Last Updated : 12 Jan, 2017 11:35 AM

 

Published : 12 Jan 2017 11:35 AM
Last Updated : 12 Jan 2017 11:35 AM

தமிழில் எடிட்டர்கள் இருக்கிறார்களா?

முன்பைவிடப் பல மடங்கு புத்தகங்கள் வெளியாகின்றன. ஆனால், பெரும்பாலான புத்தகங்கள் பொறுப்பில்லாமல் வெளியிடப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு மட்டும் மறையவே இல்லை. தமிழில் நல்ல ‘எடிட்டர்கள்’ மிகவும் குறைவு என்பதே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தமிழின் முன்னணிப் பதிப்பாளர்கள் சிலரிடம் எடிட்டர்கள், எடிட்டிங் குறித்துப் பேசினோம்:

எஸ்.ராமகிருஷ்ணன், க்ரியா பதிப்பகம்

எடிட்டர் ஒருபோதும் எழுத்தாளரின் இடத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால், ஒரு எழுத்தாளர் தனது படைப்பை மேம்படுத்திக்கொள்ள ஒரு நல்ல எடிட்டரை நாடுவதற்குத் தயங்கக் கூடாது. இருவரும் பிரதியுடன் உட்கார்ந்து விவாதித்து, பரஸ்பரம் நம்பிக்கை கொண்டு, இறுதி முடிவை எட்ட வேண்டும். ஒரு எழுத்தாளருக்குத் தன் படைப்பின் மீது உணர்ச்சி சார்ந்த பிணைப்பு இருப்பதால், அதன் குறைகள் அவருக்குத் தெரியாது. இந்த வகையில் எடிட்டர்தான் ஒரு படைப்பின் முதல் வாசகர். தமிழில் இன்றைய எழுத்தாளர்களின் பல படைப்புகள் நல்ல சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தும் உச்சத்தை அடைய முடியாமல் போவதற்கு எடிட்டர்கள் இல்லாததும் ஒரு காரணம்.

கண்ணன், காலச்சுவடு பதிப்பகம்

ஒரு பத்திரிகையில் ஆசிரியர், துணை ஆசிரியராக இருக்கும் அளவுக்குத் தகுதியானவர்கள்தான் புத்தகங்களை எடிட் செய்ய வேண்டியதிருக்கிறது. ஆக, ஒரு நல்ல பத்திரிகையில் கொடுக்கிற ஊதியத்தை அவர்களுக்குத் தந்தாக வேண்டும். குறைந்தது 20 ஆயிரம் பிரதிகள் விற்பனையானால், அந்தப் புத்தகத்தை எடிட்டரைக் கொண்டு செப்பனிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், 500 பிரதிகளே விற்பனையாகிறபோது, யதார்த்த சூழலையும் பார்க்க வேண்டும்.

மனுஷ்யபுத்திரன், உயிர்மைப் பதிப்பகம்

இங்கே நல்ல எடிட்டர்களுக்கான பஞ்சம் இருக்கிறது. புத்தகக் காட்சி மாதிரியான நேரங்களில், அவசர அவசரமாக எழுதப்பட்டுப் பல புத்தகங்கள் வெளியிடப்படுவதால், எடிட்டிங் பற்றிக் கவலைப்படாத சூழல் இருக்கிறது. ஒரு புத்தகம் சிறப்பாக உருவாகச் சிறந்த எடிட்டரின் வழிகாட்டுதல் தேவை. ஒரு நல்ல எடிட்டர் பிரதியில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினால், எரிச்சல் அடையும் எழுத்தாளர்களே இங்கு அதிகம்.

நாகராஜன், பாரதி புத்தகாலயம்

தமிழ்ப் பதிப்புலகுக்கு எடிட்டர்கள் அவசியம் தேவை. காரணம், நாங்கள் நிறைய மொழிபெயர்ப்புப் புத்தகங்களை வெளியிடுகிறோம். மொழிபெயர்ப்பை எடிட் செய்யாமல் போடவே முடிவதில்லை. ஆனால், மொழிபெயர்ப்பாளர்கள் சிலர், தங்கள் எழுத்தைத் தொடவே கூடாது என் கிறார்கள். இதனால், எங்கள் பதிப்பகத்திலேயே சில மொழி பெயர்ப்புப் புத்தகங்கள் வெளிவராமல் இருக்கின்றன.

காந்தி கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பபாசி தலைவர்

நாங்கள் வருடத்துக்கு 35 புத்தகங்களுக்கு மேல் போடுவதில்லை. காரணம் என்னவென்றால், இங்கே எடிட்ட ரும் நான்தான்.. பதிப்பாளரும் நான்தான். ஒரு பிரதி நல்ல உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தால், இன்றைய வாசிப்புச் சூழலில் இதெல்லாம் ‘வளவளா’ என்று சொல்வேன். ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பிரதியை ஆசிரியரின் கையில் திருப்பிக் கொடுத்துவிடுவேன். மொழிபெயர்ப்பு நூல்களில் ஒரு சிக்கலுண்டு. எந்தப் பதிப்பாளருக்கும் மூலத்தில் உள்ள வரிகளில் கை வைக்க உரிமை கிடையாது. அதே நேரத்தில், தேவை யற்ற விவரணைகளைக் குறைத்துவிடுவேன். எந்தப் பதிப்பகமாக இருந்தாலும், எடிட்டர் கண்டிப்பாகத் தேவை.

புகழேந்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பபாசி செயலர்

தமிழ்ப் பதிப்புத் துறையில், ஒருசிலர் மட்டும் எடிட்டர் என்று ஒருவரைச் சம்பளத்துக்கு வைத்திருக்கிறார்கள். ஒரு பதிப்பகம் நான்கைந்து எடிட்டர்களை நிரந்தரமாகவைத்திருக்க முடியாது. எனினும் இங்கே எடிட்டர்களுக்கு அதிகத் தேவையிருக்கிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண பபாசி சார்பில் முயற்சித்துவருகிறோம். இதன்படி, திறமையானவர்களை எடிட்டர் களாகத் தேர்வுசெய்து, அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்போகிறோம். பபாசி சார்பில் சான்றிதழும் வழங்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்களை எந்தப் பதிப்பகம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்கிற வாய்ப்பையும் வழங்கப்போகிறோம். இது காலத்தின் தேவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x