கேரள சட்டப் பேரவையின் 60 ஆண்டுகள்!

கேரள சட்டப் பேரவையின் 60 ஆண்டுகள்!
Updated on
3 min read

கேரள சட்டப் பேரவை உருவாகி 60 ஆண்டுகள் ஆனதைக் கொண் டாடும் அதிகாரபூர்வ நிகழ்ச்சியை கேரள அரசு கொண் டாடி முடித்திருக்கிறது. கேரளத்தில் அமைந்த முதல் அமைச்சரவை தங்களு டையது (இடதுசாரிகள்) என்ற பெருமிதம் இப்போதைய ஆட்சியாளர்களுக்கு இருப்பது எவருடைய கண்ணிலிருந்தும் தப்பியிருக்க முடியாது. (அப்போதிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறகு சோவியத் ஆதரவு, மாவோ ஆதரவு என்று இரு பெரும் பிரிவாகப் பிளந்தது.) ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் ஒரு மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், கொண்டாட்டத்தின் குவி மையமாகவும் அது திகழ்ந்தது.

இஎம்எஸ் அமைச்சரவை

அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, கேரளத்தில் அமைந்த முதல் கம்யூனிஸ்ட் அரசிலிருந்து உத்வேகம் பெறாமல் இருக்க முடியாது. நல்ல சிந்தனையாளரும் தலைவருமான ஏலங்குளம் மணக்கால் சங்கரன் (இஎம்எஸ்) நம்பூதிரிபாடின் திறமையான தலைமையின் கீழ் அமைந்த அமைச்சரவையில் சி. அச்சுத மேனன், கே.ஆர். கௌரி, ஜோசப் முண்டசேரி, வி.ஆர். கிருஷ்ணய்யர் உள்ளிட்ட பலர் அலங்கரித்தனர். நேருவுக்கு இணையான அறிவுஜீவி நம்பூதிரிபாடு. அவருடைய அணுகுமுறையாலேயே கேரளத்துக்குச் சிறப்பு மரியாதை கிடைத்தது.

கேரளம் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று விரும்பினார்களோ அந்தத் துறைகளில் அவர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். கல்வி, பாசன வசதிகள் உள்ளிட்ட விவசாய நலன், நிலச் சீர்திருத்தம் போன்றவற்றில் புதிய, அதே சமயம் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிற்காலத்தில் வந்த கம்யூனிஸ்ட்டுகள், முதல் அரசு அளவுக்குப் பொதுச் சொத்துகளை உருவாக்கத் தவறினார்கள். கேரளத்தை மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. காங்கிரஸின் மாநிலத் தலைவர்களுக்கு தேசியத் தலைவர் களுக்கு இருப்பதைப் போன்ற தொலைநோக்குப் பார்வையும் ஆற்றலும் இருப்பதில்லை.

1957 - கேரளம் பெருமைப்படத்தக்க ஆண்டு. பெருமைக்குரியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆட்சிக்கு வந்த சில வாரங்களுக்கெல்லாம் நிலச் சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்கள். இச்சட்டம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது. ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் இவ்வளவு ஏக்கர் நிலம்தான் என்று உச்சவரம்பு கொண்டுவரப்பட்டது. குடிவாரதாரராக இருக்கும் ஏழை விவசாயிக்கு அவர் சாகுபடி செய்துவந்த நிலம் சொந்தமாக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் அதுவரையில் குடியிருந்த இடம் அவர்களுக்கே சொந்தம் என்று சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதுவரையில் எந்த மாநிலத்திலும் இப்படியொரு புரட்சிகர நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

‘விமோசன சமரம்’

கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கை களுக்கு எதிர்ப்புகள் நில உடைமை யாளர்கள், கல்வி நிறுவனங்களை நடத்திய சாதி மத அமைப்புகள் ஆகியவற்றி டமிருந்து வந்தன. ‘விமோசன சமரம்’ என்ற பெயரில், கம்யூனிஸ்ட் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்படக் கோரி கிளர்ச்சியைத் தொடங்கினர். செயற்கையாக ‘சட்டம் ஒழுங்கு’ பிரச்சினை உருவாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் 356-வது கூறினைப் பயன்படுத்தி, மாநில அரசு பதவியி லிருந்து நீக்கப்பட்டது.

தார்மிகரீதியில் நம்பூதிரிபாடு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், அது அவருடைய தன்னம்பிக்கையைச் சீர் குலைத்தது. பத்தாண்டுகளுக்குள் மீண்டும் முதலமைச்சராக அவரால் வர முடிந்தது. ஆனால், முதல் அரசில் செய்ததைப் போல பெரிய சாதனைகளைப் படைக்க முடியவில்லை. கூட்டணி அரசு அமைக்க முஸ்லிம் லீக்கின் ஆதரவைப் பெற பேரம் பேசியதும், அவர்களுடைய வேண்டுகோளின்படி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஒன்று சேர்த்து ‘மலப்புறம்’ என்ற தனி மாவட்டத்தை ஏற்படுத்தியதும்தான் அடுத்த அரசில் நடந்தது. நிலச் சீர்திருத்த நடவடிக்கையால் ஏற்பட்ட பலனை அறுவடை செய்யும் பேறு அச்சுத மேனனுக்குக் கிடைத்தது. கேரளத்தின் நிலச் சீர்திருத்தம் அம்மாநில வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. பொருளாதாரரீதியாக அதனால் கிடைத்த லாபத்தைவிட, சமூகரீதியாக அதற்குக் கிடைத்த வரவேற்பு அதிகம். நிலங்களைப் பிரித்துக் கொடுத்த பிறகும் உற்பத்தி பெருக வில்லை.

சமூகரீதியாக நிலச் சீர்திருத்தம் ஏற்படுத்திய பலன்கள் நெஞ்சை நிமிர்த்தும் வகையிலானவை. சொந்த நிலத்தை வைத்துத்தான் ஒருவரது அந்தஸ்தைத் தீர்மானிப்பது வழக்கமாக இருப்பதால், நில உடைமையாளர்களான பல சாதியினர் சமூகரீதியாக நல்லுறவுக்கு ஆளானார்கள். ஒரு துளி ரத்தம்கூடச் சிந்தாமல் நடந்த இந்தப் புரட்சிகர மாற்றத்துக்கு ஈடு இணையே கிடையாது.

இன்றைய பொருளாதாரம்

நிலச் சீர்திருத்தத்தால் கேரளத்துக்குக் கிடைத்த பொருளாதாரப் பலனை அளவிடுவது இயலாதது. காரணம், அந்தச் சீர்திருத்தம் செய்து முடிக்கப்படும் காலத்தில் வளைகுடாவுக்குக் கேரளர்கள் அதிக எண்ணிக்கையில் போய் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். அந்தப் பணம் மாநிலத்துக்கு வந்ததால் ஏராளமான குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுதலை பெற்று வளம் பெறத் தொடங்கின. அதற்கு முன்னதாக கேரளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்றவர்களும் கணிசமாக இருந்தனர்.

இதனால், கேரளத்தில் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. சாகுபடி செய்யக்கூடிய நிலங்கள்கூட வேறு பயன்பாட்டுக்கே சென்றன. இதன் காரணமாகவும் கேரளத்தில் உணவு விளைச்சல் குறைந்து, பிற மாநிலங்களை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. உணவு தானியங்கள், காய்கறி, பழங்கள், பால், இறைச்சி போன்றவை கேரளத்தில் தொடர்ந்து விலைவாசி உயர்வுக்கு ஆளாகின்றன. கேரள அரசியல்வர்க்கம் இதைப் பற்றிப் பேசுவதே இல்லை. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளும், மாநில விவசாய வளர்ச்சிக்குக் குந்தகமாக இருக்கின்றன. ஆனால், மாநிலமோ, மத்திய அரசு பொது விநியோக அமைப்புக்குப் போதிய அளவு தானியங்களை அனுப்பாததால்தான் இந்தப் பற்றாக்குறை என்று பழியைப் போடுகிறது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, இந்தியாவின் பிற மாநிலங்களில் காணப்பட்ட வேளாண் உற்பத்தி வளர்ச்சிகூட கேரளத்தில் ஏற்படவில்லை.

1970-களின் தொடக்கத்திலிருந்தே வளைகுடா நாடுகளுடன் கேரளம் தொடர்புகொள்ளத் தொடங்கியதால், மாநிலத்தின் பொருளாதாரமும் உலகமயமாதலின் அலையடிப்புக்கு ஏற்ப மாறுபடத் தொடங்கியது. காலத்தின் போக்கை கேரள அரசியல் கட்சிகளால் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. வலதுசாரிக் கட்சிகள் வியாபாரத்தில் தனிக் கவனம் செலுத்தின. வியாபாரத்தின் ஓர் அங்கமாகிவிட்டது கல்வி. இடதுசாரிக் கட்சிகளோ நல்வாழ்வு நடவடிக்கைகளைப் பெருக்கின. அதனால் பண விநியோகம் பரவலானது.

இரு அணிகளுமே ஆட்சியைப் பிடிக்கப் பல திட்டங்களுடன் போட்டியிட்டன. முரண்பட்ட திட்டங்களால் மாநிலத்தின் வளர்ச்சிதான் பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களை அனுமதிக்கவே கூடாது என்கிறது இடதுசாரி முன்னணி. ஆனால், அரசுத் துறை நிறுவனங்கள் பெருகும் அமைப்பு மாநிலத்துக்கு இல்லை. இருக்கும் அரசு நிறுவனங்களையும் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்தும் போக்கும் இருக்கிறது. சமீபத்தில் அரசுத் துறை நிறுவனப் பதவிக்கு அமைச்சர் ஒருவர் தன்னுடைய உறவினர்களை நியமித்தது அம்பலமானதால், அவர் பதவியிலிருந்தே விலக நேர்ந்திருக்கிறது.

பெண் தலைமைப் பற்றாக்குறை

கேரளத்தில் கல்வி, சுகாதாரம், சமுதாய வளர்ச்சி அம்சங்களில் தேசிய அளவில் முதல்நிலை வகித்தாலும் தலைமைப் பதவிகளில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. அரசியல் கட்சிகளின் முக்கியப் பதவிகளில் கூட பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பிற மாநிலங் களுடன் ஒப்பிடுகையில், பெண் தொழிலாளிகளின் நிர்வாகப் பங்கேற்பும் குறைவு. ஆண்கள் தலைவர்களாக இருக்கும் தொழிற்சங்கங்களில் பெண் களின் கோரிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என்ப தால், பெண் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்காக ‘பெண்கள் ஒற்றுமை’என்ற தனியமைப்பை ஏற்படுத்திக்கொண்டனர்.

வரம்பற்ற உரிமைகளை வாங்கித் தருவதாக வாய்ப்பந்தல் போடும் வாய்ச்சொல் வீரர்களால் சலித்துப் போயிருக்கும் கேரளத்து இளைஞர்கள், தங்களுடைய மாநிலத்தின் பிரச்சினை களுக்குத் தாங்களே விடை காண்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in