Last Updated : 25 Oct, 2013 09:30 AM

Published : 25 Oct 2013 09:30 AM
Last Updated : 25 Oct 2013 09:30 AM

கரப்பான்பூச்சியாதல்

அலுவலகத்தில் பிரச்சினை; வீட்டில் சண்டை; வெளியே சென்றால் அங்கும் யாரிடமாவது தகராறு… யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான நாட்களில் பிரச்சினைகளோடு தூங்கிப் பிரச்சினைகளோடுதான் விழிக்கிறோம். நம்மைச் சுற்றி இத்தனை பிரச்சினைகள் இருக்கின்றன சரி. அவற்றுக்கான தீர்வுகள்? நாம்தான் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆயிற்றே. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆயிரம் தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். ஆயிரமென்ன ஆயிரம்? லட்சக்கணக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கலாம். லட்சம் தீர்வுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அந்த லட்சத்தில் இருந்து ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுவும் இருப்பதிலேயே சிறந்த ஒன்றை.

அது எப்படி? டார்வின் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாரே! தக்கனத் தப்பிப் பிழைக்கும் (சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்) என்று. அதே நுட்பம்தான். இந்தத் தக்கனத் தப்பிப்பிழைத்தலுக்குக் கரப்பான்பூச்சியை உதாரணமாகச் சொன்னால், சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன மருந்து வேண்டுமானாலும் அடியுங்கள் - இந்த ஜீவனை முற்றாக ஒழித்துக்காட்டுங்கள் பார்க்கலாம். வாய்ப்பே இல்லை. எப்படியும் ஒன்றிரண்டாவது தப்பி தங்கள் சந்ததியைப் பெருக்கிவிடும். கரப்பானைப் பற்றி இணையத்தில் தேடினால் அவை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாகவிருந்தே இந்தப் பூமியில் கோலோச்சிவருவதாக எழுதி வைத்திருக்கிறார்கள். எரிமலைக் குழம்பு லார்வாவே அடித்து நொறுக்கிக்கொண்டு ஓடினாலும்கூடப் பாறைகளின் அடியில் சிறு இடைவெளி இருந்தால் போதுமாம்; அதற்கடியில் ஒண்டியும் பதுங்கியும் தப்பித்துவிடுமாம். இந்தச் செய்தியை நினைத்துக்கொண்டே அடுத்த முறை கில்லாடி கரப்பானைக் கொல்ல முயற்சித்துப் பாருங்கள்… அது ‘கெக்கெபிக்கே’என்று நமக்கு இளிப்புக்காட்டிக்கொண்டே ஓடுவது காதில் விழும்.

கரப்பான்பூச்சிகள் எப்படித் தப்புகின்றன?

கோடிக் கணக்கான வருடங்களாக இவை எப்படித் தப்பித்திருக்கின்றன? இத்தனை ஆண்டுகளாகப் பூமி ஒரே மாதிரியாகவா இருந்திருக்கிறது? இயற்கைச் சீற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, பருவநிலை மாறியிருக்கிறது, கடல் இருந்த இடமெல்லாம் மலைகளாக உருமாறியிருக்கின்றன, நிலப் பகுதிகளைக் கடல் ஆக்கிரமித்திருக்கிறது. இப்படி என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், தங்களைத் தகவமைத்துக்கொண்ட உயிர்கள் மட்டும் தப்பிக்கின்றன. மற்றவை எல்லாம் வெறும் எச்சங்களாகிப்போகின்றன. இதைச் சுருக்கமாகச் சொன்னால், அதுதான் ‘தக்கனத் தப்பிப்பிழைத்தல்’.

இப்படித் தப்பிப்பிழைப்பதற்கான திறமை எல்லாம் அந்தந்த உயிரியின் மரபிலேயே வருவது மரபணுவியல். எவ்வளவுதான் பிரச்சினைகள் வந்தாலும், தீர்வு கண்டுபிடித்துத் தப்பித்துவிடுகின்றன. உயிர்களுக்கான பிரச்சினைகள்- பிரச்சினைகளுக்கான தீர்வுகள் - அந்தத் தீர்வுகளிலிருந்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்னும் கருத்தாக்கத்தை நவீன அறிவியலுக்குப் பயன்படுத்திப் பார்க்கலாமா என்று யோசித்தபோது உருவானதுதான் மரபியல் கணிப்புநெறி (ஜெனிடிக் அல்காரிதம்). அதாவது, இதே உயிரியல் கருத்தாக்கத்தைக் கணினியில் கட்டளைநிரல்களாக எழுதிவிடுவதுதான்.

இப்போது மரபியல் கணிப்புநெறியை ஏகப்பட்ட துறைகளில் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார்கள். உதாரணமாக, பொருளாதாரத்தை எடுத்துக்கொள்ளலாம். பெட்ரோல் விலை உயர்வோ அல்லது வேலையில்லாத் திண்டாட்டமோ - பிரச்சினையின் வீரியத்தைப் போலவே அவற்றுக்கான தீர்வுகளும் இருக்கும். ஒரு சாமானிய தனிமனிதனின் பொருளாதாரப் பிரச்சினைக்கே ஏகப்பட்ட தீர்வுகள் இருக்கும்போது ஒரு நாட்டின் அல்லது உலகப் பொருளாதாரப் பிரச்சினைக்கு எத்தனை தீர்வுகள் இருக்கக் கூடும். இந்த எக்கச்சக்கமான தீர்வுகளிலிருந்து மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க மரபியல் கணிப்புநெறியைப் பயன்படுத்தலாம்.

தீர்வுகளைப் பிணைத்தல்

எப்படி? எந்தவொரு பிரச்சினைக்கும் சில தீர்வுகள் மேலோட்டமாகவே கண்ணுக்குத் தென்படும் அல்லவா? அவற்றைக் குத்துமதிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ஒவ்வொரு தீர்வையும் மரபியல் கணிப்புநெறி குரோமோசோமாக மாற்றிக்கொள்ளும். இப்படித் தேர்ந்தெடுத்த குரோமோசோம்களைப் பிணைத்தால்- அதாவது, இரண்டு தீர்வுகளை இணைத்து இன்னொரு புதிய தீர்வை அடைவது- இரண்டாம் தலைமுறைத் தீர்வுகள் கிடைக்கும். இரண்டாம் தலைமுறையில் கிடைக்கும் தீர்வுகளைப் பிணைத்து அடுத்த தலைமுறைக்குப் போகலாம். இப்படி ஒவ்வொரு தலைமுறையாகத் தாண்டும்போதும் சிறந்த தீர்வுகளை நோக்கி நகர்கிறோம்.

மேம்போக்காகத் ‘தீர்வுகளைப் பிணைத்து இன்னொரு தீர்வை அடைகிறோம்’என்று சொல்லிவிட்டாலும்கூட அது அவ்வளவு எளிமை இல்லை. தீர்வைக் குரோமோசோமாக மாற்றும்போது அது கணினி புரிந்துகொள்ளும்படியாக 0 அல்லது 1 என்ற பைனரி வடிவத்துக்கு மாற்றுவதிலிருந்து மேற்சொன்ன பிணைத்தல் (க்ராஸ் ஓவர்), பிறழ்வு (மியூட்டேஷன்) போன்ற இயற்கை நிகழ்த்தும் உயிரியல் செயல்களை மனிதன் கண்டறிந்த கணினியில் பிரதியெடுத்தல் சற்று சவாலான காரியம்தான். ஆனாலும், நம்மவர்கள் இத்துறையில் படுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரம்மாண்டத்தை அடக்குதல்

மின்னணுவியல் துறையில் வி.எல்.எஸ்.ஐ. (வெரி லார்ஜ் ஸ்கேல் இண்டெக்ரேஷன்) என்றொரு பிரிவு உண்டு. ஆயிரக் கணக்கான மின்னணு இணைப்புகளை எப்படி மிகக் குறைந்த இடத்தில் வடிவமைப்பது என்பதுதான் இதில் பணியாற்றும் வல்லுநர்களின் வேலை. 64 எம்.பி. ராம் வந்த சில மாதங்களில் 128 எம்.பி. ராமைத் தயாரித்துவிட்டார்கள். அடுத்த சில மாதங்களில் 256 எம்.பி. ராம். இப்படித் திறன் கூடிக்கொண்டே போகும்போது விலை இறங்கிக்கொண்டே வந்ததுதான் ஆச்சரியம். அதனால்தான் கணினியின் திறன் கூடினாலும் விலை குறைந்துகொண்டே வந்தது. இப்போதெல்லாம் ஜி.பி. திறன் கொண்ட ராம்கள் கிடைக்கின்றன. கூடிய விரைவில் டி.பி. ராம்களை எதிர்பார்க்கலாம்.

பென்டிரைவ் ஒரு பேனா மூடி அளவுதான் இருக்கிறது. ஆனால், ஏகப்பட்ட தகவல்களை அதனுள் அடக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் வி.எல்.எஸ்.ஐ-தான். அவ்வளவு சிறிய இடத்தில் அவ்வளவு நினைவுத்திறனை அடக்கி வடிவமைத்திருக்கிறார்கள். இப்படி ஆயிரக் கணக்கான மின்னணு இணைப்புகளை உருவாக்கும்போது எந்த இணைப்பை எந்த இடத்தில் வைக்கலாம் என்பதற்கு ஆயிரக் கணக்கான சாத்தியங்கள் உண்டு அல்லவா? இதில் எது சிறந்தது என்பதை நம் மரபியல் கணிப்புநெறியை வைத்து எளிதாகக் கண்டுபிடிக்கலாம். எந்த மாதிரி இணைத்தால் மிகக் குறைந்த இடம் தேவைப்படும், எந்த மாதிரி இணைத்தால் இன்னும் திறன் வாய்ந்த மின்னணுச் சாதனங்களை உருவாக்க முடியும் போன்ற பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை மரபியல் கணிப்புநெறி கொடுக்கிறது.

பொருளாதாரம், மின்னணுவியல் என்பனவெல்லாம் வெறும் மாதிரித் துறைகள்தான். இவை தவிர, ஏகப்பட்ட துறைகளில் மரபியல் கணிப்புநெறி கலக்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும் அதன் கால் படாத துறைகளும் நிறைய இருக்கின்றன. வருங்காலத்தில் மரபியல் கணிப்புநெறியை நம் கைபேசியில் போட்டு வைத்துக்கொண்டால் முதல் பத்தியில் சொன்ன எல்லாப் பிரச்சினைகளுக்கும் சர்வசாதாரணமாகத் தீர்வைக் கண்டு பிடித்துவிடலாம் என நினைக்கிறேன். அப்படியான சூழல் வருவதற்கான காலம் ஒன்றும் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.

வா. மணிகண்டன், எழுத்தாளர் - தொடர்புக்கு: vaamanikandan@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x