விடுதலை பெறப்போகும் சிறைக்கைதிகளின் எதிர்காலமென்ன?

விடுதலை பெறப்போகும் சிறைக்கைதிகளின் எதிர்காலமென்ன?
Updated on
1 min read

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அடைந்தவர்கள் விரைவில் விடுதலையாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்படி விடுதலையாகப்போகும் கைதிகள் தங்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வார்கள் என்ற கேள்வி பரவலாக கேட்கப்படுகிறது. அக்கைதிகளில் சிலர் வெளிநாட்டினர் என்பதால், அவர்களது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அப்படி விடுதலையான கைதிகள் தங்களது எதிர்காலம் பற்றிய திட்டங்களைத் தாங்களேதான் வகுத்துக்கொள்ள வேண்டும். சிறைத்தண்டனை காலத்தின்போது, சிலர் தங்களது கல்வித் தகுதியை அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். அதனடிப்படையில், அவர்கள் தங்கள் வேலைவாய்ப்புக்கான நிறுவனங்களுக்கு மனுசெய்து வேலை தேடிக்கொள்ளலாம் (அ) தங்களது திறமைக்கேற்ப சுயதொழில் தொடங்கி வருமானம் தேடலாம்.

அவர்கள் பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் ஈடுபட முடியுமா என்று சிலர் கேட்கின்றனர். அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த பிறகு, பொதுவாழ்க்கையிலும் அரசியலிலும் ஈடுபடுவதற்கு சட்டப்படியான தடைகள் ஏதுமில்லை. ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் உடனடியாக ஈடுபட முடியாது.

1951-ம் வருடத்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவின்படி, அவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகும், மேலும் 6 வருடத்துக்கு அத்தகைய தேர்தல்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் வெளிநாட்டினர் போட்டியிட முடியாது. தேர்தல்களில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே போட்டியிட முடியும்.

சிறைத்தண்டனை பெற்றவர்கள் சமுதாய நீரோட்டத்தில் இணைந்து தங்களையும் ஒரு கௌரவமிக்க குடிமகனாக வாழ்வதற்குத் தடையேதும் இல்லை. சிறைத்தண்டனை அனுபவித்ததனால் மட்டுமே அவர்கள் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருக்க முடியாது என்று கூறுவது தவறு.

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தலைவர்கள், குடியரசுத் தலைவர்கள் பலர் கொடிய சிறைத்தண்டனையை அனுபவித்த பிறகுதான், அப்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சமீபத்தில் காலமான தென்னாப்பிரிக்காவின் தலைவர் நெல்சன் மண்டேலா தன் வாழ்வில் பெரும்பகுதியைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னே கழித்தவர்தான்.

கைதிகளில் சிலர் வெளிநாட்டவர் என்பதால், உடனடியாக அவர்களை அவர்களது விருப்பத்துக்கு விரோதமாக நாடுகடத்த முடியாது. வேண்டுமானால், அவர்களை அகதிகளாகக் கருதி, இந்நாட்டிலேயே சில கட்டுப்பாடுகளுடன் தங்களது வாழ்க்கையைப் புனரமைத்துக்கொள்ள அரசு உதவி செய்யலாம்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் நம்முடைய குற்றவியல் தண்டனை முறை மாறுகால், மாறுகை வாங்கும் அடிப்படையில் அமைந்ததல்ல. மாறாக, ஒரு குற்றவாளிக்குத் தண்டனை அளித்துச் சிறையில் வைப்பதன் மூலம், அவரிடம் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தித் தண்டனைக் காலத்துக்குப் பிறகு பொதுவாழ்வில் ஈடுபட வைக்கும் சீர்திருத்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in