5 கேள்விகள், 5 பதில்கள்: பொறுப்புணர்ச்சியும் சுதந்திரமும் இரட்டைக் குழந்தைகள் - ஞாநி

5 கேள்விகள், 5 பதில்கள்: பொறுப்புணர்ச்சியும் சுதந்திரமும் இரட்டைக் குழந்தைகள் - ஞாநி
Updated on
1 min read

பூசி மெழுகாமல், பட்டென்று வெளிப்படையாகப் போட்டுடைக்கும் தைரியமான பத்திரிகையாளர், எழுத்தாளர்களில் ஒருவர் ஞாநி. பத்திரிகைகளைக் கடந்து நாடகம், அரசியல், ஃபேஸ்புக், தொலைக்காட்சி விவாதம் என்று பரபரப்பாக இயங்கிவருபவர். தன் கருத்துக்களைக் களத்திலும் செயல்படுத்திப் பார்ப்பவர். அவருடன் ஒரு மின்னல் வேகப் பேட்டி:

புத்தகக் காட்சி என்றாலே உங்கள் கருத்துக் கணிப்பும் நினைவுக்கு வரும். அதை ஏன் தொடரவில்லை?

என் தற்போதைய உடல்நிலைதான் காரணம். வாரத்தில் மூன்று நாட்கள் ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை மேற்கொள்வதால், தினசரி என்னால் புத்தகக் காட்சி அரங்குக்கு வர இயலாது. தினமும் நான் நேரே வராமல் கருத்துக் கணிப்பை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. அநேகமாக, அடுத்த வருடம் இதற்கும் ஒரு தீர்வைக் கண்பிடித்து விடுவேன்.

தமிழகப் புத்தகத் திருவிழாக்கள் திருப்தி தருகின்றனவா?

சென்னை, ஈரோடு, நெய்வேலி விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன. திருப்பூர் போன்ற இடங்களில் மிகுந்த சிரமத்துடனே நடத்துகிறார்கள். எங்கும் அரசு ஆதரவு பெரிதாக இல்லை. அடிப்படையில் இவை வணிக நோக்கத்திலானவை என்பதால், வர்த்தகர் களே முன்னிலையில் நிற்கிறார்கள். எனினும், இவையெல்லாம் எழுத்தாளர்களை முதன்மைப் படுத்தினால், வணிகமும் தழைக்கும்; அறிவை மதிக்கும் ரசனையும் வளரும்.

தற்போது உங்களுக்குப் பிடித்த பெரியாரியர்கள், காந்தியவாதிகள், கம்யூனிஸ்ட்கள்? வலதுசாரி எழுத்தாளர் களில் யாரைப் பிடிக்கிறது?

விடுதலை ராஜேந்திரன், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், நல்லகண்ணு. வலதுசாரி எழுத்தாளர்களில் தமிழில் பத்ரி சேஷாத்ரி, ஆங்கிலத்தில் சசி தரூர். வலதுசாரி என்பவர் மத அடிப்படைவாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிப்பவர்கள் இவர்கள்.

கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்புபவர் நீங்கள். ஆனால், ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் செயல்பாடு வேறுவிதமாக இருந்ததே?

பொறுப்புணர்ச்சியும் சுதந்திரமும் இரட்டைக் குழந்தைகள். ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை. வரைமுறை என்பது பொறுப்புணர்ச்சி இல்லாதவர்களை நெறிப்படுத்தவே. சுதந்திரத்தை மறுக்க அல்ல.

அடுத்தகட்டத் திட்டம்?

எஞ்சியிருக்கும் சக்தியை 10 முதல் 18 வயதுடையவர்களுடன் பல வடிவங்களில் உரையாடச் செலவிடுவேன். நல்ல அரசியலுக்கான, நல்ல சமூகத்துக்கான, நல்ல ரசனைக்கான, நல்ல பண்பாட்டுக்கான விதைகளை இளம் நெஞ்சம் என்ற மண்ணில் ஊன்றுவதே வழி. சில நவீன இலக்கியங்களை டிஜிட்டல் திரைப்படங்களாக்குவது இன்னொரு திட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in