சுரண்டப்படும் இமய மலையும் இமய மக்களும்!

சுரண்டப்படும் இமய மலையும் இமய மக்களும்!
Updated on
5 min read

உத்தராகண்ட், அருணாசலப் பிரதேசம் என்ற இரு மாநிலங்களும் அரசியல் செய்திகளுக்காகப் பத்திரிகைகளில் அதிகம் இடம்பெற்றன. இவ்விரண்டிலும் ஆளும் காங்கிரஸ் அரசுகளை மத்தியில் ஆட்சிசெய்யும் பாஜக ஆட்டம் காண வைத்தது, பிறகு உடந்தையாகச் செயல்பட்ட மாநில ஆளுநர்களின் உதவியுடன் கலைத்தது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை மீட்டது. இவ்விரு மாநில அரசுகளும் முழுப் பதவிக் காலமும் தொடருமா என்பது தெரியாவிட்டாலும், இப்போதைக்கு ஆட்சியில் இருக்கின்றன.

உத்தராகண்டிலும் அருணாசலப் பிரதேசத்திலும் நடந்த இந்த அரசியல் விபத்துகளுக்குக் காரணம், பெரிதாக எதையாவது சாதித்துவிட வேண்டும் என்பதில் பாஜகவுக்கும் அதன் தலைவருக்கும் இருந்த அளவுக்கதிகமான ஆர்வம்தான். இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியும் நல்லாட்சியை அளித்துவிடவில்லை. இரு மாநிலங்களிலும் திறமையற்ற - அதே சமயம், ஊழல் மிகுந்த ஆட்சியைத்தான் அது நடத்திக்கொண்டிருந்தது. மீண்டும் தாய்க் கட்சிக்குத் திரும்ப, பேரவை உறுப்பினர்களுக்கு அது அளித்திருக்கும் வாக்குறுதி நிச்சயம் அறம் சார்ந்ததாக இருக்க முடியாது, பணம் சார்ந்ததாகத்தான் இருந்திருக்கும்.

1987-ல் அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது; உத்தராகண்ட் 2000-ல் உருவானது. சமீபத்திய குதிரை பேரங்களும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளும் நமக்கு வேதனையைத் தருவன. ஆனால், உண்மையில் அதை விட வேதனை தரக்கூடிய செயல் எதுவென்றால், ‘வளர்ச்சி - முன்னேற்றம்’ என்று பேசிக்கொண்டே, ‘ஊழல் - வேண்டியவர்களுக்குச் சலுகை’ என்பதன் மூலம் மாநிலத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டி, சீரழிக்கும் போக்கை அதிவேகமாகக் கொண்டுசெல்வதுதான்.

வேதனையைக் கூறும் புத்தகம்

உத்தராகண்ட் மாநில மக்களின் உண்மையான வேதனைகளை இருதயேஷ் ஜோஷி என்ற பத்திரிகையாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘ஆற்றின் வன்முறை: கேதார்நாத் பேரழிவின் சொல்லப்படாத கதை’(Rage of the River: The Untold Story of the Kedarnath Disaster) என்ற புத்தகம் அம்பலப்படுத்துகிறது. அவரே இந்தியில் எழுதிய (தும் சுப் கியோன் ரஹே கேதார்) என்ற புத்தகத்தின் ஆங்கில மொழியாக்கம் இது. 2013 ஜூனில் உத்தராகண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் ஆற்றங்கரையோர தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வீடுகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டவுடன் அந்த இடத்துக்கு முதலில் சென்று சேதங்களை முழுமையாகப் பார்வையிட்ட நிருபர் அவர்தான். சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருந்தபோது அந்தப் பேரழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பயணிகள் மலையேற்றம், சுற்றுலா மற்றும் ஆலய தரிசனங்களுக்காக உத்தராகண்டில் குவிந்திருந்தனர். ஆற்றங்கரையோர விடுதிகள், சத்திரங்கள், ஓட்டல்கள் எங்கும் மக்களால் நிரம்பி வழிந்தன.

கேதார்நாத்தில் நடந்த சோகங்கள், அதன் பின் நிகழ்வுகள் ஆகியவற்றை ஒட்டியது ஜோஷியின் புத்தகம். இறந்தவர்கள், உயிர் பிழைத்தவர்கள், காப்பாற்றியவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஹெலிகாப்டர் பைலட்டுகளும் தேர்ச்சி பெற்ற மலையேற்ற வீரர்களும் தங்களுடைய உயிரையும் துச்சமாக மதித்து, கொட்டும் மழையிலும் நிலச்சரிவிலும் போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும் மீட்புப் பணிகளைச் சாகசமாகவே செய்து பலரின் உயிரைக் காப்பாற்றி கதாநாயகர்களாக உயர்ந்தனர். அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் நூலின் வில்லன்கள். உதவியும் நிவாரணமும், ஒருங்கிணைப்பும் தேவைப்பட்ட அந்த முக்கியமான கணத்தில், மாநில நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறதா என்றே அடையாளம் காண முடியாதபடி அது தலைமறைவாகியிருந்தது. கண்ணில் பட்ட சில அதிகாரிகளும் எதையும் செய்யவும், சிந்திக்கும் திறனற்றவர்களாகவும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர். அப்போது முதலமைச்சராக இருந்த விஜய் பகுகுணா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று பணிகளை ஒருங்கிணைப்பதற்குப் பதிலாக, மாநிலத்தை விட்டே ஓடி, தனது அரசின் சாதனைகளை டெல்லி நிருபர்களிடையே தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார். அந்த சாதனைகளும் மோசடி மற்றும் போலியானவை என்பது வேறு விஷயம்.

இயற்கைப் பேரழிவு

இயற்கைப் பேரழிவுகள் நடைபெறாமல் தடுத்துவிட முடியாது. ஆனால், திட்டமிட்டுச் செயல்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய சேதங்களையும் பாதிப்புகளையும் கணிசமாகக் குறைக்கலாம். கட்வால் மலைப் பகுதியை வணிக நோக்கத்துக்காகச் சீரழிக்காமல் இருந்திருந்தால் 2013 ஜூனில் ஏற்பட்ட பெருமழையால் மட்டும் அவ்வளவு பெரிய உயிர்ச் சேதங்களும் பொருள் சேதங்களும் ஏற்பட்டிருக்காது. பணத்துக்கு ஆசைப்பட்டு நீண்டு, நெடிது வளர்ந்த மரங்களை வரம்பில்லாமல் வெட்டினர். அரிய கனிமப் பொருட்களுக்காக மலைப் பகுதி மண்ணை அப்படியே திறந்தவெளி கனிமச் சுரங்கமாக்கி வெட்டி எடுத்துச் சென்றனர். மலையை ஒட்டியும் ஆற்றங்கரை நெடுகிலும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக விடுதிகளையும் குடில்களையும் கட்டினர். போதாக்குறைக்கு, மலையில் ஓடும் ஆற்றின் குறுக்கே ஆங்காங்கே அணையைக் கட்டி பெரும் அளவில் நீரைத் தேக்கி வைத்தனர். இந்தச் செயல்களின் கூட்டு விளைவாக கனமழை பெய்தபோது, அது நிலத்தில் ஊற முடியாமல் மணலை அரித்துப் பெருக்கெடுத்து, புயல் வேகத்தில் ஓடி வழியில் எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் வாரிச்சுருட்டி எடுத்துச் சென்று புதைத்தது.

பணத்தாசை காரணமாக மேற்கொண்ட நடவடிக்கையால், ஏராளமான உத்தராகண்ட் மக்கள் எப்படி இறந்தனர் என்பதைச் சில உதாரணங்களுடன் ஜோஷி விளக்குகிறார். 2013 ஜூன் 13-ம் தேதி இரவு விஷ்ணு பிரயாக் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துகொண்டே வந்தது. அந்த அணைத் திட்டம் ஜே.பி. என்ற நிறுவனத்துடையது. கிராமவாசிகள் ஜே.பி. நிறுவன அதிகாரியிடம் ஓடிச் சென்று, ‘அணையைத் திறந்துவிடுங்கள், இல்லாவிட்டால் தண்ணீர் கிராமத்துக்குள் பாய்ந்துவிடும்’ என்று கெஞ்சினர். மின்சாரம் தயாரிக்க அணை நிரம்ப வேண்டும் என்பதால், அதிகாரி அவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்தார். அணை நிரம்பி அதற்கும் மேலே தண்ணீர் பொங்க ஆரம்பித்ததும் அணையின் ஒரு பக்கச் சுவர் உடைந்து நொறுங்கியது; ‘ஹோ’வென்ற இரைச்சலுடன் பெரும் நீர்ப்பரப்பு அந்த வழியாகச் சீறி வெளியேறி, வழியில்பட்ட எல்லாவற்றையும் இழுத்தும் அசைத்தும் வேரோடு பெயர்த்தும் புரட்டிப்போட்டு அடித்துச் சென்றது. அப்படிப் போகிற வழியில் இருந்த எல்லாக் கிராமங்களையும் பதம் பார்த்துக்கொண்டே சென்றது. உத்தராகண்டில் பெருமழையும் நிலச்சரிவும் வெள்ளப் பெருக்கும் அவ்வப்போது ஏற்பட்டு வந்தாலும், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதை லட்சியமே செய்ததில்லை. கூடி முறையிடுவதற்கு மேல் மக்களால் ஏதும் செய்ய முடியவில்லை. சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் வளர்ந்துகொண்டே வந்தன. வணிக நோக்கிலான ஆக்கிரமிப்புகளை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் ஊக்குவித்தனர்.

அருணாசலத்திலும் அழிவு

அதுதான் உத்தராகண்டின் அழிவைப் பற்றிய செய்தி. இதற்கு இணையான இன்னொரு அழிவு முறையை, அருணாசலத்தின் பெரிய நீர்மின் உற்பத்தித் திட்டம் பற்றி அங்குஷ் சைக்கியா என்பவர் எழுதிய சமீபத்திய கட்டுரையைப் படித்துத் தெரிந்துகொண்டேன். பக்கத்து மாநிலமான அசாமைச் சேர்ந்த சைக்கியா, அருணாசலப் பிரதேசத்தில் ஏராளமான நீர்த்தேக்க அணைகளைக் கட்டும் ஆட்சியாளர்களின் கிறுக்குத்தனமான ஆவலையும் அதனால் ஏற்படப்போகும் கடும் விளைவுகளையும் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் 156 அணைகளைக் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அணைகளை ஜேபி, ரிலையன்ஸ், ஜி.வி.கே., ஜிண்டால் போன்ற நிறுவனங்கள் கட்ட உள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மத்தியிலும் மாநில அரசுகளிலும் உள்ள ஆட்சியாளர்கள் இவர்களுக்கு நெருக்கமானவர்களாகிவிடுவர். மாநில அரசியல்வாதிகளுடன் எந்தவித ஆலோசனைகளும் விவாதங்களும் இல்லாமல்தான் இந்தத் திட்டங்கள் இறுதி வடிவம் பெறுகின்றன. அதே சமயம், இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் கிடைக்கும் தொகையில் ஒரு பகுதி முன்கூட்டியே ‘உரியவர்’களுக்கு அளிக்கப்படுகிறது. அணை கட்டுவதை ஆதரிக்கும் ஒரு மாநில அதிகாரிகூட, எந்த ஆலோசனையும் விவாதமும் இல்லாமல் இவை இறுதி செய்யப்படுவது குறித்து அச்சம் தெரிவித்தார். முதலில் மாநில அரசுகளால் அந்தந்த கிராமத்தவர்கள் அழைத்துப் பேசப்பட வேண்டும். பிறகு, அனைவரும் அறியும் வகையில் ஓரிரு அணைகளைக் கட்டி, அதனால் ஏற்படும் நன்மைகள் எவை, தீமைகள் எவை என்று பார்க்க வேண்டும். அப்படியல்லாமல், அருணாசலப் பிரதேசம் என்ற மாநிலம் மீதோ, மக்கள் மீதோ சிறிதும் அக்கறையும் அன்பும் இல்லாத தனியார் நிறுவனங்களின் கைகளில் மாநிலத்தின் ஆறு தொடர்பான உரிமைகள் ஒப்புக்கொடுப்பது பேரழிவுக்கே இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறார் அந்த அதிகாரி.

அணை கட்டுவதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவிக்கும் இரு தரப்பாரின் கருத்துகளையும் தெரிவிக்கிறார் சைக்கியா. ஆனால், அவர் காட்டும் சான்றுகளைப் பார்க்கும்போது, இத்தனை அணைத் திட்டங்களால் நிச்சயம் நன்மை ஏற்படப்போவதில்லை என்று தெரிகிறது.

சேதம் நிச்சயம்

அருணாசலப் பிரதேசம் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். ஊடுருவல்காரர்களின் மிகப் பெரிய தாக்குதல்களுக்கும் இடம்கொடுத்த மாநிலம். நம்முடைய ஆட்சியாளர்கள் அந்த மாநிலத்துக்காக வரைந்திருந்த திட்டத்தைப் பார்க்கும்போது, மாநிலத்தை அழிக்காவிட்டாலும் மிகப் பெரிய அளவில் அணைகளால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கப்போவது நிச்சயம் என்பது உறுதியாகிறது.

சைக்கியாவின் கட்டுரை சென்னையில் பிரசுரமாகும் ‘ஃபௌன்டன் இங்க்’ என்ற பத்திரிகையின் 2016 பிப்ரவரி இதழில் வெளியானது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த அணைத் திட்டங்களுக்கு எதிராக டவாங் என்ற இடத்தில் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்த லாமா லோப்சாங் கியாட்சோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்தக் கைதுக்கு எதிராக லாமாவின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல முயன்றபோது, போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஒரு பவுத்தத் துறவி உட்பட இரண்டு பேர் அந்தச் சம்பவத்தில் இறந்தனர். இச்செய்தியை கொல்கத்தாவிலிருந்து வரும் ‘ஃபிரான்டியர்’ என்ற வார இதழில் படித்தேன். இச்சம்பவம் அருணாசலப் பிரதேச மக்களின் மனங்களில் ஆறாத வடுவை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.

இமய மலையில் கட்டப்படும் எந்தப் பெரிய அணையும் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அளவிட முடியாத சேதங்களை ஏற்படுத்தவல்லவை. இந்தக் கட்டுமானங்களுக்கு ஆகும் செலவு, இவற்றால் கிடைக்கவிருக்கும் பலன், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் உண்டாகும் நஷ்டம் ஆகியவற்றை ஒப்பிடும்போது, இந்தத் திட்டங்களால் லாபத்தைவிட அழிவுதான் அதிகம் என்பது நிச்சயம் புலப்படும். உத்தராகண்ட் மாநிலமும் அருணாசலப் பிரதேசமும் மிகப் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடிய பாதிப்பு வட்டத்தில்தான் இருக்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு அணைகள் உடைந்து தண்ணீர் வெளியேறினால் 2013-ல் ஏற்பட்ட பெருஞ்சேதத்தைப் போல பலமடங்கு அளவுக்கு சேதம் நிச்சயம்.

துக்கம் சுமக்கும் மக்கள்

நாடு விடுதலை ஆனது முதல் பல்லாண்டுகளாக இவ்விரு மலை மாநிலங்களுக்கான நிதியும் மனித ஆற்றலும் முந்தைய ஆட்சியர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. இருதயேஷ் ஜோஷியின் புத்தகத்துக்கு பில் அட்கன் என்ற இந்தியக் குடியுரிமையைப் பெற்ற சமூக ஆர்வலர் முன்னுரை எழுதியிருக்கிறார். “சிப்கோ இயக்கத் தலைவர்களான சுந்தர்லால் பகுகுணா, சண்டி பிரசாத் பட் போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு, இமய மலைப் பகுதியை இயற்கையோடு இயைந்த வகையில் வளப்படுத்துவதை விட்டுவிட்டு, கோடீஸ்வரர்களான ஒப்பந்ததாரர்களின் விருப்பத்தைக் கேட்டு, அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி மலைப் பகுதியில் ஆறுகளை அவற்றின் நீர்ப்போக்கைத் தடுத்து, மிகப்பெரிய நீர்த்தேக்கத்தையும் அணைகளையும் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையின் சரிவுப் பகுதிகள் நீர்த்தேக்கத் திட்டங்களுக்காக நேராக்கப்படுகின்றன. மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டப்பட்டு நிலம் சமன்படுத்தப்படுகிறது. தரைப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை உணராமல் பெருமளவுக்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது. மலையின் காடும் தாவரங்களும் உயிரினங்களும் அழிவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஓயாமல் வெட்டுகிறார்கள், மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள்’’ என்று வருத்தப்படுகிறார் பில் அட்கின்.

“சமவெளிப் பகுதியில் வாழும் செல்வாக்கான மக்களுடைய திருப்திதான் முக்கியம்; இமய மலை சார்ந்த மாநிலங்களோ, அதன் மக்களோ முக்கியம் இல்லை என்று அரசின் கொள்கை கருதுகிறது. மலை மக்களின் இயற்கையான வளங்களைத் தங்களுடைய சுகமான வாழ்க்கைக்கான இடுபொருட்களாக சமவெளிப் பகுதி மக்கள் கருதுகின்றனர். மலையில் வளரும் மூலிகைகள், மரங்களிலிருந்து கிடைக்கும் பிசின்கள், பட்டைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் ஏன் வேர்களுக்காகக்கூட அவற்றை அழிக்கின்றனர். சமவெளி மக்களுக்கான குடிநீரைத் தருவதற்கும் மின் தயாரிப்புக்காக நீரைத் தேக்குவதற்குமான இடம்தான் மலைப் பிரதேசங்கள் என்று நடந்துகொள்கின்றனர். இதனால், ஏற்கெனவே அழிவு ஆரம்பித்துவிட்டது. ஆனால், இவற்றையெல்லாம் நெஞ்சுரம் மிக்க மலைவாழ் மக்கள்தான் தாங்க வேண்டியிருக்கிறது. சுற்றுலாப் பயணியாகவோ யாத்ரீகர்களாகவோ இமய மலைக்குச் செல்லும் நாம்கூட அங்குள்ள மக்களையும் பொருட்களையும் நம்முடைய சொந்தப் பயன்பாட்டுக்கு, அனுபவிப்பதற்கு உரிமை படைத்தவர்களாகவே நம்மைக் கருதிக்கொள்கிறோம்.

உத்தராகண்ட் மக்களும் அருணாசலப் பிரதேச மக்களும் நல்ல தரமான வாழ்க்கையைப் பெறுவதற்கு முழுத் தகுதியும் உரிமையும் உள்ளவர்கள். இப்போதுள்ள பணத்தாசை பிடித்த கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களால் அது சாத்தியமில்லை. முதலில் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காததும், அறம் சார்ந்ததுமான வகையில் மட்டுமே சுற்றுலா ஊக்குவிக்கப்பட வேண்டும்.

மலைப் பிரதேசக் காடுகளின் மேலாண்மையும் மலைப்புறக் கிராமங்களின் வளர்ச்சியும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். நீர்மின் திட்டங்கள் நதிகளின் இயற்கையான போக்கைச் சிறிதும் மாற்றாமலும் மிகச் சிறிய அளவு உற்பத்தி மட்டுமே கொண்டவையாகவும் இருக்க வேண்டும். சூரிய ஒளி வெப்பத்தைப் பயன்படுத்தி, மின்னாற்றல் தயாரிப்பதை அதிகப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமமும் வளர்ச்சித் திட்டத்தில் பங்கேற்பது அவசியமாக்கப்பட வேண்டும். மலையில் வளரும் தாவரங்கள், மரங்களை அழிக்காமல் பெருக்கும் வகையிலும், உயிரினங்கள் வாழும் வகையிலும், இயற்கைக் கண்ணி அறுபடாத வகையிலும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். டெல்லி, டேராடூன், இடாநகரில் இருந்துகொண்டு, மக்களுடைய வேதனையைச் சிறிதும் உணராத, ஊழலில் ஊறிய அதிகாரிகள் கட்டளைப்படி திட்டங்கள் தீட்டப்பட்டு நிறைவேற்றப்படக் கூடாது.

தமிழில்: சாரி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in