Published : 18 Dec 2013 00:00 am

Updated : 06 Jun 2017 16:27 pm

 

Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 04:27 PM

முன்மாதிரியா கெஜ்ரிவால் அரசியல்?

வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். முதல் தேர்தலிலேயே அவருடைய ‘ஆம்ஆத்மி’ கட்சி டெல்லியில் வென்றிருக்கும் 28 இடங்கள்; ஆளும் காங்கிரஸை வெறும் எட்டு இடங்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்துக்கு 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கொடுத்த தோல்வி, எல்லாவற்றுக்கும் மேல், டெல்லியில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டின் அரசியல் போக்கையும் அவர் தீர்மானிக்கும் வியூகம்… சந்தேகமே இல்லாமல் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்.

அதே சமயம், தேசிய ஊடகங்கள் சித்தரிக்கும் ‘இந்திய பாணி அரபுப் புரட்சி’யா இந்த வெற்றி? அமார்த்திய சென் சொல்வதுபோல, மிக முக்கியமான புறப்பாடா? ராகுல் சொல்வதுபோல, ஆம்ஆத்மியிடமிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமா? சில அரசியல் விமர்சகர்கள் சொல்வதுபோல, இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டிய சித்தாந்தமா ஆம்ஆத்மியின் சித்தாந்தம்? சுருக்கமாக, இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கொண்டாடும் முன்மாதிரியா கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசியல்?


நாம் நிறைய உணர்ச்சிவசப்படுகிறோம் என்று தோன்றுகிறது.

தனி சாமானியனா?

முதலில் ‘இது ஒரு சாமானியனின் எழுச்சி; இந்தியாவில் ஒரு சாமானியன் நினைத்தால், என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு உதாரணம் கெஜ்ரிவால்’ என்ற கூற்றே அபத்தமானது. டெல்லியின் அதிகாரவர்க்கப் பின்னணியில் வெளிவந்தவர் கெஜ்ரிவால். ‘மகசேசே’ விருதுக்குப் பின் ஊடகங்களுக்கும் மிக நெருக்கமானார். அண்ணா ஹசாரே இயக்கப் போராட்டங்களில் ஊடகங்கள் என்ன ஆட்டம் ஆடின என்பது நமக்குத் தெரியும். கிட்டத்தட்ட அந்தப் போராட்டங்களைத் தேசிய ஊடகங்கள் பின்னின்று இயக்கின. அண்ணா ஹசாரே மவுசு போன பிறகு, கெஜ்ரிவாலை அவை வாரி அணைத்தன. ஓராண்டுக்கு முன் இதே காலகட்டத்தில், ராபர்ட் வதேரா, சல்மான் குர்ஷித், நிதின் கட்காரி என்று வாரம் ஒரு தலையின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியபோது, நாட்டின் 24 மணி நேரச் செய்தித் தொலைக்காட்சிகள் எந்நேரமும் கெஜ்ரிவாலே கதி என்று கிடந்ததும் அவருடைய போராட்டங்கள் பலவும் ஊடகங்களுக்குத் தீனி போடும் வகையில் வடிவமைக்கப்படுவதும் இங்கு நினைவுகூரத் தக்கவை. எப்படியும் அரசியல் வர்க்கம் நினைத்தவுடன் தூக்கி உள்ளே போடும், காணாமல் ஆக்கும் ஒரு சாமானியர் அல்ல கெஜ்ரிவால்.

மூன்று கேள்விகள்

கெஜ்ரிவால் ஆம்ஆத்மியைத் தொடங்கியபோது, அவருடைய அரசியல் நோக்கங்கள்பற்றி விரிவாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்மீது பரவலாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள்பற்றி கேட்ட மூன்று கேள்விகள் இவை.

1. இந்தியா லட்சக்கணக்கான கிராமங்களில் இருக்கிறது. நீங்கள் டெல்லியில் இருந்தே அரசியல் நடத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?

2. முதலாளித்துவமும் தனியார்மயமும் நாட்டையே சூறையாடுகிறது. சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் சாதியம் உறைந்திருக்கிறது. நீங்களோ ஊழலை மட்டுமே பெரும் பிரச்சினையாக முன்னிறுத்துகிறீர்கள். இது சரியா?

3. மக்களே அற உணர்வுகளைப் பொருட்படுத்தாதபோது, அரசியல்வாதிகள் மட்டும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

இதற்கு கெஜ்ரிவால் அளித்த பதில்கள்.

“1. டெல்லியில் நாங்கள் தொடங்கியிருக்கிறோம். ஆனால், அதன் வீச்சு காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரி வரை எதிரொலிக்கிறது. இந்தியாவின் எந்தக் கிராமத்துக்கு வேண்டுமானாலும் நீங்கள் சென்று பாருங்கள். எங்கள் போராட்டங்களைக் கிராம மக்கள் சொல்வார்கள்;

2.நீங்கள் குறிப்பிடும் எல்லாப் பிரச்சினைகளுமே இருக்கின்றன என்றாலும், ஊழல்தான் பிரதானமானது. ஏனென்றால், நான்கு பேர் இருக்கும் இடத்தில், இருவர் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஒருவர் முதலாளித்துவத்தாலும் இன்னொருவர் தனியார்மயத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நால்வருமே ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்;

3. உலகிலேயே சிறந்த குடிமக்கள் நம்மவர்கள். அரசியல்வாதிகள்தான் கெடுக்கிறார்கள்.”

அந்த நீண்ட உரையாடலுக்குப் பின், கெஜ்ரிவால் ஒரு லட்சியவாதியாகத் தெரிந்தாரேயன்றி கள யதார்த்தவாதியாகத் தெரியவில்லை.

லட்சம் கீரிப்பட்டிகள்

டெல்லிகள் அல்ல; பல்லாயிரம் பாப்பாபட்டிகள், கீரிப்பட்டிகள், திருமங்கலங்களின் தொகுப்புதான் இந்தியா. இதன் சகல பிரச்சினைகளின் ஆணி வேர் சாதியத்திலும் இனவாதத்திலும் பிணைந்திருக்கிறது. அரசியல்வாதி என்று கெஜ்ரிவால் குறிப்பிடுவது ஏதோ நூறு பேர் அல்ல; இந்தியாவின் குடியரசுத் தலைவர் முதல் ஊராட்சி உறுப்பினர் பதவியிடம் வரை கணக்கில் எடுத்தால், வேட்பாளர்கள் எண்ணிக்கை மட்டுமே சில கோடிகளைத் தாண்டும் (நாட்டில் உள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை மட்டும் 2.65 லட்சம்). இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்து வருகிறார்கள்? மக்கள் என்ற தொகுப்பில் இவர்கள் சேர்த்தி இல்லையா? ஓர் ஆசிரியர் பாடம் நடத்தாமல் வட்டித் தொழில் செய்யலாம்; மருத்துவர் கூடுதல் மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்; வியாபாரி கலப்படம் செய்யலாம்; இதே சமூகத்திலிருந்து வரும் அரசியல்வாதி மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும்?

எது ஊழல்?

கெஜ்ரிவால் குறிப்பிடுவதுபோல, ஊழல்தான் தலையாய பிரச்சினை என்று வைத்துக்கொண்டாலும், அதிலும் சிக்கல் இருக்கிறது. எது ஊழல் என்பதே மறுவரையறைக்குள்ளாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். “அரசாங்கம் கொள்கை முடிவெடுப்பதில் தவறிழைப்பது (கனிம வள ஒதுக்கீடுகளில் முறைகேடு நடப்பது) குற்றம் அல்ல; இதைப் புலனாய்வு அமைப்புகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பிரதமரும் “இன்னமும்கூடக் கொள்கை முடிவுகளுக்கும் ஊழல்களுக்கும் வித்தியாசமே தெரியாமல்தான் இருக்கிறோம் நாம். ஓர் அருமையான கொள்கை முடிவு என்பது மோசமான ஊழலாக இருக்கலாம்; ஒரு மோசமான கொள்கை முடிவு ஊழலற்றதாக இருக்கலாம்” என்று அமைச்சர்களும் பாடம் எடுக்கும் காலகட்டம் இது.

அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய் சுரங்கங்களையோ, அலைக்கற்றையையோ சில ஆயிரம் கோடிகளுக்குத் தனியாருக்கு ஒதுக்கினால் கொள்கை முடிவு; இப்படி ஒதுக்குவதற்காகச் சில நூறு கோடிகளுக்குக் கைநீட்டிச் சிக்கிக்கொண்டால் மட்டுமே அது ஊழல். கெஜ்ரிவால் இதுவரை கடுமையாக எதிர்க்குரல் கொடுத்திருப்பது இந்த ஊழலுக்கு எதிராகத்தான். இந்தப் பின்னணியிலேயே கெஜ்ரிவாலுக்கு பெருநிறுவனங்களின் மறைமுக ஆசி கிடைக்கிறது.

முதல்வன் பாணி அரசியல்

உண்மையில் கெஜ்ரிவால் முன்வைக்கும் அரசியல், இயக்குநர் ஷங்கரின் ‘முதல்வன்’ பட பாணியிலானது. மக்கள் எல்லோரும் நல்லவர்கள்; மேலே உள்ள ஒரேயொரு அரசியல்வாதி மாறினால்கூடப் போதும்; நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் என்று சொல்லும் அரசியல். அண்ணா ஹசாரே இயக்கக் கூட்டங்களுக்கு நேரில் சென்றவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். சாமியார்கள் நடத்தும் ‘அற்புத சுகமளிக்கும் கூட்டம்’ பாணி கூட்டங்கள் அவை. எங்கும் தேசியக் கொடி, பெரிய பெரிய திரைகளில் ‘தேசிய உணர்வை’த் தூண்டும் பாடல்கள், தொடர் முழக்கங்கள், நாஜிக்கள் ஹிட்லரின் வருகைக்கு முன் உருவாக்குவதாகச் சொல்லப்படும் உணர்ச்சி அலையைப் பிரதிபலிப்பவை அவை.

இந்த அரசியலில் முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் தீவிரமான போராட்ட அரசியலில் இறங்கினால், உருவாகும் எந்த இழப்பும் அபாயமும் உங்களுக்குக் கிடையாது. முக்கியமாக, உண்மையான அரசியலில் இறங்காமலேயே அரசியலில் பங்கேற்கலாம். 70 வயதுக் கிழவர் உண்ணாவிரதம் இருந்தால், சில மணி நேரம் போராட்ட மைதானத்துக்குச் சென்று, வேளாவேளைக்குக் கொடுக்கப்படும் சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கொண்டே ‘போராடலாம்’; நடனம் ஆடத் தெரிந்தால், மும்பை ரயில் நிலையம் சென்று நடனம் ஆடிப் ‘போராடலாம்’.

அலைகளின் வரலாறு

கெஜ்ரிவால் வெற்றிக்கு முக்கியக் காரணம், மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்ட காங்கிரஸின் ஊழல்கள் ஏற்படுத்திய வெறுப்பு. தமிழக அரசியல் பின்னணியில், விளக்க வேண்டும் என்றால், 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க-வுக்கு எதிராக வீசிய ஊழல் எதிர்ப்பு அலையோடு பொருத்திப் பார்க்கத் தக்கது இது (ஊழலுக்கு எதிராகப் பேசி காங்கிரஸிலிருந்து பிரிந்து மூப்பனார் தொடங்கிய த.மா.கா., தி.மு.க-வோடு சேர்ந்து தான் போட்டியிட்ட 39 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 20 மக்களவைத் தொகுதிகளிலும் அப்போது வென்றது; பர்கூர் தொகுதியில் ஜெயலலிதா தோற்றார்). இந்திய வரலாற்றில், தேர்தல்களில் ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை வீசும்போது அதன் வீச்சிலிருந்து வெற்றி - தோல்விகளை ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது.

பாடம் எங்கே கற்பது?

நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியவர் கெஜ்ரிவால்; ஆனால், முன்மாதிரி என்று கொண்டாட அவர் செல்ல வேண்டிய பயணம் மிக நீண்டது; இன்னும் அந்தத் திசையையே அவர் பார்க்கவில்லை. சித்தாந்தரீதியிலான வலுவும் தெளிவுமில்லாத மக்கள் திரளும் அவர்களுடைய அரசியலும் ஒருபோதும் நீடித்த தீர்வுக்கு வழிவகுப்பதில்லை; அவை சரியான முன்மாதிரிகளாகவும் இருப்பதில்லை. வரலாறும் சமீபத்திய ‘அரபு வசந்தப் புரட்சி’களும்கூட அழுத்திச் சொல்வது அதைத்தான்.

உலகில் சாமானியர்களிலும் சாமானியர்களை அரசியலை நோக்கி அழைத்து வந்த காந்தி இருந்த இயக்கம் காங்கிரஸ்; சுதந்திரம் அளித்த சர்வ வல்லமையுடன் ஆட்சிக்கு வந்த காங்கிரஸுக்கு அந்நாளிலேயே சிம்ம சொப்பன சாமானிய அரசியலைத் தந்தவர்கள் இடதுசாரிகள். காங்கிரஸும் இடதுசாரிகளும் படிக்க வேண்டிய பாடம் கெஜ்ரிவாலிடம் இல்லை; அவர்களுடைய வரலாற்றிலேயே இருக்கிறது!

தொடர்புக்கு: samas@kslmedia.in


சமஸ்ஆம் ஆத்மி கட்சிகேஜ்ரிவாலின் கொள்கைகள்ஊழலுக்கு எதிரான போராட்டம்டெல்லி தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x