Last Updated : 25 Mar, 2017 08:55 AM

 

Published : 25 Mar 2017 08:55 AM
Last Updated : 25 Mar 2017 08:55 AM

அசோகமித்திரன் (1931 - 2017): எளிமையின் பெருங்கலைஞன்

எனக்கும் அசோகமித்திரனுக்குமிடையே ஏற்பட்ட ஆழ்ந்த நட்புக்குக் காரணமாக இருந்தது ‘கணையாழி’ பத்திரிகை. அந்தப் பத்திரிகை ஆரம்பித்து அப்போது இரண்டு ஆண்டுகளாகியிருந்தன. அரசியல் பத்திரிகையாகத் தொடங்கிய அதற்கு இலக்கிய முகம் கொடுத்தவர் என்ற வகையில், அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை இருந்தது. இதைப் பற்றி அவரிடம் நான் சொன்னபோது, அவருடைய இயல்புக்கேற்ப, நான் சொன்னதற்கு மேலெழுந்தவாரியாகச் சம்பந்தம் இல்லாததுபோல் தோன்றினும், நுட்பமான நிலையில் தொடர்புடையதாக, “செல்லப்பாவோட ‘புதுக் குரல்கள்’லே கஸ்தூரி ரங்கனின் இரண்டு புதுக் கவிதைகள் இருக்கு” என்றார். எங்கள் முதல் சந்திப்பே அவர் எளிமை மிகவும் சிக்கலானது என்பதை எனக்கு உணர்த்திற்று.

ஆங்கில இலக்கிய விமர்சகர் டாக்டர் ஜான்ஸனைப் பற்றிச் சொல்வார்கள், “அவருக்கு மட்டும் மீன்களைப் பேச வைக்கும் சக்தி இருந்தால், அவை சுறாமீன்கள் போல் பேசும்” என்று. அதாவது, ஜான்ஸனின் இலக்கிய நடை அவ்வளவு ஆர்ப்பாட்டமானது என்பதைச் சொல்ல. அசோகமித்திரனுக்கு அந்த சக்தி இருந்தால், சுறாமீன்கள், மீன்களைப் போல் எளிய, ஆரவாரமில்லாத, மென்மையான குரலில் பேசும். ஆனால், இந்த எளிமையில் புதைந்து கிடக்கும் நுட்பத்தைப் புரிந்துகொள்ளப் படிக்கிறவர்களுக்கு ஆழமான சிந்தனைத் திறன் வேண்டும்.

1969-ல் என் அம்மா டெல்லியில் இறந்தபோது, அவர் எனக்கு ஒரே வரியில் வருத்தம் தெரிவித்திருந்ததை என்னால் மறக்கவியலாது: “ஒருவரால் ஒரு தடவைதான் தம் தாயை இழக்க முடியும், அவ்வளவு மகத்தான விஷயம் இது.”

நான் கோடைவிடுமுறைக்கு டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம், என் நிகழ்ச்சி நிரலின் முதல் குறிப்பு, தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அவர் வீட்டுக்குக் குடும்பத்தோடு விஜயம் செய்வதுதான். இலக்கியம் பற்றி நிறையப் பேசுவோம். அவருக்கு அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிடித்த இலக்கிய ஆசிரியர்கள் வில்லியம் ஃபாக்னர், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஜான் டாஸ் பஸாஸ் போன்றோர். தமிழ்நாட்டுப் பிரபல ‘இலக்கி’யச் சூழ்நிலையைப் பற்றி, சிக்கனமான சொற்களில், அங்கதம் இழைந்தோட ‘பாராட்டுவதுபோல்’ விமர்சனம் செய்வார். அவர் பேசுவதற்கும் எழுவதற்கும் இடையே அவ்வளவு வித்தியாசமிருக்காது. இரண்டுமே, தோற்றத்தில் எளிமையானவை, ஆழமானவை.

அசோகமித்திரன் எழுத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம், அவர் எழுதத் தொடங்கிய காலத்தில், எந்த விதமான இலக்கியம் பற்றிய முன் உறுதியுடனும், கோட்பாடுகளுடனும் எழுதத் தொடங்கினாரோ அதே மாதிரியாக, எந்த விதமான மாற்றங்களுமில்லாமல், பரிசோதனை செய்கிறேன் என்ற பாசாங்குகள் ஏதுமின்றி அறுபது ஆண்டுகளாக எழுதிவந்திருக்கிறார். அந்தக் காலத்தில் அவர் எழுதிய கதை ஒன்றையும், சமீபத்தில் அவர் எழுதிய கதை ஒன்றையும் ஒருசேரப் படித்தால், அவை இரண்டும் அவரால்தான் எழுதப்பட்டிருக்க முடியும் என்ற உள்ளார்ந்த இணைப்பைக் காண முடியும். இந்த இலக்கியத் தீர்மானம் அவரிடம் அந்தக் காலகட்டத்திலேயே இருந்திருக்கிறது என்பது ஒரு வியக்கத்தக்க விஷயம். செவ்வியல் இலக்கியங்களிலே நாம் காண முடிகின்ற இலக்கியத் தீர்மானம் இது.

கீழ்மட்ட மத்தியதரக் குடும்பங்களில் காணும் கதாபாத்திரங்களை, சாதி வேறுபாடின்றி அவர் சித்தரித்திருக்கும் பாங்கு அற்புதமானது. ஆங்கில எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ் மாதிரி உரத்த குரலில் இல்லாவிட்டாலும், அவர் மாதிரியான அவலமும் நகைச் சுவையும் கலந்த வார்ப்பு இக்கதா பாத்திரங்கள். அசோக மித்திரனைப் பொறுத்தவரையில், வறுமை சாதி அறியாதது.

அசோகமித்திரனைப் பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்க இயலாத செய்தியும் ஒன்று உண்டு. அவர் கேலியும் கிண்டலும் கலந்த நடையில், காரசாரமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். ஆனால், வேறொரு புனைபெயரில். என்ன பெயர் தெரியுமா? ‘கிங்கரன்’. எமனின் தூதன்.

‘சுதேசமித்திரன்’ தன் இறுதிக் காலத்தில், இந்திரா காங்கிரஸ் கட்சிப் பத்திரிகையாக இருந்தது. ’கணையாழி’க்கும், ‘சுதேசமித்திர’ னுக்கும் ஒரு வகையான தொடர்பு இருந்த காரணத்தால், அசோகமித்திரனை அரசியல் கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக் கொண்டார் கள். அச்சுறுத்தும் புனைபெயரைச் சூட்டிக் கொண்டவர் அவர்தான். மாற்றுக் கட்சிகளை உயர்தரமான நகைச்சுவையுடன் அக்குவேறாக ஆணி வேறாகக் கிழித்தெறிந்தார் இந்தப் புதிய அவதாரத்தில். ‘தீரன்’ என்ற பெயரில், திராவிடக் கட்சிகளைத் தாக்கிக் ‘கணையாழி’யில் எழுதிவந்த அமரர் நா.பா, “அ.மி. இப்படி சக்கைப் போடு போடுவார்” என்று எதிர்பார்க்கவில்லை என்று என்னிடம் கூறினார். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவருடைய எந்தத் தொகுதியிலும் இடம்பெறவில்லை என்று தோன்றுகிறது. அவற்றை ஆவணப்படுத்தியிருக்க வேண்டுமென்பது என் கருத்து.

அவருடைய நடைக்கும் டாக்டர் உ.வே. சாமிநாதய்யரின் தமிழ் நடைக்குமிடையே ஓர் ஒற்றுமையைக் காண முடிகிறது. பண்டைய தமிழ் இலக்கியத்தின் எல்லை நேர்ந்த உ.வே.சா., ஓர் அற்புத மான எளிய நடையில், ஆழமான கருத்துக்களையும் தெளிவுபடுத்துவார். உ.வே.சா.வை ஊன்றிப் படித்தால்தான் அவருடைய நயமான நகைச்சுவையின் நுட்பம் புரியும். ஆங்கிலத்தில் ‘செல்ஃப்-எஃபேஸிங் ஸ்டைல்’ (self-effacing style) என்பார்கள். உ.வே..சா.வின் நடையில் அசோகமித்திரனுக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. இதை அவர் பல தடவை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

போன நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பின் தோன்றிய இந்திய எழுத்தாளர்களிலே மிகவும் முக்கியமானவர் அசோகமித்திரன். இந்தி எழுத்தாளர்களை இந்திய எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும் மரபு இருக்கும்போது, பிராந்திய மொழி எழுத்தாளர்களை அம்மொழி எழுத்தாளர்களாக மட்டும் குறிப்பிடும் அவல நிலை எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

-இந்திரா பார்த்தசாரதி,

மூத்த தமிழ் எழுத்தாளர், ‘குருதிப்புனல்’, ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ முதலான நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: parthasarathyindira@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x