

குறிப்பாக, தமிழ் மரபு சார்ந்து அந்தக் கவிதைகள் இருந்தது எங்களைப் பெரிதும் ஈர்த்தது. அவர் கவிதைகளின் ஓசை நயம், சொற்றொடர் அமைப்பு, நிலப்பரப்பு, தமிழ் வாழ்வு, தமிழ் மாந்தர் என விரியும் கவிதை உலகு வெகுவாகவே வசீகரித்துக்கொண்டது. தொடர்ந்து, பின், கஸ்தூரிரங்கன் ஆசிரியராக இருந்த ‘கணையாழி’, ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த ‘ஞானரதம்’ (அதன் ஆசிரியர் குழுவில் அவரும் இருந்தார் என்று நினைவு), நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’, பின்னாட்களில் பரந்தாமனின் ‘அஃக்’, வனமாலிகையின் ‘சதங்கை’ என அன்றைய சிற்றிதழ்கள் எல்லாம் ஞானக்கூத்தனின் கவிதை இல்லாமல் இருக்காது. தொடக்கத்தின் புதுமையை அவரது கவிதைகள் ஒருபோதும் இழந்துபோய்விடவில்லை. எழுபதுகளின் தொடக்கத்தில் ‘ஒரு வல்லின இதழ்’ என்ற பிரகடனத்துடன் ‘கசடதபற’ முழு வீச்சுடன் வெளிவந்தது. அந்த இதழில் ஞானக்கூத்தனின் பங்களிப்பு கணிசம்.

எழுபதுகளின் தொடக்கத்தில் நான் சென்னையில் இருந்தபோது, ஞானக்கூத்தனின் முதல் தொகுப்பு, ‘அன்று வேறு கிழமை’ வந்தது. மாவட்ட மைய நூலகக் கட்டிட அரங்கில், வெளியீட்டு விழாவில் நான் பார்வையாளனாக இருந்து பார்த்திருக்கிறேன்; நல்ல கூட்டம்; பின்னால், கவிஞர் மீரா தமது அன்னம் பதிப்பகம் வாயிலாக அதை வெளியிட்டதில் வெகுவான வாசகர்களையும் சென்றடைந்தது; நூலகங்களிலும் இடம்பெற்றது; அந்நாளில், அந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பு நினைத்துப் பார்க்க முடியாதது.

நான் அன்றும் இன்றும் ஞானக்கூத்தனின் வாசகன். என்னுடைய முன்னோடிக் கவிஞர்களில் இன்றியமையாத ஒருவர் அவர். ஞானக்கூத்தன், என் கவிதையில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியவரும்கூட; சிறப்பாக, தமிழ் வாழ்வைத்தான் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியவர் - தன் கவிதைகளின் வாயிலாக அவருடைய கவிதைகளிலிருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, நிலப்பரப்பைச் சித்தரித்தது, சூழல் அவதானிப்பு, திட்டமான வடிவில் கவிதையைக் கட்டமைப்பது போன்றவற்றைச் சொல்லலாம். நவீன கவிதையின் நுணுக்கங்களைச் சொல்லித்தருவன ஞானக்கூத்தன் கவிதைகள்.

பிற்பாடுதான், தமிழின் மகத்தான இலக்கியச் சிற்றிதழ், ‘எழுத்து’ காணக் கிடைத்தது. மார்ச் 5, 1970-ல் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்த சமயத்தில்தான், கண்ணாடி பதித்த மர பீரோவில் இருந்த ‘எழுத்து’ இதழ் பைண்ட் வால்யூம்களைக் கண்டேன். தி.க.சியின் உடைமைகள் அவை. வண்ணதாசனிடம் நட்பு உண்டான பிறகு, படிப்பதற்குக் கேட்டேன்; அப்படியே எடுத்துக் கொடுத்தார். ‘எழுத்து’ கவிதைகள் புதுக்கவிதைகளின் ஆரம்பம்தான். அதனாலேயே அவை சகல பலவீனங்களையும் கொண்டவை. அதற்குள் அயர்ச்சி வந்துவிடும் அநேகருக்கு; எனக்கும் அப்படித்தான்; பிரமிள், நகுலன், சி.மணி, பசுவய்யா, தி.சோ.வேணுகோபாலன், எஸ். வைதீஸ்வரன் போன்றவர்களின் கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இருக்கும்.

ஞானக்கூத்தன் கவிதைகள், புதுக்கவிதையின் திசைவழியையே மாற்றியவை. என்னைப் போன்ற கவிஞர்கள் உருவாக வழி உண்டுபண்ணியவை. படிமம், வேண்டாத இறுக்கம், தத்துவச் சுமையின்றி எளிமையாகவும் நேரடியாகவும் கவிதை எழுதலாம் என்ற தைரியத்தை அளித்தவை அவரது கவிதைகள். இந்த வகையில் ஞானக்கூத்தன், நவீன கவிதையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.

ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’, ‘தோழர் மோசிகீரனார்’, ‘பரிசில் வாழ்க்கை’, விட்டுப்போன நரி’, ‘காலவழுவமைதி’, ‘உதை வாங்கி அழும் குழந்தைக்கு’ முதலான தொடக்க காலக் கவிதைகள் என்றும் கொண்டாடப்படத் தக்கவை. சாதாரண மக்களின் மனவுலகத்துக்கும் அடையாளம் காணக்கூடிய கவிதைகள் அவை. இவ்விதமாகத்தான் ஞானக்கூத்தன், வாசகர் இதயத்தில் இடம்பிடித்தார்.

ஞானக்கூத்தனின் நையாண்டி, தனித்தன்மையுடையது. இப்படியொரு பகடி, புதுக்கவிதையிலேயே விசேஷமானது. அது அவர் கையை விட்டுக் கடைசிவரையில் போகவில்லை; ‘பரிசில் வாழ்க்கை’ ஆரம்ப காலம் எனில் ‘மேம்பாலங்கள்’ பிற்காலம். அவர், இளமையில் தமிழரசுக் கழகத்தில் இருந்தவர். அய்யா ம.பொ.சி பற்றியும் அவர் கவிதை எழுதியிருக்கிறார். திருத்தணி மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். இந்தப் பின்னணியிலேயே ‘பரிசில் வாழ்க்கை’, ‘காலவழுவமைதி’ போன்றவற்றை இனம் காண வேண்டும்.

பிரமிள், நகுலனுடன் பழகிய அளவுக்கு, நான் ஞானக்கூத்தனிடம் நேரடியாகப் பழகியிருக்கவில்லை. ஞானக்கூத்தன் கவிதையம்சங்கள் பலவற்றையும் ரொம்பவும் பிந்தியே உணர்ந்தேன். இதனால் தனிப்பட்ட முறையில் இன்னும் கூடுதலான மதிப்பு; எனது ‘கவிதை ரசனை’ நூலில் ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். அவர் பிறந்த திருஇந்தளூருக்கு மனைவியுடன் போயிருக்கிறேன் - சந்திர ஸ்தலம் என்பதனால். அந்தத் தெருக்களில் நடந்திருக்கிறேன். கவிஞர் கனிமொழியின் ‘சிகரங்களில் உறைகிறது காலம்’ கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு மனைவியுடன் அவர் வந்து திரும்புகிற வேளையில் அவர் பாதங்கள் தொட்டுக் கும்பிட்டேன்.

அரங்கநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தெரிவுசெய்து கொண்ட புனைபெயர்தான் ‘ஞானக்கூத்தன்’, திருமூல நாயனாரின் திருமந்திரத்தில் சிவனைச் சுட்டுகின்ற பெயர்; இந்த மாயம் என்னை எப்போதுமே தொந்தரவு செய்வது; இந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது.

- விக்ரமாதித்யன், தமிழின் மூத்த கவிஞர்களுள் ஒருவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in