

வகுப்பறையில் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பவரா நீங்க? அட, நீங்க இன்னொரு சாலிம் அலியாகவும் இருக்கலாம்.பறவைகளையே வேடிக்கை பார்த்த அவர் 1896-ல் பிறந்தார். பறவைகளின் பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட அவற்றின் வாழ்முறை பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் உலகப் புகழ்பெற்றவை. இன்று அவர் இந்தியப் பறவையியலின் தந்தை எனப்படுகிறார்.
இறந்துபோன ஒரு குருவியின் கழுத்தில் மஞ்சள்நிறத் திட்டை ஒரு நாள் பார்த்தார். “ஏன் இப்படி இருக்குது?” என்று முதல் கேள்வியைச் சித்தப்பாவிடம் கேட்டார். பதிலில் திருப்தியடையாமல் வளர்ந்து சென்றன அவரது கேள்விகள்.
சித்தப்பாவுக்கு டபிள்யு.எஸ்.மில்லர்ட் என்று ஒரு நண்பர். அவர் மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் நிர்வாகி. ‘குருவிகளில் நிறைய சிற்றினங்கள் இருக்கின்றன. இந்த மஞ்சள்தொண்டைக் குருவி அதில் ஒன்று’ என்று ஆரம்பித்த அவர், சுவாரசியமான பல தகவல்களைச் சொன்னார். பறவைகள் பற்றிய புத்தகங்களையும் கொடுத்தார். அவ்வளவுதான்... சாலிம் தன் வீட்டுத் தோட்டத்தின் தூக்கணாங் குருவியையே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். அது கூடு கட்டுவதை நுட்பமாகக் கவனித்தார். அதன் ஒவ்வொரு செயலையும் குறிப்பெடுத்துக்கொண்டார். 1930-ல் தூக்கணாங் குருவியைப் பற்றி ஒரு பெருங்கட்டுரை எழுதினார். மிகச் சிறந்த ஆய்வாகப் பாராட்டப்பட்டது அது.
வேடிக்கை பார்ப்பதே அவருக்கு முழு நேர வாழ்க்கையாக மாறியது. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆரம்பித்து, இமயமலை வரை சலீம் பயணித்தார். பறவைகள் குறைவாக வசிக்கிற ராஜஸ்தான் பாலைவனத்தைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை. மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பனிச் சிகரங்களுக்கும் அவரது கால்கள் பயணித்தன. திரட்டிய அறிவை ‘இந்தியப் பறவைகள் பற்றிய கையேடு’ என்ற பெயரில் வெளியிட்டார். அது இன்று வரை விற்பனையில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. பறவைகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு அவரது எழுத்துகள்தான் இன்று ஆனா, ஆவன்னாபோல. சாதாரணமான வேடிக்கை பார்க்கும் ஒரு பையன்தான், தனது விடா முயற்சியால் பறவையியல் தந்தை ஆனார். அதனால், வேடிக்கை பார்ப்பது ஒன்றும் வீண் காரியம் கிடையாது.