Published : 23 Apr 2017 10:54 AM
Last Updated : 23 Apr 2017 10:54 AM

இந்தி பேசாத மாநிலங்கள் மீது எறியப்பட்டிருக்கும் கொத்துக்குண்டு... என்ன செய்யப்போகிறோம்?

முதன்முறையாகத் தமிழகம் தவிர்த்த இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல்வாதிகளும்கூட அச்சப்படக்கூடியதாக அது இருந்தது. தனது முயற்சியில் மனம் தளராத மோடி அரசு மிகப் பெரிய கொத்துக்குண்டு ஒன்றை இந்தி பேசாத மாநிலங்களின் மீது வீசியிருக்கிறது. ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு என்கிற மத்திய அரசுக் குழு ஒன்றின் பரிந்துரைகளைக் கடந்த மார்ச் 31, 2017-ல் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்று ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தப் பரிந்துரைகள் நமது வேலைவாய்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் மீதான கொடூரமான தாக்குதலாக அமைந்திருக்கின்றன.

குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் எல்லோரும், அவர்களுக்கு இந்தி எழுதப் பேசத் தெரியும் என்கிற பட்சத்தில், நாடாளுமன்றத்தில் இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்று பரிந்துரை 105 கூறுகிறது. இந்திய நாடாளுமன்றம் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது எனும் அடிப்படையையே இது மீறுகிறது.

யாருடைய நாடாளுமன்றம்?

இந்தியில் பேசத் தெரியாதவர்களுக்குப் பிரச்சினை இல்லைதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு சித்து விளையாட்டை இந்த இடத்தில் விளையாடியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது மாநில மொழிகளைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யும் இந்திய அரசியல்சாசனத்தின் கூறு 120(2) ஐ உறுதிப்படுத்துவதற்காக முன்முயற்சி எடுக்கப்பட வேண்டும். இதற்கு அடுத்த பரிந்துரையான 106 கூறுகிறது. இந்தப் பரிந்துரை ஏற்கப்படவில்லை. ஆனால், பரிந்துரை 106-க்குச் சாராம்சமாக உள்ள பரிந்துரை 105 உறுதிப்படுத்திவிடுகிறது. கூறு 120 (2)-ஐ நாடி அவர்கள் செல்வதற்கான காரணம் மிகவும் அபாயகரமானது. 1950-ல் தொடங்கி அடுத்த 15 ஆண்டுகள் கழித்தவுடன் நாடாளுமன்றத்திலிருந்து ஆங்கிலத்தை நீக்க வேண்டும் என்று அந்தக் கூறு முன்மொழிகிறது. நமது மொழிப் போராட்டங்களின் காரணமாக, அந்த 15 ஆண்டுகள் என்கிற எல்லையைத் தாண்டி, இன்னமும் ஆங்கிலம் நீடித்துவருகிறது. நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டால், எந்த மொழி இணைப்பு மொழியாக இருக்கும்? இந்தி!

இது இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து வரக்கூடிய இந்தி தெரியாத ஒரு எம்பி அமைச்சராக மட்டுமல்ல, உறுப்பினராகக்கூடச் செயல்பட முடியாத ஒரு நிலையைத் திட்டமிட்டு உருவாக்குகிறது மத்திய அரசு. ஏற்கெனவே, பிறப்புவீத மாற்றங்கள் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவதற்கான அபாயத்தில் நாம் இருக்கிறோம் . 1989-ல் உருவான தேசிய முன்னணி அரசு தொடங்கி ஐமுகூ வரை, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக, தென் மாநிலங்களின் உறுப்பினர்கள் மத்திய அரசில் முக்கியத்துவம் வகித்துவந்தார்கள். அதை ஒழிப்பதென்பது இப்போது வட இந்தியர்களின் ஆசையாக இருக்கிறது. இன்றைய மோடி அரசு வட இந்திய - மேற்கிந்தியக் கூட்டரசு. அதைப் போலவே, தங்கள் மாநிலங்களை வளர்க்காமல், வளர்ந்த மாநிலங்களில் உருவாகும் தொழில், வேலை, உயர்கல்வி வாய்ப்புகளையும் சுளையாக விழுங்கிவிட வேண்டும் என்பதுதான் இன்று அவர்களின் ‘தீர்வு’ம். அதற்கான மிகப் பெரிய ஆயுதம்தான் இந்தி.

யாருடைய மொழி கட்டாயம்?

பல்வேறு உலக அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டுதான், நாம் தாய் மொழியை ஒரு பாட மொழியாகவாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடிவருகிறோம். ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்றாலும் அதன் முக்கியத்துவம் கருதி அதைக் கற்பதற்கான வழிகளை நாடுகிறோம். இந்தியையோ மற்ற மொழியையோ விருப்பத்தின் அடிப்படையில் கற்கலாம் என்கிறோம். ஆனால், இந்திய அரசு என்ன சொல்கிறது?

அதனுடைய 47-வது பரிந்துரை இந்தியைப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டுமென நாடாளுமன்றம் சட்டம் இயற்றச் சொல்லி வலியுறுத்துகிறது. இதை நேரடியாக அப்படியே அமல்படுத்த இயலாத சட்டச் சூழல் இருப்பதால், தமிழ்நாடு போன்ற சி பிரிவு மாநிலங்களில் இதை மாநில அரசுகளோடு கலந்தாலோசித்துச் செய்ய வேண்டும் என்றும் மற்ற இடங்களில் இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரை திருத்தப்பட்டிருக்கிறது.

மாநிலங்களின் உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்படுகிற இந்தச் சமயத்தில், மாநிலங்களுடனான ஆலோசனை என்பதற்கு என்ன அர்த்தம்? சிவப்பு விளக்கு வேண்டாம் என்று மோடி சொன்ன அடுத்த நிமிடம், தானே காரில் ஏறித் தனது அதிகார விளக்கைத் தானே அகற்றும் எடப்பாடி பழனிச்சாமிகள், இந்தப் பரிந்துரைக்கு எதிராக இருக்கப்போகிறார்களா என்ன?

சிபிஎஸ்இ பள்ளிகளில் இப்போது இந்தியைக் கட்டாயப்படுத்தி, நாளை மற்ற பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயப்படுத்துகிற தனது திணிப்புக்கொள்கையை, 1938 முதல் இன்று வரை இந்தி வெறியர்கள் கைவிடவில்லை. இதை ஒட்டியே டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் அஷ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார்.

யாருக்கு வேலைவாய்ப்பு?

பரிந்துரைகளில் பல சூட்சுமமானவை. பரிந்துரைகள் 48, 88 ஆகியவை மத்திய அரசின் விளம்பரங்களைப் பற்றிப் பேசுகின்றன. வெளியிடப்படும் விளம்பரங்களில், குறைந்தபட்சம் 50% விளம்பரங்கள் இந்தியில் இருக்க வேண்டும் என்றும் மீதி விளம்பரங்கள் ஆங்கிலத்திலும் மாநில மொழிகளிலும் இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இதிலேயே ஆங்கிலமும் இந்தியும் சரிசமமான ஆட்சிமொழிகள் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஆனால், இந்தப் பரிந்துரைகள் திருத்தப்பட்டு, ஆங்கிலத்திலும் மாநில மொழிகளிலும் ஒரு விளம்பரம் வெளியிடப்படுமானால் கட்டாயமாக அதை இந்தியிலும் வெளியிட்டாக வேண்டும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

அதாவது, ஒருவேளை கோயம்புத்தூரிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கி ஒரு விளம்பரத்தைத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் வெளியிட்டால், கட்டாயம் அதை இந்தியிலும் வெளியிட்டாக வேண்டும். எப்படி வெளியிட வேண்டுமாம்? அதை பரிந்துரை 51 சொல்கிறது: விளம்பரத்துக்காக அதிகம் செலவிடக் கூடாது என்பதற்காக (!), அந்த விளம்பரங்கள் இந்திச் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களில் பெரிய அளவில் வெளியிடப்பட வேண்டும். ஆனால், ஆங்கிலச் செய்தித்தாளில் அதன் நடு அல்லது கடைசிப் பக்கங்களில் சிறிய அளவில் வெளியிட வேண்டும் (செளகரியமாக, மாநில மொழி தினசரிகளைப் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை). முடிந்தவரை ஆங்கிலம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது பரிந்துரை 49.

இங்கே ஆங்கிலம் என்பது அந்நிய மொழி இல்லை நண்பர்களே, இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த நம்முடைய இணைப்பு மொழி. அதைத் துண்டிக்க வேண்டும் என்கிறது டெல்லி. தமிழ்நாட்டின் மத்திய அரசு, பொதுத்துறை, வங்கிகளில் நிரம்பிக்கொண்டிருக்கிற பணியிடங்களில் யார் வந்து அமர்கிறார்கள் என்பதோடு இது தொடர்புடையது.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்பு தொடர்பான ஒரு விளம்பரத்தைப் பார்க்க ‘தைனிக் ஜாக்ரன்’ அல்லது ‘ராஜஸ்தான் பத்ரிகா’வை இனி நீங்கள் தேட வேண்டும் என்பதுதான் இதன் நிஜமான அர்த்தம். மத்திய அரசின் இந்தி ஆதிக்கக் கொள்கைகளைக் கேள்வியே கேட்காமல் வேடிக்கை பார்க்கும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் இந்தப் பரிந்துரைகள் சமர்ப்பணம்.

யாருக்குக் கல்வி வசதிகள்?

வேலைவாய்ப்பு இந்திக்காரர்களுக்கு மட்டும்தான் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியாத நிலையில், இந்திக் கல்வி கட்டாயம் என்கிற அஸ்திவாரத்தை அமைக்கிறது மத்திய அரசு. (பரிந்துரைகள் 44,46).

பரிந்துரை 35 மிகவும் விஷமமானது. அது இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில்கூட இந்தியில் தேர்வு எழுத வாய்ப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்கிறது. எவ்வளவு நீட்டான யோசனை? நாளை உத்தர பிரதேச மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கேயுள்ள உயர் கல்வி நிலையங்களில் நிரம்புவார்கள். அவர்களுக்கு நீங்கள் இந்தியிலேயே பாடம் சொல்லி இந்தியிலேயே தேர்வுவைக்க வேண்டுமாம் (அதாவது வாத்தியாரும் இந்திக்காரராக இருக்க வேண்டும்). அவர்கள் இங்கேயே தேர்ச்சிபெற்று இங்கேயே அரசு அலுவலகங்களில் வேலைசெய்வார்கள்!

நாம் தமிழில் தேர்வுவைத்தாலுமே, அதில் ஹரியாணாக்காரர்கள் 25-க்கு 24 மதிப்பெண் எடுத்துவிடுகிறார்கள்! (சமீபத்தில் அஞ்சல் துறையில் நடந்த இந்த மோசடி பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்). அப்புறம் நாம் எப்படி இந்திக்காரர்களோடு இந்தியிலேயே போட்டி போடப்போகிறோம்? நேற்றுவரை, தமிழ்நாட்டுக்கு வெளியே வேலை வேண்டுமா இந்தியைப் படி என்றார்கள். ஆனால் இனி, தமிழ்நாட்டுக்கு உள்ளேயே வேலை வேண்டுமா, இந்தியைப் படி என்கிறார்கள். நாளை தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எதற்கு வேலை, அதை இந்திக்காரருக்குக் கொடு என்பார்கள்.

கருகத் திருவுளமோ?

இந்தியை மேம்படுத்துவதற்கான, அதைப் பரப்புவதற்கான சில பரிந்துரைகளைப் பொறுத்தவரை அதை நாம் மறுக்கப்போவதில்லை. நாம் கேட்பவை எளிமையானவை: எமது மொழிகளுக்கும் சம உரிமை கொடு, இந்தியைக் கட்டாயமாக்காதே, ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்திருக்கும் நிலையில் மாற்றம் செய்யாதே என்பதுதான்.

உயிர்த் தியாகங்கள் பல செய்து, மூன்று தலைமுறைகளாகப் போராடிப் பெற்ற பல மொழியுரிமைகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை.

தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்: இந்திய ஆட்சி மொழிகள் (ஒன்றியத்தின் அலுவலக நோக்கங்களுக்கான பயன்பாடு) விதிகள் 1976 (திருத்தம், 1987) ஆனது, ஆட்சிமொழிச் சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது. இந்தச் சட்டமானது, இந்தியா முழுமைக்கும் பொருந்தும், தமிழ்நாடு நீங்கலாக என்று மேற்கண்ட விதிகள் ஆவணத்தின் பிரிவு 1 இரண்டாவது அம்சம் கூறுகிறது (They shall extend to the whole of India, except the State of Tamil Nadu).

இந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான், நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டு இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பரிந்துரைகள் தமிழகத்துக்கு சட்டரீதியாகவே பொருந்தாதவை ஆகும். எனவே, தமிழ்நாட்டின் மொழியுரிமை, வேலைவாய்ப்பு உரிமை, தமிழகத்தில் பணியிலுள்ள மத்திய அரசு ஊழியர்களின் உரிமை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை ஆகியவற்றைக் காப்பதற்கு, முதல்கட்டமாக இந்தச் சட்டப் பாதுகாப்பை நாம் முன்னிறுத்த வேண்டும். ஆனால், எந்த நிமிடமும் தூக்கியெறியப்பட வாய்ப்புள்ள ஒரு ‘பாதுகாப்பு’தான் இது என்பதால், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே தமிழை ஒன்றிய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஆக்க நாம் போராட வேண்டும்.

மோடிக்குப் பிரியமான இன்னொரு வழி

நம்முடைய குரல்களுக்கும் போராட்டத்துக்கும் பதில் இருக்குமா? மன்மோகன் சிங் என்கிற பஞ்சாபியின் ஆட்சிக் காலத்தில், ப.சிதம்பரம் என்கிற தமிழர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தொகுக்கப்பட்டு, இப்போது நரேந்திர மோடி என்கிற குஜராத்தியரால் வலியுறுத்தப்பட்டு, பிரணாப் முகர்ஜி என்கிற வங்காளியின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் இந்தப் பரிந்துரைகளின் பின்னால் உள்ள மத்திய அரசை, இந்தி ஏகாதிபத்தியம் என்று மிகச் சரியாகவே நமது தமிழ் முன்னோடிகள் அழைத்தார்கள். அது அவ்வளவு எளிதில் நமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காது. ஆனால், மோடி அரசு தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஆலோசனை நம்மிடம் இருக்கிறது: எதற்காக 117 பரிந்துரைகள் மோடிஜி? அவற்றுக்கு மாறாக, ஒரே ஒரு பரிந்துரையை நீங்கள் நிறைவேற்றிக்கொள்வது எளிதாக இருக்கும். “பேசாமல், இந்தி பேசாத மக்கள் இந்தியாவின் இரண்டாம்தரக் குடிமக்கள் என்று அறிவிக்கப்பட வேண்டும்.”

ஆழி செந்தில்நாதன் மொழிநிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (Campaign for Language Equality and Rights, CLEAR) அனைத்திந்தியச் செயலர் தொடர்புக்கு : zsenthil@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x