Last Updated : 13 Jul, 2016 09:11 AM

 

Published : 13 Jul 2016 09:11 AM
Last Updated : 13 Jul 2016 09:11 AM

வட கிழக்கு: ‘பார்வை’ ஒன்றே போதுமா?

வடகிழக்கை கையாள்வதில் அரசு தோல்வியடைந்து விட்டது!



நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் - ஐசக் முய்வா’ (என்.எஸ்.சி.என். ஐ.எம்.) அமைப்பின் தலைவர் ஐசக் சிஷி சூவின் மறைவு, நாகா மக்களுக்கு குறிப்பாக, நாகாலாந்தில் உள்ள நாகா மக்களுக்கு மிகப் பெரும் இழப்பு.

நாகாலாந்தின் ஜுனேபோட்டோ மாவட்டத்தில் உள்ள சுமி நாகா இனத்தைச் சேர்ந்தவர் ஐசக். அவரது மறைவுச் செய்தி, புகழ்பெற்ற ஸ்பாகெட்டி வெஸ்டர்ன் திரைப்படமான ‘தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி’ படத்தை நினைவுபடுத்தியது. நான் மாணவப் பருவத்திலிருந்தபோது, மும்பையில் அப்படத்தைப் பார்த்திருக்கிறேன். புதையல் வேட்டைக்காகச் செல்லும் மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட கதை அது. நாகா மக்களின் எதிர்காலத்தை நோக்கிய என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பின் தேடுதல் பயணத்தில் ‘தி குட்’ பாத்திரம் ஐசக்தான்.

அக்கறை.. பணிவு.. ஐசக்!

1966-ல் நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் முதல் முறையாக ஐசக்கைச் சந்தித்தேன். நாகாலாந்து அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய எனது அண்ணன் ஆர்.கே.சிங்கிடம், வழக்கறிஞர் பயிற்சிக்காக அப்போது சேர்ந்திருந்தேன். எனது அண்ணனின் அலுவலகம் அருகில்தான் ஐசக் தங்கியிருந்தார். அடிக்கடி எங்களைப் பார்க்க வருவார். ஒரு இளைஞனாக, அவரது மென்மையான சுபாவத்தால் ஈர்க்கப்பட்டிருந்தேன். மக்கள் நலனில் அக்கறையும் பணிவும் கொண்டவர் அவர்.

தனது இறுதி நாட்களில், தனது கனவுகள் நிறைவேறிவிட வேண்டும் என்ற கடைசி ஆசை அவருக்கு இருந்தது. அப்படித்தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ல் மத்திய அரசுக்கும் என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்புக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் அவசர அவசரமாகக் கையெழுத்தானது. பின்னாளில், ஒப்பந்தத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பு என்று விளக்கமளிக்கப்பட்ட அதன் ஷரத்துகள் குறித்து இன்றும் மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஐசக் காலமாகிவிட்ட நிலையில், அதன் அம்சங்கள் நீடிக்குமா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் மற்றும் மத்திய அரசில் உள்ள சிலரைத் தவிர வேறு யாருக்கும் அது தெரிந்திருக்காது. ஒருவேளை யாரும் அதைப் பற்றிப் பேசாமலே இருந்துவிடக் கூடும்.

நாகா மக்களின் எதிர்காலம் தொடர்பாக மத்திய அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்புக்கே முக்கியத்துவம் தரப்படுவது குறித்து, நாகா மக்களில் பலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஐசக்கின் மரணம் இந்தப் பிரச்சினையை அதிகரிக்கலாம். கிழக்கு (எல்லை) நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு (இ.என்.பி.ஓ.) எனும் அமைப்பு விடுத்த கோரிக்கையின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை. என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பின் தலைவராகப் புதிதாகப் பொறுப்பேற்பவரால், வெவ்வேறு புரட்சிக் குழுக்களை ஒருங்கிணைப்பது, பொதுச் சமூகத்தின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் தக்கவைப்பது போன்ற விஷயங்களைத் திறமையாகக் கையாள முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

பிஸோவின் போராட்ட வரலாறு

பிஸோவின் தலைமையில், முதலில் ‘நாகா கிளப்’ எனும் பெயரில் இயங்கியது என்.என்.சி. அமைப்பு. பிரிட்டிஷ் அரசு வெளியேறிய பின்னர், நாகா மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துக்கொள்வது பற்றி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 1929-ல் இந்தியாவுக்கு சைமன் கமிஷன் குழு வந்தபோது, அக்குழு கோரிக்கை விடுத்தது. அந்த நிகழ்வு தொடங்கி, 1951-ல் மக்களிடம் என்.என்.சி. வாக்கெடுப்பு நடத்தியது வரையிலான பிஸோவின் போராட்ட வரலாறு ஒன்றுமில்லாமல் போவதை, நாகா மக்களின் பெரும்பான்மையானோரால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

வட கிழக்குப் பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட கொள்கையின் அடிப்படையில் இயங்கினால்தான், இப்பகுதி தொடர்பான மத்திய அரசின் அணுகுமுறை ஆரோக்கியமானதாக இருக்கும். வட கிழக்குப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு இனக் குழுவுக்கும் இடையிலான அடையாளங்கள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், நோக்கங்கள் வேறு வேறானவை. இனக் குழு அடிப்படையிலான பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவது என்பது பெரும் சிக்கலுக்கு வித்திடக்கூடியது.

வட கிழக்குப் பகுதியின் வளர்ச்சியில் பங்கேற்பவர்களுடன் ஆலோசித்து, நெளிவு சுளிவுகளுடன் விரிவான திட்டத்தை உருவாக்குவது காலத்தின் தேவை. பல விஷயங்களில் வட கிழக்குப் பிராந்தியம் பிற்பட்ட நிலையில் இருக்கிறது என்பதும், பல பின்னடைவுகளைச் சந்தித்துவருகிறது என்பதும் எல்லோரும் அறிந்தது. சரியோ தவறோ, புறக்கணிக்கப்படுவதாகவும், தேசிய அடையாளம் எனும் அடிப்படையில் கைவிடப்பட்டிருப்பதாகவும் வட கிழக்குப் பிராந்தியம் கருதுகிறது.

சீனாவின் கனத்த நிழல்

நாகாலாந்தின் முன்னாள் முதல்வரும், ஒடிசாவின் தற்போதைய ஆளுநருமான எஸ்.சி.ஜமிரை, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ராஜ் பவனில் சமீபத்தில் நான் சந்தித்துப் பேசினேன். அப்போது, “மத்திய அரசின் சமீபத்திய அணுகுமுறையை அங்கீகரிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார். தனது இந்தக் கருத்தைப் பிரதமர் மோடியிடமே தெரிவித்துவிட்டதாக என்னிடம் அவர் சொன்னார். “வட கிழக்கு தொடர்பான எந்த வளர்ச்சித் திட்டத்தையும் மத்திய அரசு வழங்க முன்வந்தாலும், அது அந்தப் பிராந்தியம் முழுவதற்குமான பார்வையையும் கொள்கை வரைவையும் கொண்டிருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சில இனக் குழுக்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது” என்ற அவர், “பெரிய, சக்திவாய்ந்த நாடான இந்தியாவின் அரசு எந்த அழுத்தத்துக்கும் பணிந்துபோகக் கூடாது” என்று குறிப்பிட்டார். அதேசமயம், அரசு அரவணைப்பு, கருணையுடன் செயல்பட வேண்டும். ஆனால், வட கிழக்குப் பிராந்தியத்தைக் கையாள்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதுபோலவே தெரிகிறது.

காவல் மற்றும் ராணுவ அதிகாரிகள், மனிதத் தன்மையற்ற சட்டமான ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இப்பிராந்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அரசு கண்டுகொள்ளவில்லை. வட கிழக்குப் பகுதி தொடர்பான பிரச்சினைகள் என்றாலே இந்திய அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் ஏதோ அச்சத்துக்கு ஆட்பட்டிருப்பதுபோலவே நடந்துகொள்கிறார்கள். சீனாவின் கனத்த நிழல் வேறு. இந்நிலையில், வட கிழக்குப் பிராந்தியம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முழுமையான, நிலையான தீர்வு குறித்து சிந்திக்கக் கூடிய சிந்தனையாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அடங்கிய அமைப்பு தேவை. அதற்குத் தேவையான அமைப்புகள் உருவாக்கப்படுவதுடன், அவை எடுக்கும் முடிவுகளை அமல்படுத்துவதற்குத் தேவையான வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.

வட கிழக்கு ஆணையம் மற்றும் வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம், வட கிழக்கு ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கடந்த மாதம் கோரிக்கை வைத்தனர். மேலும், மத்திய அரசின் காலாவதியாகாத வளத்தின் நிதியில் 10%, வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்திடம் கட்டாயம் சேர்ப்பிக்கும் வகையில் நிதிநிலை விவகாரங்களை நிறுவனமாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். உண்மையில், நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமையும் வகையில், இந்த நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படுவதுடன், அவற்றுக்கான அதிகாரமும் வழங்கப்பட வேண்டும்.

‘ஆக்ட் ஈஸ்ட்’டாக மாறிய ‘லுக் ஈஸ்ட்’

எல்லா பருவ நிலைக்கும் ஏற்ற சாலைகள், ரயில், விமான சேவைகள் உள்ளிட்ட போக்குவரத்தை மேம்படுத்துவது, இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது, நேர்மையான, வெளிப்படையான, விரிவான பேச்சுவார்த்தைகள் மூலம் ஆயுதக் குழுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது, போதை மருந்துக் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது போன்றவற்றைச் செய்யாமல் ‘கிழக்கை நோக்கிய கொள்கை’(ஆக்ட் ஈஸ்ட்) என்றெல்லாம் பேசுவது கேலிக்கூத்து. ஏற்கெனவே இருந்த (நரசிம்ம ராவ் காலத்தில் தொடங்கப்பட்ட) ‘லுக் ஈஸ்ட்’ கொள்கை மூலம், கடந்த 25 ஆண்டுகளாக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்தக் கொள்கை தற்போது ‘ஆக்ட் ஈஸ்ட்’ ஆக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

வெறுமனே பணத்தைக் கொட்டுவதால் மட்டும் தேசிய நீரோட்டத்தில் வட கிழக்கைப் பிணைத்துவிட முடியாது. வட கிழக்குப் பிராந்தியத்தை, உண்மையான அக்கறையுடன் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதி, தீர்க்கமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் வரையில், கொந்தளிப்பு மிகுந்ததாகவே அப்பகுதி இருக்கும்!

- ராதாவினோத் கோய்ஜாம், மணிப்பூர் முன்னாள் முதல்வர்.

வட கிழக்கு ஆய்வு மற்றும் வியூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர்.

‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x