Last Updated : 01 Nov, 2013 09:19 AM

 

Published : 01 Nov 2013 09:19 AM
Last Updated : 01 Nov 2013 09:19 AM

அறிவியல் அடிப்படையற்றதா பாரம்பரிய மருத்துவம்?

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் தன்னுடைய ‘மேற்கத்திய மருந்துகள் - மறுக்க முடியாத சில உண்மைகள்’ கட்டுரையில் (‘தி இந்து’அக்.29) நவீன மருத்துவத் துறையின் சில பக்கங்களை வாசகர்களுக்குச் சொல்லி, பாரம்பரிய மருந்துகள் இன்றைய அறிவியலின் கேள்விகளுக்குப் பதிலளிக்காதவை என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டை, தவறான தரவுகளுடன் நிறுவ முயன்றிருக்கிறார்.

நவீன மருந்துகளின் மகத்துவத்தையும் நம் மக்கள் நலவாழ்வுக்கு அவற்றின் பங்களிப்பையும் ஒருபோதும் யாராலும் மறுக்கவோ மறக்கவோ இயலாது. தொற்றுநோய்க் கூட்டத்தைப் பெருவாரியாகக் கட்டுப்படுத்தியதிலும் சரி, அவசர காலச் சிகிச்சையில் அதன் முக்கியத்துவமும் சரி அளப்பரியன. அதேசமயம், பாரம்பரிய மருத்துவ அறிவியலும் அதன் புரிதலும் இதுவரை நம்மை, நம் நலவாழ்வைக் காத்துவந்தன என்பதை மறந்து, ஏதோ பாரம்பரிய மருத்துவம் ‘குறளி வித்தை’என்ற ரீதியில் எழுதுவது, ஏகோபித்த அளவில் சித்தமருத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்களுக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கும்.

நோய்கள் எல்லாம் கர்மவினையினால், அமானுஷ்ய சக்தியினால் ஏற்படுகின்றன என கிரேக்கம் உள்ளிட்ட உலகின் முன்னோடிச் சமூகங்கள் பேசிவந்த காலத்திலேயே, நோய்களுக்கு எந்தக் கர்மவினையும், பேய் பிசாசும் காரணமல்ல; உடலில் மாறுபாடு அடைந்துள்ள முக்குற்றங்களாலான வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றும்தான் காரணம் என்றார் வள்ளுவர் (‘மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர் வளிமுதலா எண்ணிய மூன்று’ - திருக்குறள் 941).

பஞ்ச பூதங்களான மண், நீர், காற்று, தீ, ஆகாயத்தின் கூட்டுறவில், இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உப்பு ஆகிய ஆறு சுவைகள் தோன்றி, அந்த ஆறு சுவைகளால் ஆன உணவைச் சாப்பிடும்போது, சாப்பிடும் சுவைக்கு ஏற்றபடி, மூன்று குற்றங்களும் மாறுகின்றன என்ற புரிதலில்தான் சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் இன்ன பிற இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளும் இயங்குகின்றன. இது ஒரு பண்டைய புரிதல். தெளிவான ஓர் அறிவியல். தற்கால அறிவியலின் தர்க்கவாதப்படி துல்லியமானது (ப்ரேசிஸ்டு), பாரபட்சமற்றது (டிஸ்பாஷனேட்), தர்க்கரீதியிலானது (ரேஷனால்), தேவைப்படும் விளைவை எப்போதும் தரக்கூடியது (ரீபுரொடியூசபில் கான்டெக்ஸ்ட்).

பல காலம் இந்தப் புரிதலை அறிவியலாக ஏற்றுக்கொள்ள நவீன அறிவியலால் முடியவில்லை. ஆனால், வெகு சமீபத்தில் தன் ஆய்வுக் கண்களை அகலமாக விரித்து, சித்த மருத்துவமும் ஆயுர்வேதமும் சீன மருத்துவமும் சொல்லிவரும் ‘பிரக்ருதி’(வாத பித்த கப உடல்வாகுகள்) சரிதான் என்றும், ஒவ்வோர் உடலுக்கேற்ற மருந்தையும் படைத்தாக வேண்டும் என்றும் நவீன மருத்துவ உலகின் மரபணு மருந்தறிவியல் (ஜினோஃபார்மசூட்டிக்ஸ்) துறை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. அந்த மரபணுவியல் (ஜினோமிக்ஸ்) அடிப்படையில், ஏதாவது புது மருந்து அஸ்வகந்தாவில் வந்திருக்கிறதா என அறியாமையில் கேட்ட கட்டுரை ஆசிரியருக்கு, வெகு சமீபத்தில் அஸ்வகந்தாவுக்குத் தடுப்பு மருந்துக்கான துணை மருந்துக்கான (நியூ வேக்சின் அட்ஜுவண்ட்) அமெரிக்கக் காப்புரிமைகூட வழங்கப்பட்டிருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அஸ்வகந்தா எந்த அளவில் வேலை செய்யும், எவ்வளவு சரியான மருந்து எனச் சொல்லும் 697 ஆய்வுக் கட்டுரைகள் இருப்பதாவது அவருக்குத் தெரியுமா?

சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகள் எல்லா வல்லுநர்களுக்கும் பதில் சொல்லும்படியான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற பிம்பத்தைக் கட்டுரையாசிரியர் எழுப்ப முயல்வதும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசின் ‘ஆயுஷ்’ துறைக்குக் கீழ் இயங்கும் சித்த, ஆயுர்வேத, யுனானி ஆணையங்கள் தத்தம் மருத்துவத் துறையின் மருந்துகளுக்கான தர நிர்ணயங்களை இன்றைய அறிவியல் கூறுகளின்படி நிர்ணயித்து, சித்த மருத்துவ மருந்தறிவியல் நூல், ஆயுர்வேத மருத்துவ மருந்தறிவியல் நூல், யுனானி மருத்துவ மருந்தறிவியல் நூல் ஆகிய நூல்களைக் கொண்டுவந்து, மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டையும், மருந்துத் தயாரிப்பின் தர மேம்பாட்டையும் கொண்டுவந்திருக்கின்றன.

சித்த, ஆயுர்வேத மருந்துகள் வாதத்தைக் குறைக்கக் கூடியவையா, வலி நிவாரண வழிமுறையா (காக்ஸ்-2 இன்ஹிபிட்டர்) என்ற ரீதியிலான ‘இரட்டை ஆய்வுகள்’ இந்தியாவெங்கும் நடைபெற்றுவருகின்றன. புற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று கண்டறியப்பட்ட மஞ்சளும் வெண்கொடிவேலியும் நவீன மருத்துவப் புரிதல் அடிப்படையிலான ‘பி-53’ மரபணு வெளிப்பாட்டில் (பி-53 ஜீன் எக்ஸ்பிரெஷன்) எவ்விதம் பணிபுரியும் என்பதும், தீர்மானிக்கப்பட்ட செல் மரணத்தை (அப்போப்டோஸிஸ்) எவ்விதத்தில் ஊக்குவிக்கும் என்பதையும் கண்டறிந்து, உயர் மதிப்பீட்டுப் பன்னாட்டு மருத்துவ ஏடுகள் வெளியிட்டு வெகு காலம் ஆயிற்று.

சமீபத்தில், ஒட்டுமொத்தத் தமிழகமே பயந்துபோன சிக்குன் குனியாவையும் டெங்குவையும் நிலவேம்புக் குடிநீர் கட்டுப்படுத்தியதையும் அடுத்தகட்டமாக நிலவேம்பின் ஆண்ட்ரொக்ராஃபைனும் பானிகுலேட்டும் எப்படி வைரஸைக் கட்டுப்படுத்துகின்றன என்ற ஆய்வு தொடங்கியதையும் ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் அறியும்.

கேலன் சொன்னதையும் கலிலியோ சொன்னதையும் மறுத்துப் பின்னூட்டம் தரும் ஆய்வுகள்தாம் மேற்கத்திய மருத்துவ வளர்ச்சிக்கு வித்து என்று வாதாடும் கட்டுரையாசிரியர், “இந்தப் பழம் ஏன் மேலே போகாமல் கீழே வருகிறது?” என்ற நியூட்டனின் சிந்தனையிலும் சரி, “கறந்த பால் முலை புகா; கடைந்த வெண்ணெய் மோர் புகா; விரிந்த பூ, உதிர்ந்த மலர் மரம் புகா” என எழுதிய சிவவாக்கியரின் சிந்தனையிலும் சரி; அறிவியல்தான் அடித்தளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பாரா?

அன்று மதச் சித்தாந்தத்துக்குள் மாட்டிக்கொள்ள மறுத்த நியூட்டனும், ‘நட்ட கல்லும் பேசுமோ?’ என்ற சிவவாக்கியரும் ஒரே புள்ளியில்தான் அறிவியலைப் பார்த்தனர். மேற்கில் நியூட்டனுக்கும் டார்வினுக்கும் அவர்தம் அறிவியலுக்கும் கிடைத்த அங்கீகாரம், அதே தேடலை வேறோர் அறிவியல் புரிதலுடன் இன்னும் பல நூறு ஆண்டுகள் முன்னரே சொன்ன ஆசிவகக் கணியனுக்கோ வள்ளுவனுக்கோ சிவவாக்கியருக்கோ கிடைக்கவில்லை. பாரம்பரிய அனுபவங்களைக் கட்டவிழ்க்க, பாரபட்சமற்ற பாரம்பரிய மருத்துவப் புரிதலும் வேண்டும்; நவீன விஞ்ஞான ஆய்வுகளும் வேண்டும். இரண்டில் எது குறைந்தாலும் விடை கிடைக்காது. இங்கே முட்டுக்கட்டையாக இருப்பது இரண்டின் ஒருங்கிணைந்த பார்வையும் இல்லாததுதான். கூடவே, ‘தான் மட்டும்தான்’, ‘நானே கடவுள்’, ‘பழசு புரட்டு எனும் பார்வை’, ‘காப்புரிமை’ என்ற கட்டமைப்புக்குள் சிக்கியுள்ள மருத்துவ உலகம்.

ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல், இன்னும் தினசரி காலையில் ஏராளமாய் மருத்துவமனையின் வாசலில் குத்தவைத்துக் காத்திருக்கும் நம் ஊர் விளிம்பு நிலை சாமானியர்களுக்கும் நலவாழ்வைத் தருவதற்கு, காய்த்தல் உவத்தல் இல்லாத பார்வையில் ஒருங்கிணைந்த ஆய்வாலும் சிகிச்சையாலும் மட்டும்தான் முடியும்!

- கு.சிவராமன், மருத்துவர், சமூகச் செயல்பாட்டாளர் - தொடர்புக்கு: herbsiddha@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x