அழித்தொழிப்பு அரசியல்

அழித்தொழிப்பு அரசியல்
Updated on
2 min read

இராக் பிரதமரும் உத்தமோத்தமருமான நூரி அல் மாலிகி, தீபாவளிக்கு முதல்நாள் வாஷிங்டனுக்குப் போனார். ஒப்பற்ற உயர் தலைவராம் ஒபாமாவைச் சந்தித்து உதவி கேட்டார். ஆபத்பாந்தவா, அனாத ரட்சகா, அபயமளியுங்கள். இந்த அல் காயிதாவின் குடைச்சல் தாங்க முடியவில்லை. இராக்கில் யுத்தம் முடிந்ததா, அல்லது இப்போதுதான் தொடங்கியிருக்கிறதா என்று பிரதி தினம் விடிந்து எழுந்து பல் துலக்கும்போதெல்லாம் சந்தேகம் வந்துவிடுகிறது. போன மாதம் (அக்டோபர் 2013) மட்டும் இராக்கில் மொத்தமாக ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் தொள்ளாயிரத்துக்குக் கொஞ்சம் மேற்பட்டவர்கள் அப்பாவி சிவிலியன்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த மாசத்து எண்ணிக்கைதான் ரொம்ப ஜாஸ்தி. நான் என்னவாவது செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் என்னை ஏதாவது செய்துவிடுவார்கள். எனவே உதவுங்கள்.

இராக் பிரதமர் என்ன உதவி கேட்கிறார்? அதி நவீன ஆயுதங்கள். தொழில்நுட்ப உபகாரம். அல் காயிதாவினரை மொத்தமாக அழித்தொழிக்க அமெரிக்காவால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதெல்லாம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

மாண்புமிகு பிரதம மந்திரி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். இராக்கில் அல் காயிதா மட்டும் இயங்கிக்கொண்டிருக்கவில்லை. சரியாகச் சொல்வதென்றால் அல் காயிதாவைக் காட்டிலும் இப்போது கொலை வெறி வேகத்தில் வேறு பல அமைப்புகள் அங்கே ருத்ரதாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன. அல் மஹ்தி என்று ஒன்று இருக்கிறது. பத்ர் ப்ரிகேட் என்று இன்னொன்று இருக்கிறது. பிரதி வெள்ளிக்கிழமை பெயர் மாற்றிக்கொண்டு பிராந்தியத்தில் கலவர களேபரம் பண்ணிக்கொண்டிருக்கும் வேறு நாலைந்து தீவிரவாத இயக்கங்களும் ஜோராக செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

அதைவிட முக்கியம் இந்த இயக்கங்கள் அனைத்துக்கும் இராக்கிய அரசியல் கட்சிகள் பலவற்றின் பரிபூரண ஆசீர்வாதம் இருக்கிறது. தமது இனப்பகை அரசியலுக்கு இந்தத் தீவிரவாத இயக்கங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் இந்த அரசியல் கட்சிகளுடன்தான் பிரதமராகப்பட்டவர் கூட்டணி வைத்து கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்.

எனில் இவர் யாரை எதிர்க்க ஆயுத சப்போர்ட் கேட்கிறார்? எல்லாம் வல்ல எம்பெருமானுக்கே வெளிச்சம்.

அமெரிக்காவுக்கு ஆயுத சப்ளை செய்வதில் பிரச்னை ஒன்றுமில்லை. அவர்களது விருப்பமும் அதுதான். இராக்கில் நிரந்தரமான பதற்றத்தைத் தக்கவைப்பது அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு அஜெண்டாக்களுள் தலையாயது என்பது ஒண்ணாங்கிளாஸ் குழந்தைக்குக் கூடத் தெரிந்த சங்கதி. ஆனால் மாலிகிக்கு என்ன ஆனது? அவர் மக்கள் தலைவர் அல்லவா? மண்ணின் அவலங்களை மொத்தமாகத் தீர்த்து, இராக்கைத் தமிழகத்துக்கு அடுத்தபடி அமைதிப் பூங்காவாக்க வீர சபதமேற்று ஆட்சிக்கு வந்தவரல்லவா?

ஒன்றும் சொல்வதற்கில்லை. அவருக்கு ஒவ்வொரு நாளும் கழிவதே பெரும்பாடாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை சமாளிப்பது என்பதற்கு அங்கே சகாயம் செய்வதென்று பொருள். வெளிப்படையாகத் தெரியாது. ஆனால் ஒவ்வொருவரையும் சரிக்கட்டிக்கொண்டே இருக்க வேண்டியதாகி விடுகிறது. சன்னிகளுக்கு ஷியாக்கள் ஆகாது. ஷியாக்களுக்கு சன்னிகள் ஆகாது. சன்னியோ ஷியாவோ, குர்த் இனத்தவராக இருந்தால் யாருக்குமே ஆகமாட்டார்கள். எல்லோருக்கும் யாராவது ஒருத்தர் ஆகாமல்தான் இருக்கிறார்கள். எல்லோருடைய அரசியல் பிரதிநிதிகளும் இந்த இனப்பகையைத் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் தீவிரவாதக் குழுக்களின் மூலம் ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சதாம் இருந்த இடத்தில் இன்று ஓராயிரம் சதாம். அமெரிக்காவிடம் ஆயுதங்கள் கேட்டு வாங்கி பிரதமர் என்ன செய்யப் போகிறார்? யாரைத் தாக்கப் போகிறார்?

இதுநாள் வரை இராக் அரசாங்கம் அமெரிக்காவிடம் வாங்கி உபயோகித்த ஆயுதங்களெல்லாம் இராக் மக்களை நோக்கித்தான் திரும்பி நின்றிருக்கின்றன. அல் காயிதாவுக்கோ, இதர தீவிரவாத இயக்கங்களுக்கோ இந்த ஆயுதங்கள் ஒரு பேதி மருந்து அளவுக்குக் கூடக் கலவரமேற்படுத்தியதில்லை.

இந்நிலையில் இன்னும் புதிதாக ஒரு செட் தொழில்நுட்பம், ஒரு செட் கத்தி கபடாக்களைக் கொண்டு வந்து குவிப்பதில் யாருக்கு லாபம்?

சதாம் இருந்த காலமே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு இன்று இராக்கியர்கள் அனுபவிக்கும் துயரம் மிகக் கோரமானது. இந்தப் புதிய ஆயுத பேரமானது இன்னும் பல்லாயிரக் கணக்கான அப்பாவி இராக்கியர்களைத்தான் பலி கேட்கப் போகிறதே தவிர, தீவிரவாதிகளை இது ஒன்றும் செய்யப் போவதில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in