Last Updated : 04 Feb, 2014 10:02 AM

 

Published : 04 Feb 2014 10:02 AM
Last Updated : 04 Feb 2014 10:02 AM

தொழுநோய் இழிநோய் அல்ல

வருஷாவருஷம் ‘உலகத் தொழுநோய் ஒழிப்பு தினம்’ கொண்டாடினாலும் இன்னமும் தொழுநோயாளிகளை இழிவாகப் பார்க்கும் நம் சமூகத்தின் மனம் மாறவில்லை. எந்த ஒரு வெறுப்புக்கும் ஆழமான பின்னணி இருக்கும். தொழுநோயாளிகள் மீதான வெறுப்புக்கு அப்படி அமைந்த பின்னணியில் 1898-ல் உருவாக்கப்பட்ட காலனியகாலச் சட்டமும் ஒரு காரணம்.

கடுமையான சட்டம்

1892-ல் இந்தியாவுக்கு வந்த ‘தொழுநோய் ஆணையம்’ கடுமையான சட்டத்தை ஏற்படுத்தக் கோரியதன் விளைவாக அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. வறிய தொழுநோயாளி களுக்கு அடைக்கலம் கொடுக்க அந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் தொழுநோயாளிகளைப் பிச்சைக்காரர்களாக ஆக்கியதோடு, அந்த நோயாளிகளில் வசதிபடைத்தோரின் குடியுரிமைகள்கூட நகராட்சி சட்டங்களால் பறிக்கப்பட்டது.

அந்த நோயுற்றோர், நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர்களாகக்கூடத் தேர்தலில் நிற்க முடியாதபடி தகுதியிழப்பு செய்யப்பட்டனர். அந்த நோயாளிகளின் நடமாட்டத்தை முடக்கிவைக்கும் வகையில், ரயில் வண்டிகளிலும் பேருந்துகளிலும் அவர்கள் பயணம் செய்வது தடைசெய்யப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களை அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தியதுபோல தொழுநோயாளிகள் சமூகப் பாதுகாப்பின்றி சரணாலயங்களில் அடைக்கப்பட்ட கொடுமைகள் இங்கு நடந்தேறின.

ஊடகங்களின் அறியாமை

சட்டத் தடைகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் தவறான கருத்துகள் ஊடகங்களின் மூலம் பரவின. ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில், தஞ்சை ராமையா தாஸ் எழுதி, எம்.ஆர். ராதா வாயசைத்து, சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் பாடிய பாடலுடன் வந்த திரைப்படக் காட்சிகளைத் தமிழகத்தின் பட்டிதொட்டிகளிலெல்லாம் பார்வையிட்டனர்:

“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வ தென்பதேது?” என்ற அப்பாடலின் வரிகளைத் தவறான புரிதலுடன் முணுமுணுப்போர் ஆயிரக் கணக்கில் உண்டு.

மகாத்மாவின் மனிதநேயம்

சட்டங்களால் பாதிக்கப்பட்டு, சமூகத்தால் புறக்கணிக்கப் பட்ட தொழுநோயாளிகளின் முன்னேற்றத்துக்காக 1925-ல் ‘இந்தியத் தொழுநோயாளிகள் சங்கம்’ உருவாக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் ‘ஹிந்த் குஷ்ட நிவாரண சங்கம்’ என்று அவ்வமைப்பின் பெயர் மாற்றப்பட்டது. அந்த நோயுற்றோருக்குக் கரிசனத்துடன் சிகிச்சை அளித்து, மீட்டு மறுவாழ்வு தரும் இயக்கத்தை காந்தி தமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார். தொழுநோயாளிகளைப் பற்றிய பொதுப்பார்வையை மாற்ற முனைந்த காந்தி, புதிய இந்தியாவின் ‘நிர்மாணத் திட்ட’த்தில் 1941-ல் இப்படிக் கூறினார்:

“குஷ்டரோகி என்னும் வார்த்தையே துர்நாற்றத்தைத் தருகிறது. மத்திய ஆப்பிரிக்காவுக்கு அடுத்தாற்போல ஒருக்கால் இந்தியாவே தொழுநோயாளிகளின் இல்லமாக இருக்கக் கூடும். இருப்பினும், நம்மிடையே மிக உயர்ந்த வர்கள் எப்படி நம்மில் ஒருவரோ அப்படியேதான் குஷ்டரோகிகளும் நம்மைச் சார்ந்தவர்களே. உயர்ந்த மனிதர்கள் மற்றவர்களின் கவனத்துக்கு ஏங்கி நிற்பவர்கள் அல்ல என்றபோதிலும், நம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார்கள். ஆனால், விசேஷமாகக் கவனிக்கப்பட வேண்டிய குஷ்டரோகிகளோ மனமறிந்து ஒதுக்கப்படுகிறார்கள். இதயமற்ற செயல் என்றே இதனைக் குறிப்பிடத் தோன்றுகிறது.’’

காந்தியும் ஆச்சார்யா வினோபா பாவேயும் தொழு நோயாளிகளின் சிகிச்சைகளுக்கும் மறுவாழ்வுக்கும் பாடுபட்டனர். அவர்களுடைய சீடர் முரளீதர் தேவதாஸ் ஆம்டே (பாபா ஆம்டே) 1949-ல் ‘மகா ரோகி சேவா சமிதி’யை ஆரம்பித்ததுடன் அங்கு மராட்டியத்தில் ‘ஆனந்தவன’த்தை நிறுவி, தொழுநோயாளிகளின் நிவாரணத்துக்குத் தொண்டு செய்தார்.

மாற்றமே இல்லை

சுதந்திரம் பெற்ற பிறகும், இந்திய அரசின் கொள்கையில் தொழுநோயாளிகளின் பிரச்சினைகளில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், அரசை நடத்தும் கொள்கை விதிகளினுள் 41-வது பிரிவில் நோயுற்றோருக்கும் முடமானவர்களுக்கும் அரசு உதவி அளிக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அதற்கு மாறாக 1955-ம் வருடத்திய இந்து திருமணச் சட்டத்தில் சிகிச்சையினால் பயனில்லாத தொழு நோயாளி, கணவனையோ மனைவியையோ விவாகரத்து கோரும்படியான காரணங்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது [பிரிவு 13(1)(V)]. 1954-ம் வருடத்திய விசேஷ திருமணச் சட்டத்திலும் அத்தகைய பிரிவு உள்ளது [பிரிவு 27(1)(g)]. 1869-ல் காலனியாதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய விவகாரத்துச் சட்டத்தில் உள்ள பிரிவைப் போன்றே 80 வருடங்களுக்குப் பிறகும் சுதந்திர இந்தியாவின் சட்டம் இயற்றியவர்கள் நகலெடுத்தது வருத்தத்துக்கு உரியது.

1956-ம் வருடத்திய இந்து சுவீகார மற்றும் ஜீவனாம்சச் சட்டத்திலும் தொழுநோயாளியான கணவனைத் தள்ளி வைத்துத் தனியாக வாழவும், அந்தக் கணவனிடமே ஜீவனாம்சம் கோரவும் மனைவிக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கைக்கான சட்டங்கள் மட்டு மின்றி, தொழுநோயாளிகள் ரயில் பயணம், 1989-ம் வருடத்திய இந்திய ரயில்வே சட்டத்தின்படியும், பேருந்து களில் பயணம் 1988-ம் வருடத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படியும் தடைசெய்யப்பட்டன.

தொழுநோயாளிகள் சட்டம்

தொழுநோய் பற்றிய தவறான எண்ணங்களைக் களைய எண்ணி, மத்திய அரசு தொழுநோய் ஒழிக்கும் செயற்குழுவின் பரிந்துரையின்பேரில், பல மாநில அரசுகள் 1898-ம் வருடத்திய ‘தொழுநோயாளிகள் சட்ட’த்தை ரத்துசெய்துவிட்டன. ரத்துசெய்த மசோதாக் களில் தொழுநோயாளிகளின் நோய்க் குணத்தை ஆரம்பத்திலேயே கண்டுணர்ந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்துவது மட்டுமின்றி, சமுதாயத்தில் கௌரவமாக வாழ வழிவகுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஊனமுற்றோர் என்ற வரையறை

தொழுநோய் குணப்படுத்தக்கூடியது என்று கூறி, நோயாளிகளைச் சமூகப் புறக்கணிப்பு செய்த சட்டத்தை ரத்துசெய்த பின்னரும், அந்த நோயாளிகள்பற்றிய பிற சட்டங்களில் உள்ள பாரபட்சமான பிரிவுகளை அகற்ற மத்திய அரசு இன்னும் முன்வராதது வருத்தத்தை அளிக்கிறது. இருண்ட வானில் ஒரு ஒளிக்கீற்றாக 1995-ல் கொண்டுவரப்பட்ட ஊனமுற்றோர் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுப் பங்காற்றும்) சட்டத்தின் 2(1)(iii) பிரிவில் ‘குணப்படுத்தப்பட்ட தொழுநோயாளி’ மட்டுமே ஊனமுற்றோர் என்ற வரையறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பொதுத்துறை நிறுவனங்கள் ஊனமுற்றோரைப் பணிநீக்கம் செய்வது 47-வது பிரிவில் தடைசெய்யப்பட்டதோடு, அவர்களுக்கு மாற்றுவேலை கொடுக்க முடியாவிட்டால், ஓய்வுபெறும் வரை முழுச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனால், குணம் பெறக்கூடிய தொழுநோயாளியை ஊனமற்றவர் என்று சட்டம் கூறாததனால், சிகிச்சையில் உள்ள தொழுநோயுற்ற ஊழியர்கள் பணிநீக்கப்படும் அபாயமும் உள்ளது.

2000-ம் வருடத்திய ‘இளம் குற்றவாளிகளுக்கான நீதி (குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு)’ சட்டத்திலும் பிரிவு 48-ல் தொழுநோயுற்ற இளம் சிறார்களைத் தனிமைப்படுத்தி வைக்கச் சட்டம் வழிவகுத்துள்ளது. உயிர் காப்பீட்டுக் கழகமும், இந்த நோயாளிகளைக் காப்பீடு செய்யும்போது அவர்களது வாழ்வுக் காலத்தைக் குறைத்து மதிப்பிடுவது முறைகேடானது.

சட்டங்களும் சிக்கலும்

புதிதாக வந்துள்ள சட்டங்களிலும் தொழு நோயாளிகள் பற்றிய பாரபட்சமான தன்மையைப் போக்க அந்தச் சட்டங்களை எதிர்த்து நீதிமன்றங்களை அணுகலாம் என்றால், அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. 2008-ல் ஒடிஷா மாநிலத்தில் நகராட்சி ஒன்றில் போட்டியிட்ட வேட்பாளர் தொழுநோயாளி என்ற காரணத்தால், தகுதியிழப்பு செய்யப்பட்டார். தீரேந்திர பந்துவா என்பவர் அந்த நகராட்சிச் சட்டத்தின் தகுதியிழப்புப் பிரிவுகளை எதிர்த்துப் போட்ட வழக்கை 2008-ல் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அத்தகைய தகுதியிழப்பை நியாயப்படுத்தியது.

தொழுநோயைப் பற்றிய தவறான எண்ணங்களால் உண்டான சட்டங்களையும் உளவியல்ரீதியான பாதிப்பு களையும் நீக்கும் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் பல செயல்படுகின்றன. அதில் ராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த துறவிகளும் அச்சேவையில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தியாவில் 2,500 பேரில் ஒருவருக்கு இந்த நோய் இருக்கிறது என்று வந்துள்ள தகவல்கள் இந்தப் பணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. தவறான கண்ணோட்டத்தோடு ஏற்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகளை ரத்துசெய்யக் கோரி மத்திய, மாநில அரசுகளை நிர்ப்பந்திப்பதோடு, அந்த நோய்பற்றி மக்கள் மனதில் ஆழ்ந்து படிந்துள்ள தவறான கண்ணோட்டங்களை மாற்ற அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்!

- சந்துரு, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, சமூக விமர்சகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x