

பசுங்குடில் இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தையும் கரிப்புகை வெளியேற்றத்தையும் குறைக்காவிட்டால், அமெரிக்காவின் கடலோரப் பகுதிகள் பெருமழையால் நீரில் மூழ்குவது இனி வழக்கமாகிவிடும் என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளுக்கும் சேர்த்துத்தான்.
பிரின்ஸ்டன், ரட்கர்ஸ் பல்கலைக்கழகங் களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்காவின் அனைத்துக் கடலோரப் பகுதிகளிலும் பெய்யும் மழையின் அளவை ஒப்பிட்டு ஆய்வுசெய்தனர். ‘100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை’ என்று வர்ணிக்கப்படும் பெருமழை, இனி வழக்கமாவதுடன் ஆண்டுக்காண்டு பல மடங்காகி, 2050-ல் 40 மடங்காகிவிடும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. ‘நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரு மழை பெய்வது என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்யாது. அதற்கு வாய்ப்பு 1% தான்’ என்றாலும், புதிய ஆய்வுகள் தரும் எச்சரிக்கைகள் அச்சமூட்டுகின்றன.
அதிகரிக்கும் மழையளவு
“சான்பிரான்சிஸ்கோ, சியாட்டில் ஆகிய நகரங்கள் 100 ஆண்டு காணாத மழையை இனி 2050 வரையில் தொடர்ந்து பெறத் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும் அதன் அளவு பெருகிக்கொண்டே வரும். சாண்டியாகோ நகரில் ஆண்டுக்கு 10 முறைகூட பெருமழை பெய்யும். ஃப்ளோரிடா மாநிலத்தில் ஆண்டுக்கு 11 முறை பெருமழை பெய்யும். ஹவாய் தீவுக் கூட்டங்களில் மொகுவோலாவில் ஆண்டுக்கு 130 முறைகூட இப்படி வெள்ளம் பெருக்கெடுக்கும்.
நியூயார்க் நகரமே 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று 2050 வரையில் மிகப் பெரிய மழையைச் சந்திக்கும். அதற்குப் பிறகு 2100 வரையில் ஒரு மாதம் விட்டு இன்னொரு மாதத்தில் பெருமழையைச் சந்திக்கும். இந்தப் பெருமழையும் வெள்ளமும் ஆண்டுதோறும் பெரிதாகிக்கொண்டே போய், 40 மடங்காகப் பெருகும். அப்போது அந்த மழையைப் பெருநகரங்களால் தாங்கவே முடியாமல் பேரிழப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு மட்டுமல்லாமல் நகரமே சீர்குலைந்துவிடும். இப்போதே அமெரிக்காவின் பல நகரங்கள் வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன. இது நீடித்தால் நகரை மீட்பதா, அல்லது நகரை அப்படியே கைவிட்டுவிட்டு வெளியேறுவதா என்று மட்டுமே முடிவெடுக்க நேரும்.
கடல் நீர்மட்டம் உயர்கிறது
கடலில் நீர்மட்டம் சில சென்டிமீட்டர் அளவுக்கு உயர்ந்தாலே பிரச்சினைகளை ஏற்படுத்தும். நகரங்களின் தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உள்புகும். நகரிலிருந்து வெளியேறும் ஆறுகள், கழிவுநீரோடைகள் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பொங்கி வழியத் தொடங்கும். சூறாவளிகள் ஏற்படும்.
அமெரிக்காவின் கிழக்குக் கடலோரத்தில் உள்ள நியூஜெர்சி, வர்ஜீனியா, ஃப்ளோரிடா ஆகியவை மெல்ல மெல்ல கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளன. அட்லாண்டிக் சிட்டி, மியாமி பீச் பகுதியில் இப்போதே நல்ல வெயில் நாட்களில், கடல் அலை உயர்ந்து, கடலோரச் சாலைகளில் வெள்ளம் பாய்கிறது. பசிபிக் கடலோரத்தில் 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பெரு வெள்ளம் போன்று இனிமேல் அடிக்கடி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகின்றன. இத்தகைய வெள்ளங்கள் சமீபகாலமாக உலகின் பல பகுதிகளிலும் ஏற்படத் தொடங்கிவிட்டன” என்கிறது இந்த ஆய்வறிக்கை.
2100-ல் பெருங்கடல்களில் நீர்மட்ட உயரம் 8 அடி வரைக்கும்கூட அதிகரிக்கலாம் என்று அமெரிக்காவின் ‘தேசியக் கடல், வளிமண்டல நிர்வாக’அமைப்பு எச்சரித்திருக்கிறது. 2013-ல் உலக வங்கி வெளியிட்ட பருவநிலை பற்றிய எச்சரிக்கை, கடல் நீர்மட்ட உயர்வால் உலகின் 10 பெரிய நகரங்கள் மூழ்கக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் அதில் மியாமி, நியூயார்க், நியூ ஆர்லியான்ஸ், தம்பா, பாஸ்டன் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் உலகப் பருவநிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வால் ஏற்படக்கூடிய சவால்கள் பற்றிய ஆய்வறிக்கையும் இதே எச்சரிக்கையை விடுத்துள்ளன. இனி, கடலோர நகரங்களில் பெருமழை பெய்வது இரட்டிப்பாகப் பெருகும் என்று அது கூறியுள்ளது.