

ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறது அக்குடும்பம். மகன், மகள், கணவன், மனைவி என்று நான்கு பேரும் அந்த ஹோட்டலின் நடுவில் இருக்கும் டேபிளைத் தேர்ந்தெடுத்து அமர்கிறார்கள். பதின் பருவத்தில் இருக்கும் அந்தப் பையன் நிலைகொள்ளாமல் ஆடிக்கொண்டே அமர்ந்திருக்கிறான். திடீரென இருக்கையை விட்டு எழுந்து அவன் ஓட முயற்சிக்க, அவனது அம்மா அவனை இழுத்துப்பிடித்து அமர வைக்கிறார். கொஞ்ச நேரத்துக்குப் பின் மீண்டும் அவன் எழுந்து ஓடுகிறான். இம்முறை அடுத்த டேபிளில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் தட்டில் இருந்து, இரண்டொரு துண்டு ஃபிங்கர் சிப்ஸ் எடுத்துவிடுகிறான். அவனது அம்மா மன்னிப்புக்கோரி, அவனை மீண்டும் இருக்கைக்கு இழுத்துவருகிறார்.
‘எக்ஸ்.. எக்ஸ்.. எக்ஸ்..’ என்று சத்தமாகக் குரல் எழுப்பிக்கொண்டே இருக்கிறான். அங்கே இருக்கும் மற்றவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள். தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
ஒருவர் எழுந்து, “யாராவது இவனைக் கட்டுப்படுத் துங்கள். இவன் எழுப்பும் சத்தம் பெரும் தொல்லையாக இருக் கிறது” என்று உரத்த குரலில் சிறுவனின் அப்பாவிடம் சொல்கிறார். சிறுவனின் அப்பா, “என் மகனுக்கு ஆட்டிஸம் இருக்கிறது. அதனால்தான் அவன் இப்படி நடந்துகொள்கிறான்” என்கிறார். இதற்குள் அச்சிறுவன் டேபிள் மீதிருந்த உணவைத் தட்டிவிட்டு, தன்மேலேயே கொட்டிக்கொள்கிறான். அந்த இடம் ஒரே களேபரமாகிறது.
“ஹோட்டலுக்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடிகிறதா? அவனை நீங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளக்கூடாதா?” என்றெல்லாம் அவர் கத்த ஆரம்பித்து விடுகிறார். அக்குடும்பம் தலை குனிகிறது. அந்த நபர் திட்டிக்கொண்டே இருக்கிறார். அவரின் இச்செயலை,
பொறுக்க முடியாமல், மற்றவர்கள் அவரை வாயை மூடும்படி எச்சரிக்கின்றனர். நீங்கள்தான் உண்மையில் எல்லோரையும் தொந்தரவு செய்கிறீர்கள் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு மேலும் இங்கே இருக்க முடியாது என்று சொல்லியபடி, அவர் தன் இருக்கையை விட்டு, எழுந்ததும், சுற்றிலும் இருப்பவர்கள் கைதட்டி அவரை வெளியே அனுப்புகின்றனர்.
விழிப்புணர்வுப் படம்
பொதுஇடங்களில் ஆட்டிஸ நிலைக் குழந்தைகளும் அவர்தம் பெற்றோரும் சந்திக்கும் சிரமங்களையும், அதற்கு மற்றவர்களின் எதிர்ப்பு, ஆதரவு மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய, கேமராக்களை மறைத்துவைத்து நிகழ்த்தப்பட்ட படப்பிடிப்பு காட்சிகளைத்தான் மேலே விவரித்திருந்தேன்.
அமெரிக்காவின் ஏ.பி.சி செய்தி தொலைக்காட்சியில் ‘வாட் வுட் டூ யூ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் ஆட்டிஸ நிலைக் குழந்தைகளைப்பற்றிய புரிதல், அவர்தம் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் ஆதரவு பற்றிய விழிப்புணர்வுக்காக இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதில், அந்தக் குடும்பமும், அவர்களோடு சண்டைபோடும் நபரும் மட்டும் நடிகர்கள். மற்றவர்கள் யாரும் இது தொலைக்காட்சி படப்பிடிப்பு என்று தெரியாதவர்கள். அந்த நடிகர்களுக்கு ஆட்டிஸம் ஸ்பீக்ஸ் எனும் அமைப்பின் நிறுவனரும், ஒரு ஆட்டிஸ நிலைச் சிறுவனின் தாயுமான லிசா கோரிங்(Lisa Goring) என்பவர் தேவையான பயிற்சிகளைத் தந்திருந்தார். நேரடியாக ஒளிப்பதிவாகும் காட்சிகளைத் திரைக்குப் பின்னால் படப்பிடிப்புக் குழுவினருடன் நின்று பார்த்துக்கொண்டிருந்த லிசாவின் கண்களில் நீர் பெருகியது. பல வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை இப்படி மாறியிருப்பது பெருமிதமாக உள்ளதாக லிசா தனது வலைப்பதிவில் தெரிவிக்கிறார்.
புலன் உணர்வுச் சிக்கல்
ஆட்டிஸ நிலையிலுள்ளவர்களுக்கு ஐம்புலன்களின் மூலம் பெறும் தகவல்களை உள்வாங்கி, அவற்றைப் புரிந்துகொண்டு, பின் தங்களது எதிர்வினைகளை வெளிப்படுத்துவதில் நிறையவே சிக்கல்கள் இருக்கும். இதனை புலன் உணர்வுச் சிக்கல் - சென்சரி ப்ராசசிங்க் டிஸார்டர்(Sensory Processing Disorder) என்பர். கூட்ட நெரிசல் மிக்க விமான நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொதுஇடங்களுக்கு வரும் ஆட்டிஸ நிலையாளர்களால் அந்தக் சூழலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்போவது அவர்களின் இந்தப் புலன் உணர்வுச் சிக்கலால்தான். இதனால் பதற்றம் கூட, அது அவர்களின் நடத்தையில் பிரதிபலிக்கிறது. அயர்லாந்து நாட்டிலுள்ள ஷெனான் நகர விமான நிலையத்தில் சிறப்புக் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமான சென்சரி அறை ஒன்றைச் சமீபத்தில் திறந்துள்ளனர். நீண்ட பயணத்தினால் பதற்றத்துக்கு ஆளாகும் ஆட்டிஸக் குழந்தைகள் இந்த அறைக்குள் வந்து விளையாடும்போது ஆசுவாசம் அடைவர். அவர்களோடு பயணிக்கும் குடும்பத்தினருக்கும் இது மிகப் பெரிய நிம்மதியைத் தரும். விரைவில் அயர்லாந்திலுள்ள எல்லா விமான நிலையங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இவையெல்லாம் மேலை நாடுகளில் ஆட்டிஸம் எனும் குடையின் கீழ் வரக்கூடிய குறைபாடுகளை(Autism Spectrum Disorder) சமூகம் எவ்வளவு இயல்பாக ஏற்றுக்கொண்டுள்ளது என்பதைக் காட்டும் சில எடுத்துக்காட்டுகள்தான். அங்கும் சிக்கல்கள் இருக்கக் கூடும் – ஆனால் ஒப்பீட்டளவில் பொது சமூகத்தில் சிறப்புக் குழந்தைகளின் தேவைகள் பற்றிய புரிதல் அதிகரித்துள்ளது. அவர்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவர்களது குடும்பத்தாரின் உணர்வுகள் மதிக்கப்படுகின்றன.
விழிப்புணர்வு தேவை
இப்போது நம்மூர் நிகழ்வுகள் சிலவற்றைப் பார்ப்போம். சில வருடங்களுக்கு முன்பு ஆட்டிஸ நிலையில் உள்ள ஒரு பெண் குழந்தையைப் பராமரிக்க முடியாமல், சுடுகாட்டில் விட்டுச்சென்ற சம்பவம் மதுரை அருகே நடந்தது. சோழவந்தான் பகுதியில் பேருந்தில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஓசை எழுப்பினான் என்று கூறி, ஓர் ஆட்டிஸநிலைச் சிறுவனையும் அவன் தாயாரையும் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவமும் நடந்தது. இச்சம்பவத்துக்கு காரணமானவர்களின் மீதெல்லாம் பின்னால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இவை பத்திரிகைகளில் வந்த செய்திகளினால் கவனம் பெற்றவை. எத்தனை சம்பவங்கள் இப்படி நமது கவனத்துக்கு வராமல் போயிருக்கின்றனவோ தெரியாது.
இங்கே ஆட்டிஸ நிலைக் குழந்தைகளை வைத்திருப்பவர்களைப் பார்க்கும் மக்களில் பலர் எடுத்த எடுப்பிலேயே ஆலோசனைகளை வழங்கத் தொடங்கிவிடுகின்றனர். நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று தெரப்பிகளுக்கு வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வது, பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டு உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது, வீட்டில் பயிற்சி செய்வது, இதுதவிர சாதாரண வீட்டு வேலைகள், மற்ற குழந்தைகள் இருந்தால் அவர்களின் வளர்ப்பு என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலைந்துகொண்டிருக்கும் பெற்றோரிடம், “இன்னும் பேச்சு வரலயா, தினமும் காலைல ஒரு முறை சாயந்தரம் ஒரு முறை தேனைத் தொட்டு நாக்குல தடவினீங்கன்னா போதும், புள்ள கடகடன்னு பேச ஆரம்பிச்சுரும்” என்பது போன்ற அறிவுரைகளைச் சொல்வது ஒரு பெரும் கொடுமை. உண்மையில், அவர்களின் அக்கறையும் அன்புமே இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று புரிந்தாலும், பெற்றோரால் அதை தெளிவாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. சிலர் கோபப்பட்டும், சிலர் உடைந்து அழுதும் அந்தச் சிக்கலை கடக்கிறோம்.
இயல்பாக இருக்கவிடுங்கள்
உண்மையில், ஆட்டிஸ நிலைக் குழந்தைகளை அவர்கள் இயல்பில் இருக்கவிட்டாலே பொதுஇடங்களில் எந்தப் பிரச்சினையும் வருவதில்லை. மாறாக, சுற்றியிருப்போரின் பார்வையும், ஏளனப் பேச்சும் அவர்களின் ரயில், பேருந்து பயணங்களை இன்னும் மோசமானதாக்குகிறது. எந்த ஆட்டிஸ நிலைப் பெற்றோரிடம் பயணங்கள் குறித்துக் கேட்டாலும் அனேகமாக எல்லோரிடமும் ஏதாவது வலிமிகுந்த அனுபவங்கள் இருக்கும்.
மற்ற வகை மாற்றுத் திறனாளிகளின் சிக்கல்கள் வெளிப்படையாகத் தெரியும் என்பதால், கிடைக்கும் சிறிதளவு அனுதாபமும் இக்குழந்தைகளின் விஷயத்தில் கிடைப்பதில்லை. ஏனெனில், புறத்தோற்றத்தைப்
பொறுத்த வரையில் இவர்களுக்கு எந்த வித்தியாசமும் இருக்காது. எனவே, ஆட்டிஸம் பற்றிய புரிதல் நம் சமூகத்தில் இன்னமும் அதிகமாக ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம். எல்லாத் துறைகளிலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை நமது முன்மாதிரியாகக்கொள்ளும் நாம், இந்த விஷயத்தில் அவர்களைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
சிறப்புக் குழந்தையின் தாய் மற்றும் சிறப்புக் கல்வி ஆசிரியை
தொடர்புக்கு (lakshmi.balakrishnan.2008@gmail.com)
ஏப்ரல் 2 - ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம் |