Last Updated : 25 Oct, 2013 02:36 PM

 

Published : 25 Oct 2013 02:36 PM
Last Updated : 25 Oct 2013 02:36 PM

துன்பவியலில் தொல்லியல் சின்னம்

புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தின் வடக்குப் பகுதியை விரிவுபடுத்த விழைந்தனர் காலனி ஆதிக்கவாதிகள். இதனால் சென்னமல்லீஸ்வரர், சென்ன கேசவர் கோயில்கள் தீக்கிரையாயின. கொதித்தெழுந்த மக்களுக்கு மானியமும் பூக்கடைக்கு மேற்கே நிலமும் கொடுத்து சமாதானப் படுத்தினர். அரண்மனைக்காரத் தெருவின் தெற்கே இருந்த மணற்குன்றை தகர்த்தனர். ஆக்கிரமித்த நிலத்தில் கலங்கரை விளக்கம் ஒன்றை நிறுவினர். 1862ல் தொடங்கி தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிய உயர் நீதிமன்றத்துக்கு 1890-ல் புதிய கட்டிடம் அந்த வளாகத்தில் எழுப்பப்பட்டது. அக்கட்டிடத்துக்கு மேலேயே புதிய கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது.

அதன் பிரமாண்டத்தைப் பார்த்து செஞ்சி ஏகாம்பர முதலியார் அலங்காரச் சிந்து எழுதியதில் சில வரிகள் :

“அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி

அடுத்தசுத்திலும் பெருங் கொடத்தை போல வெகுகூட்டி

கண்டவர் பிரம்மிக்க கலசமதிலே மாட்டி

கண்கள் சிதறும்படி தங்ககிலுட்டுவூட்டி...'

இரு கலங்கரை விளக்கங்களும் உயர் நீதிமன்றக் கட்டிடமும் தொல்லியல் சின்னங்கள் என அறிவிக்கப்பட்ட பின்னும் விரிவாக்கம் என்ற பெயரில், புதுப்புது கட்டிடங்கள் முளைத்து வளாகமே கட்டிடக்காடாக (concrete jungle) மாறி விட்டது.

“ஹைகோர்ட் பீச்“ என்றழைக்கப்பட்ட வட சென்னை கடற்கரையை துறைமுக நிர்வாகம் எடுத்துக்கொண்ட பின்னர், பசுமை வளாகமாக இருந்த அந்த வளாகத்தில் மாலையில் காற்று வாங்க வட சென்னைவாசிகள் பயன்படுத்தினர். சட்டக் கல்லூரி, ஜார்ஜ் நகர பள்ளி மாணவர்களும் விளையாடி வந்த பெரிய மைதானம் “சுவாச வெளி” (lung space) யாக விளங்கியது. தலைமை நீதிபதி வீராசாமி காலத்தில் தென் மேற்கில் அமைக்கப்பட்ட விரைவுப் போக்குவரத்து பேருந்து நிலையம் பலத்த முயற்சிகளுக்கு பின்னர் உயர் நீதிமன்றத்திடமே ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் அங்கிருந்து அகற்றப்பட்ட சித்திரைத் திருநாள் மகாராஜாவின் சிலை மட்டும் அடையாறு கோயில் ஒன்றிலேயே தங்கிவிட்டது.

வடகிழக்கில் இருந்த வனப்பகுதி அழிக்கப்பட்டு, அழகியல் தன்மையற்ற உயர் நீதிமன்றத்தின் இணைப்புக் கட்டிடம் உருவானது. வளாகம் முழுவதும் கட்டிடங்களாலேயே தற்போது நிறைந்து சுவாச வெளிகள் முற்றும் அழிக்கப்பட்டுவிட்டன. ஏற்கனவே இருந்த 3 நீதிமன்ற கட்டிடங்களும், சட்டக் கல்லூரி தவிர தற்போது 20 கட்டிடங்களுக்கு மேல் கட்டப்பட்டு, மேலும் புதிய கட்டிடங்களும் வரவுள்ளன. விழா நினைவுகள் என்ற பெயரில் புது கட்டமைப்புகளும் உருவாகியுள்ளன. 150-ம் வருட நினைவையொட்டி தெற்கு வாயிலில் “யானைக்கவுனி“ போன்ற நுழைவு வாயில் நிறுவ பல லட்ச ரூபாய் செலவானது.

தொல்லியல் சின்னங்களின் 300 மீட்டர் தொலைவுக்குள் புது கட்டிடங்களோ அமைப்புகளோ உருவாக்கக்கூடாது என்று விதி இருப்பினும் உயர் நீதிமன்ற வளாகத்துக்கு அவ்விதி ஏன் பொருந்தவில்லை? கோட்டை எதிரில் “சட்டமன்றத்தின் வைர விழா வளைவு“ அமைக்க விழைந்த முதலமைச்சரின் திட்டமே அவ்விதியின் காரணமாக மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து பல புதிய கட்டிடங்கள் உருவாகுவது தவிர்க்கப்பட வேண்டும். தொல்லியல் சின்னங்களின் மேற்பார்வைக்கு உருவாக்கப்பட்ட நீதிபதிகள் குழு இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

இந்தியாவிலேயே மிக அதிகமான நீதிமன்றங்களை உள்ளடக்கியுள்ள வளாகம் இது என்பது பெருமைதரும் விஷயமல்ல. இன்றைய காலத்தின் கட்டாயம் அதிகார மையங்கள் பரவலாக்கப்பட வேண்டுமென்பதே! வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் அசுர விரிவாக்கத்தில் வளாகத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்கள் பல திக்குகளிலும் இடம்பெயர்வதே உயர் நீதிமன்றத்தின் மாட்சிமையை எதிர்காலத்தில் காப்பாற்றும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x