

ரஷ்யாவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் நான் வேண்டுமானால் கூடமாட வந்திருந்து ஒத்தாசை பண்ணுகிறேன் என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. நேற்றைய குண்டு வெடிப்புச் சம்பவங்களின் தொடர்ச்சியாக ரஷ்ய அரசாங்கமே போட்டிகள் நடைபெறவுள்ள சோச்சி நகரில் ஏராளமான போலீசாரைக் குவித்திருக்கிறது.
கடந்த ஜூலை மாதமே செச்னிய களேபர மூர்த்தி டோகு உமரோவ் ஒரு மாதிரி சாங்கோபாங்கமாகத் தனது திட்டத்தைச் சொல்லியிருந்தார். முடிந்த அளவுக்கு அதிக வீரர்களைக் களத்தில் இறக்கி, இந்த ஒலிம்பிக்ஸ் திருவிழாவை உண்டு இல்லை என்று பண்ணிவிடத்தான் உத்தேசம் என்று அவர் தமது சிஷ்யப் பிள்ளைகளுக்காகப் பேசியனுப்பிய வீடியோ பிரதியின் ஒரு காப்பி க்ரெம்ளினுக்கும் வந்தது.
உமரோவ் தெளிவாகத்தான் இருக்கிறார். சோச்சிக்குப் போவதற்கு வால்காகிராடுதான் வாசல். அங்கிருந்துதான் ரயில் பிடித்தாக வேண்டும். புறப்படுகிற இடத்தில் இருந்தே அபாயம் ஆரம்பிக்கிறது என்று சொல்லாமல் சொல்லிக்காட்டும் விதமாகத்தான் மேற்படி குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் செச்னியப் போராளிகள் விஷயத்தில் முன்னைக் காட்டிலும் அதி தீவிரமாக எதிர்யுத்தம் புரியத் தாங்கள் தயாராயிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புப் படை அதிகாரிகள் சிலர் நேற்றைக்குப் பேசியிருப்பது வேண்டாத வேலை என்று தோன்றுகிறது.
உமரோவோ அவரையொத்த மற்ற எந்த செச்னியப் போராளிக் குழுத் தலைவரோ, இயக்கங்களோ நடந்த சம்பவங்களுக்கு இன்னும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. இதற்கு முன் 2009ல் ஒரு ரயிலிலும் 2010ல் மாஸ்கோவில் ஒரு சுரங்கப் பாதையிலும் 2011ல் மாஸ்கோ விமான நிலையத்திலும் குண்டு வைத்ததுமே கர்ம சிரத்தையாக நாங்கள்தான் செய்தோம் என்று சொன்ன கோஷ்டி அவர்கள். யாருக்கும் பயந்து, பதுங்குகிற ஜாதியில்லை.
அப்படி இருக்கும்போது அவர்கள் பொறுப்பேற்கும் முன்னால் பதிலடி குறித்துப் பேசுவதும் ஆவேசம் காட்டுவதும் அவ்வளவாக நல்லதல்ல. பல்வேறு தேசங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் வரப்போகிறார்கள். இப்படி நாளொரு குண்டு, பொழுதொரு அவலம் என்றிருந்தால் ஐயா சாமி ஆளை விடு என்று ஓடிப் போய்விடமாட்டார்களா? எப்பேர்ப்பட்ட அவமானம் அது?
புதினுக்கு இது தெரியாததல்ல. ஆனால் நடந்த சம்பவங் களுக்குத் தக்க பதிலடி தராவிட்டால் அது தன்மானப் பிரச்னையாகி விடும் என்று கருதுகிறார். நான் உதவி செய்ய வரட்டுமா என்று அமெரிக்கா கேட்டிருப்பதை அவர் சகாய சந்தோஷமாகக் கொள்ள இயலாது. செச்னியப் போராளிகளுக்கு எதிரான பதில் தாக்குதல் என்பதைக் காட்டிலும் தற்காலிகமாகவேனும் ஒரு பரஸ்பர சமாதான ஏற்பாட்டுக்கு முயற்சி செய்வதுதான் புத்திசாலித்தனமான செயலாக இருக்க முடியும். எதுவும் நடக்கக்கூட வேண்டாம். நடப்பதற்கான முஸ்தீபுகளாவது உடனடியாக ஆரம்பிக்கப்பட்டால்தான் ஒலிம்பிக்ஸ் ஒழுங்காக நடக்கும். இல்லாவிட்டால் மேலும் சில விபரீதங்களையாவது எதிர்கொள்ள நேரிடும்.