

தேசிய அரசியலின் சமீபத்திய பரபரப்பு பகுஜன் சமாஜ் கட்சிப் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியாவின் ராஜினாமா.
கட்சித் தலைவர் மாயாவதி மீது கடுமையான விமர்சனங்களுடன் வெளியேறியிருக்கிறார் மவுரியா. கடந்த வாரம் புதன்கிழமை தனது ராஜினாமாவை அறிவித்த அவர், மாயாவதியைக் கடுமையாக விமர்சித்தார். “மாயாவதி ஒரு தலித்தின் மகள் அல்ல. செல்வத்தின் மகள்” என்றார் காட்டமாக. தொகுதிகளுக்கான சீட்டு ஏலம் விடப்படுவதாகவும், பணம் தராதவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அடுத்த இரண்டு மணி நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி, “நாங்களே அவரை விலக்க முடிவு செய்திருந்தோம். அதற்குள் தானாகவே விலகியமைக்கு நன்றி. தனக்கு என்ன மதிப்பு என்று சில நாட்களில் அவருக்கே தெரிந்துவிடும்” என்று ஒரு போடுபோட்டார்!
1980-ல் சரண்சிங்கின் லோக் தளத்தின் இளைஞர் அணியின் மூலம் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய மவுரியா, பிறகு வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் இணைந்தார். 1996-ல் பகுஜன் சமாஜில் இணைந்தார். நான்கு முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு நான்கு முறை அமைச்சர் பதவியும் அளித்தார் மாயாவதி. மிகவும் பிற்படுத்தப்பட்ட மவுரியா சமூகத்தின் முக்கிய முகமாக இருந்த அவருக்கு கட்சிக்குள் நல்ல செல்வாக்கு. வசூலாகும் நிதி முதல், கட்சியில் யாருக்கு எந்தப் பதவி கிடைக்கும் என்பது வரை அறிந்திருந்தவர். அப்படிப்பட்டவர் திடீரென்று பதவி விலகியதன் பின்னணியில் வாரிசு அரசியல் இருக்கிறது என்கிறார்கள். 2012-ல் நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மவுரியாவின் மகன், மகள் இருவருக்கும் வாய்ப்பு தந்தார் மாயாவதி. இருவரும் தோல்வி அடைந்தனர். 2014 தேர்தலில் மவுரியாவின் மகள் சங்கமித்திரைக்கு மெயின்புரி தொகுதி கிடைத்தது. அதிலும் அவர் வெல்லவில்லை. இந்நிலையில், அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தன் வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டிருக்கிறார் மவுரியா. வாய்ப்பு மறுக்கப்படவே வெளியேற முடிவெடுத்துவிட்டார்.
அதேசமயம், மாயாவதி சொன்னதுபோல் அவருக்கு மவுரியாவின் ‘மவுசு’க்கு ஒன்றும் குறைச்சலில்லை. சமாஜ்வாதி, பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், அஜீத்சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் என்று முக்கியக் கட்சிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. முதலில் சமாஜ்வாதியிடம் பேசிய அவர், பேச்சுவார்த்தை சரிப்படாததால் பாஜகவின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறார். உ.பி.யில் சாதி, மத அடிப்படையிலான அரசியல் அதிகம். மவுரியா சமூகத்தவர் அங்கு 8% எண்ணிக்கையில் இருக்கின்றனர். இதனால், மவுரியாவின் இடத்தில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவரையே நியமிக்க இருப்பதாகத் தன் கட்சியினரிடம் உறுதி அளித்துள்ளாராம் மாயாவதி. அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே?