Last Updated : 26 Oct, 2014 10:57 AM

 

Published : 26 Oct 2014 10:57 AM
Last Updated : 26 Oct 2014 10:57 AM

கத்திச் சண்டை எதற்காக?

லைக்கா பிரச்சினை மிக எளிமையானது. எதிரியை விட துரோகியையே அதிகம் எதிர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டிலானது. லைக்கா, யுத்தம் முடியும் வரை விடுதலைப்புலிகளின் அமைப்பாக இருந்துவந்தது. காற்று திசை மாறுவதற்கேற்பக் கட்சி மாறியவற்றில் அதுவும் ஒன்று. இந்தத் துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் கூட்டாளிகள் இப்போது கடுமையாக அதை எதிர்க்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி ராஜபக்ச அரசுடன் உறவு வைத்திருப்போரையெல்லாம் எதிர்ப்பது என்பது பாவனைதான்.

அப்படி எதிர்ப்பதானால், முதலில் மோடி, மோடியின் அமைச்சர்கள் யாருமே தமிழ்நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கறுப்புக் கொடி காட்டியிருக்க வேண்டும்.

தினசரி, சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் கொழும்புவுக்குச் செல்லும் விமானங்களில் இலங்கையுடன் வணிக உறவு வைத்திருக்கும் தமிழர்களே அதிகம் போய் வருகிறார்கள். அந்த விமான சர்வீஸ்கள் தடுக்கப்படவில்லை.

ஐரோப்பாவில் புலிகளின் பழைய, இன்றைய ஆதரவு சக்திகளுக்குள்ளே நடக்கும் போராட்டத்தின் வெளிப்பாடுதான் லைக்கா பிரச்சினை. எப்போதும் சினிமாக்காரர்களும் சினிமா தியேட்டரும்தான் எதிர்க்க எளிமையான எதிரிகள்.

லைக்காவை எதிர்த்து தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிக்கொண்டிருந்த அதே நாளில் டெல்லியில் தன் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்திருக்கும் கோத்தபய ராஜபக்சவுடன் அருண் ஜேட்லி ராணுவ ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடத்தினார். விவரங்களை நிருபர்களிடம் வெளியிட மறுத்துவிட்டார்.

அடுத்த முறை அருண் ஜேட்லியோ மோடியோ தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்று தடுக்க முடியுமா? மீனம்பாக்கத்திலிருந்தும் திருச்சியிலிருந்தும் தினசரி கொழும்புவுக்குச் சென்று வரும் விமானத்தைப் பறக்க விடாமல் தடுக்க முடியுமா?

இலங்கைத் தமிழர்களின் அசல் பிரச்சினைகளைத் தீர்க்க சரியான வழிகளைத் தேட இயலாமல், நிழல்களைப் பூதங்களாகக் காட்டிப் போராடும் அபத்தம்தான் நடந்துகொண்டிருக்கிறது.

- ஞாநி, மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x