Last Updated : 30 Mar, 2017 08:59 AM

 

Published : 30 Mar 2017 08:59 AM
Last Updated : 30 Mar 2017 08:59 AM

எளிமையின் உதாரணங்கள்!

1988 மே மாதம்.. திரிபுராவில் 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த இடது முன்னணி அரசு தேர்தலில் தோல்வியடைந்தது. முதல்வர் நிருபென் சக்ரவர்த்தி பதவியை விட்டு விலகி, முதல்வர் இல்லத்திலிருந்து ஒரு சிறிய டிரங்க் பெட்டியை எடுத்துக்கொண்டு, ரிக்�ஷாவில் ஏறி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குச் சென்று தங்கினார். இது தொடர்பாகச் சிறிய அளவில் செய்திகள் வெளியாகின. மறுநாள் தினமணி நாளிதழ் ‘இப்படியும் ஒரு முதல்வர்!’ என்று எழுதியதைத் தொடர்ந்து, எண்ணற்ற வாசகர்கள் தங்கள் வியப்பை, வேட்கையை வெளிப்படுத்தியிருந்தனர். 1991-ல் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் தமிழகம் வந்திருந்தபோது அவருக்குக் கிடைத்த வரவேற்பு அலாதியானது.

1993-ல் மீண்டும் இடது முன்னணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தபோது, ஆதிவாசிகளின் ஆதர்ச நாயகனான தசரத் தேவ் முதல்வரானார். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராயபுரத்தில் இருந்த மருத்துவர் விஸ்வநாதனிடம் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது அரசு விருந்தினர் மாளிகையில் தங்காமல், மேற்கு வங்க அரசு சென்னையில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக் கென ஏற்படுத்தியிருந்த இளைஞர் விடுதியின் ஓர் அறையில்தான் தங்குவார். அவரது தனி மருத்துவர் டாக்டர் பட்டாச்சார்யா மற்றொரு அறையில் தங்குவார். 1998-ல் அவர் இறக்கும் வரை இப்படித்தான் நடந்தது.

தசரத் தேவ் மறைவைத் தொடர்ந்து, 1998-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற மாணிக் சர்க்கார், தொடர்ந்து நான்காவது முறையாகப் பதவியில் நீடிக்கிறார். வட கிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் அமலாக்கப்பட்டு வந்த ராணுவப் படைப் பிரிவுகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (AFSPA) 2015 மே மாதத்தில் திரிபுரா மாநிலத்திலிருந்து முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைச் சாதித்தவர் மாணிக் சர்க்கார்.

அவருக்கு இந்த ஆண்டுக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்படுகிறது. மணிப்பூர் ராணுவப் படைப் பிரிவுகளுக்கான சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவரும் மக்கள் உரிமைகளுக்கான போராளி இரோம் ஷர்மிளா, கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்வியாளராகச் செயல்பட்டுவரும் முகம்மது இஸ்மாயில் ஆகியோருக்கும் இந்த விருது இன்று (மார்ச் 30) சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. இரோம் ஷர்மிளா தற்போது கேரள மாநிலத்தில் சிகிச்சை பெற்றுவருவதால், பாலக்காடு நகரில் தனியாக ஒரு விழாவில் இந்த விருதை அவருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் மூன்று முதல்வர்களும் எளிமையின் இருப்பிடமாக, நேர்மையின் உறைவிடமாக இருப்பதற்கு அந்த மாநிலம் சார்ந்த கலாச்சாரம்தான் காரணமா அல்லது அவர்கள் சார்ந்திருக்கும் இடதுசாரித் தத்துவம் காரணமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சமூக மாற்றத்துக்காகப் போராடிய இ.எம்.எஸ்., ஏ.கே. கோபாலன், இ.கே. நாயனார், அச்சுதானந்தன் என கேரளாவிலும், ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா என மேற்கு வங்கத்திலும், ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, ஏ.நல்லசிவன் என தமிழகத்திலும் எளிமையின், நேர்மையின் உருவங்களை உருவாக்கிய இடதுசாரித் தத்துவத்தின் வழி நிற்பதால்தான் இத்தகைய குணமாற்றத்தை மாணிக் சர்க்கார் போன்ற தலைவர்களிடம் நம்மால் காண முடிகிறது என்பதை என்னால் அனுபவரீதியாக உணர முடிந்தது. இத்தகையோரின் இருப்பும் நடப்புமே நமக்குள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கிறது. இன்றைய தேவை இத்தகு மனிதர்கள்தான்!

- வீ.பா. கணேசன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x