Last Updated : 17 Sep, 2013 04:36 AM

 

Published : 17 Sep 2013 04:36 AM
Last Updated : 17 Sep 2013 04:36 AM

Globe ஜாமூன் - என்ன விலை அழகே?

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக்கும் பெட்ரோல் விலைக்கும்தான் நாளது தேதியில் ரேக்ளா ரேஸ் நடக்கிறது. சீரியல் பார்த்து, குடும்பக் காரியங்கள் பார்த்து, உத்தியோகம் பார்த்து ஓய்ந்தொழிந்த நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் குறித்து ஒன்று அல்லது ஒன்றரை அவுன்ஸ் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நமக்காவது இன்று அறுபத்தி மூன்று ரூபாய் சில்லறை லெவலில் நிற்கிறது. பாகிஸ்தான் ரூபாயில் ஒரு டாலரை எட்டிப் பிடிக்கச் சுளையாக ரூ. 105 எடுத்து வைக்கவேண்டும்.

என்றால் என்ன அர்த்தம்? நம்மைவிட பாகிஸ்தான் பொருளாதாரத்தின் பேஜார் லெவல் அதிகம். இல்லையா?

ஆனால் இதைக் கேளுங்கள். நம்பமுடியாத விஷயம். பாகிஸ்தானின் இன்றைய தலையாய பிரச்னை, மழை வெள்ளம் - உற்பத்தி சேதம். சென்ற மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் விவசாயம் சர்வ நாசமாகியிருக்கிறது. குறிப்பாகப் பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் மாகாணங்களில் ஒரு புல் பூண்டு மிச்சம் வைக்காமல் வெள்ள நீர் கபளீகரம் பண்ணிவிட்டுப் போய்விட்டது. மக்கள் என்ன செய்வார்கள்? எதைச் சாப்பிடுவார்கள்?

மூன்று வேளையும் பிரியாணி தின்று கிடக்கட்டும் என்றெல்லாம் இரக்கமே இல்லாமல் பேசப்படாது. கிட்டத்தட்ட பத்து லட்சம் பேருக்கு மேல் இருப்பிடமே இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக செய்தி நிறுவன அறிக்கைகள் சொல்கின்றன. பதினைந்தாயிரம் குடும்பங்கள் வீடிழந்துவிட்டிருக்கின்றன. வெள்ளம் வந்தால் கள்ளம் தலையெடுக்கும். கள்ள மார்க்கெட் தலையெடுத்தால் நல்ல வயிறுகள் காய்ந்துதானே தீரவேண்டும்?

காய்கறி விலையெல்லாம் மனுஷன் வாங்குகிற விதமாகவே இல்லை என்று பாகிஸ்தான் பேப்பர்கள் அழுகின்றன. அப்படியா என்று ஒரு பார்வை பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. நாளது தேதியில் அங்கே ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை 34 முதல் 38 ரூபாய் வரை விற்கப்படுவதாகத் தெரிகிறது. நமக்கு இங்கே இருபத்தி எட்டு ரூபாய் முதல் முப்பது ரூபாய். முதல் வரியில் குறிப்பிட்ட 63 ரூபாய் - 105 ரூபாய் விவகாரத்தோடு ஒரு முடிச்சுப் போட்டு கணக்குப் போட்டால் பாகிஸ்தான் அலறும் அநியாய விலையேற்றமென்பது நமது காசுக்கு இருபத்திரண்டு ரூபாய் சில்லறைதான் வருகிறது!

உருளைக் கிழங்கை விடுங்கள். அது உடம்புக்குக் கெடுதி. இந்த வெங்காயம்? அது 38 ரூபாய். (இங்கே 54 ரூபாய்.) தக்காளி அங்கே 51 ரூபாய். இங்கே 27. பூண்டு 75 ரூபாய். கத்திரிக்காய் 31 ரூபாய். நமக்கு அது 40. பெரிய லிஸ்டே போடலாம். ஆனால் சந்தேகமில்லாமல் நமது காய்கறி மார்க்கெட் விலை நிலவரத்துக்குப் பக்கத்தில்தான் பாகிஸ்தான் காய்கறி விலைகளும் நிற்கின்றன. ஆனால் அதை அவர்கள் 'ஏறிய' விலை என்கிறார்கள். நமக்கு இருப்பு விலை.

இதையெல்லாம் ரொம்ப யோசித்தால் பேஜாராகிவிடும். பாகிஸ்தானைக் காட்டிலும் தமிழ்கூறும் நல்லுலகு படு பாதாளப் பொருளாதாரச் சீரழிவுக்குப் போய்விட்டதோ என்று கலவரமாகிவிடும். அவ்வாறு ஆகாமல் தவிர்க்க, ஆடு, கோழி கறி விலை விகிதங்களோடு காய்கறி விலையை ஒப்பிட்டு சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

ஒன்று தெரியுமா? பாகிஸ்தானின் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயப் பயன்பாட்டில் பெரும்பகுதி இறக்குமதி மூலம் சமாளிக்கப்பட்டு வந்தவை. இந்தியாவில் இருந்துதான் அவர்கள் தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்துகொண்டிருந்தார்கள். அது இப்போது ரத்தாகிக் கிடக்கிறது. பூண்டு, இஞ்சி போன்ற பொருள்கள் பெருமளவு சைனாவிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தன. வெள்ள விவகாரத்தால் அது கெட்டு விலையேறிப் போனதாகச் சொல்லப்படுகிறது. கொத்துமல்லிக் கட்டு முதல் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக் கோஸ் வரை எதை எடுத்து விலை பார்த்தாலும், 'ஏறியிருக்கிறது' என்று அவர்கள் சுட்டிக்காட்டும் நம்பர் நம்மோடு எப்போதும் இருக்கும் நம்பருக்கு மிக நெருக்கமாகவே இருக்கிறது! சமயத்தில் சற்றுத் தாழ்வாக.

ரொம்ப யோசித்தால் தலை சுற்றல் வந்துவிடும். ஆனால், இதை மட்டும் வைத்து ஒட்டுமொத்த பாகிஸ்தானிலும் தேனாறும் பாலாறும் பாய்வதாகச் சொல்லிவிடுதலும் தகாது. காய்கறி விஷயத்தில் அறம் மாதிரி என்னமோ ஒன்றை அன்னார் கடைப்பிடித்து வருகிறார்கள் போலிருக்கிறது.

சவுக்கியமாயிருக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x