காவல் கெடுபிடியில் ராவல்பிண்டி

காவல் கெடுபிடியில் ராவல்பிண்டி
Updated on
2 min read

தாலிபன்கள் என்ன காலி பண்ணுவது? எங்கள் தேசத்தை நாங்களே ஒருவழி பண்ணித் தொலைப்போம் என்று வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கிறார்கள் சில பாகிஸ்தான் பரோபகாரிகள். ராவல்பிண்டியில் ஒரு சிறு சந்துமுனை கலாட்டாவாக ஆரம்பித்து, பரபரவென்று பெரிய கலவரமாகி, பலபேர் அடிபட்டு ஆசுபத்திரிக்குப் போய்ச் சேருமளவு பரிமாணம் எய்தி, ஊரடங்கு உத்தரவு போடுமளவுக்குச் சூடு பிடித்த இந்த விவகாரம் இன்று ராவல்பிண்டிக்கு வெளியேயும் மெல்ல மெல்லத் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.

ஷியாக்களுக்கும் சன்னிகளுக்குமான சரித்திர காலப் பகையின் தொடர்ச்சியே இந்தக் கலவரத்துக்கும் ஆதாரப் புள்ளி.

ராவல்பிண்டியில் வசிக்கும் ஷியா முஸ்லிம்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஊர்வலம் போயிருக்கிறார்கள். போன வழியில் சன்னி பிரிவு மௌல்விகளுக்கான கல்லூரி ஒன்று இருக்கிறது. ஊர்வலர்கள் அந்தக் கல்லூரியைக் கடக்கும் சமயம் உள்ளிருந்து சிலபேர் ஷியா பிரிவினரை அவமதிக்கும் விதமாக ஏதோ சத்தம் போட்டதாகவும் பதிலுக்கு இவர்கள் எச்சரிக்கை விடுக்க, எச்சரிக்கைக்கு பதில் எச்சரிக்கை, பதிலுக்கு பதில் கோபம் என்று ஆரம்பித்து அடிதடி வரைக்கும் போயிருக்கிறது.

ஒரு கலவரம் தொடங்க இந்த ஒரு கண்ணி பத்தாதா? இரண்டு நாளில் ஒன்பது பேர் பலி, அம்பதுக்கும் மேற்பட்டோர் ஆசுபத்திரி வாசம், கடையடைப்பு, ஊரடங்கு உத்தரவு, வீதியெங்கும் போலீஸ் இன்னபிற.

விவகாரம் இன்னும் பரவி, மேலும் தீவிரமாகும்போல் தோன்றியதால் ராவல்பிண்டி நகரத்தில் இருந்து வெளியூர் எதற்கும் அழைக்க முடியாதபடிக்கு மொபைல் நெட் ஒர்க்குகள் அனைத்தையும் முடக்கி வைத்துவிட்டார்கள். நாலடி எடுத்து வைத்தால் அந்தப் பக்கம் இஸ்லாமாபாத். ஆனால் போலீஸ் அனுமதியின்றி யாரும் போய்விட முடியாது.

ராவல்பிண்டியில் நடக்கிற கலவரம் குறித்த முழு விவரம் இஸ்லாமாபாத்துக்குத் தெரிந்துவிட்டால் வினாடிப் பொழுதில் தேசம் முழுதும் பரவிவிடும்; அதன்பின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் போய்விடும் என்பதால்தான் அரசாங்கம் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்தது. ஆனால் மொபைல் நெட் ஒர்க் கெட்டுப் போனதிலேயே ஏதோ விவகாரம் இருக்கிறது என்று புரிந்துகொண்டு ஆளாளுக்கு இஷ்டத்துக்குத் தகவல்களைத் திரிக்கத் தொடங்கிவிட, தலையில் கைவைத்துவிட்டது காவல் துறை.

ராவல்பிண்டியில் உள்ள ஒரு ஷியா மசூதி தாக்கப்பட்டிருக்கிறது. சேதாரம் சற்றுப் பெரிதுதான். பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீஃப் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட மனிதர். கலவரக்காரர்களைச் சும்மா விடமாட்டோம், காவல் துறை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்று வழக்கமான வசனங்களை அவசரத்துக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, என்ன செய்தால் இது மேலும் பரவாமல் இருக்கச் செய்யலாம் என்று தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

பிரச்னை தாலிபன்கள் வசமோ, வேறு தீவிரவாதிகளின் வசமோ போய்விட்டால் கட்டுப்படுத்துவது சிரமம். அவரது பெருங்கவலை அதுதான். ஏற்கெனவே ஒவ்வொரு நாள் கழிவதும் பெரும்பாடாக உணரும் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை இந்தப் புதிய கலவர பூதம் இன்னும் சிக்கல் சிங்காரவேலனாக்கியிருக்கிறது. எப்படியாவது இது ராவல்பிண்டியைத் தாண்டி வெளியே வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் அவர் பஞ்சாப் முதல்வரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

முதல்வர் பெருமானுக்கு என்ன சங்கடமென்றால் இதனைச் சாக்காக வைத்து பஞ்சாப் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி இப்போதே நாடாளுமன்றத்தில் குமுற ஆரம்பித்துவிட்டார்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாது போகும் சூழல் உருவானால் பிரதமர் அதைத்தான் செய்வார், இடைக்கால நிவாரணமாக.

கடந்த வெள்ளிக்கிழமை முஹம்மது நபியின் பேரனான ஹுசைனின் மறைவு தினம். ஷியாக்களுக்கு அது மிக முக்கியமான நாள். மேற்படி ஊர்வலமே அதனை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டதுதான். ஒவ்வோர் ஆண்டும் இந்த முஹர்ரம் பத்தாம் நாள் ஊர்வலத்தில் ஏதாவது பிரச்னை வருவது வழக்கமே என்றாலும் இந்த வருஷம் எதிர்பாரா விதமாக அது பெரிதானதில் பாகிஸ்தான் மக்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள்.

என்னவாவது செய்து அமைதியை மீட்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் பஞ்சாப் முதல்வர். என்ன செய்தால் ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்கலாம் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார் நவாஸ் ஷெரீஃப்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in