

சமூக சேவகர் பாபா ஆம்தே, 1973-ல் மகாராஷ்டிரத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள ஹேமல்காசா கிராமத்தில் மக்களுக்குத் தொண்டு செய்ய சிறு உதவி மையத்தைத் தொடங்கினார். அந்தப் பகுதியில் மரியா கோண்ட் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் வசித்துவருகின்றனர். அவர்கள் அனைவரும் வறுமையில் வாடுகின்றனர். காடுகளிலிருந்து அவர்கள் சேகரித்துத்தரும் உலர் பழங்கள், காய்கள், இலைகள், மரப்பட்டைகள், மரப்பிசின்கள் போன்றவற்றை வியாபாரிகள் மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்கி, நகர்ப்புறங்களில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். வனத் துறை அலுவலர்களும் இதர அரசுத் துறை அலுவலர்களும்கூட அந்த மக்களின் உழைப்பைச் சுரண்டத் தவறவில்லை.
அரசு என்ன செய்திருக்கிறது?
அந்த மக்கள் வறுமையில் மட்டுமல்ல, நோயிலும் ஆழ்ந்துவருகின்றனர். அவர்களுடைய குடியிருப்புகளுக்கு மின்சார இணைப்பு, சாலை வசதி, பள்ளிக்கூடம், ஆரம்பச்சுகாதார நிலையம் என்று எந்த அடிப்படை வசதியையும் அரசு செய்துதந்ததில்லை. மலேரியா, காசநோய் போன்றவற்றால் கணிசமானோர் இறக்கின்றனர். எனினும், தங்களுக்குப் பழக்கப்பட்ட காட்டைவிட்டு வெளியேற மனமில்லாமல் வாழ்கின்றனர்.
மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவல்
1980-ல் ஆந்திர மாநிலத்திலிருந்து மாவோயிஸ்ட்டுகள் (நக்ஸல்கள்) ஒரு குழுவாக கட்சிரோலி மாவட்டத்தில் நுழைந்தனர். மக்களிடம் கலந்து பழகி, அவர்களைத் தோழர்களாக்கிக்கொண்டனர். நகர்ப்புறத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் இடைத்தரகர்களும் அரசு ஊழியர்களும் எப்படி அவர்களைச் சுரண்டிப் பிழைக்கின்றனர் என்று படிப்படியாக அவர்களுக்குப் புரியவைத்தனர். அடுத்த சில ஆண்டுகளில் பழங்குடிகளில் பலர் மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாளர்களாக மாறினர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது ஹேமல் கசாவும் சுற்றியுள்ள கிராமங்களும் மாவோயிஸ்ட்டுகளின் அரண்களாகிவிட்டன. கட்சிரோலியை மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி என்கிறார்கள். தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் கீழ் கட்சிரோலி மாவட்டம் முக்கியத் தளமாகச் செயல்படுகிறது. இங்குதான் இளம் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாபா ஆம்தே இங்கே சிறிய அளவில் தொடங்கிய சேவை மையம் இப்போது பெரிய மருத்துவமனையாக வளர்ந்திருக்கிறது. ஆம்தேவின் குடும்பத்தினர் இந்த மருத்துவமனையை நிர்வகிக்கின்றனர். 34 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட மகாராஷ்டிர அரசும் மத்திய அரசும் இந்தப் பகுதியின் அடிப்படை வசதிகளைப் பெரிதாக விரிவுபடுத்திவிடவில்லை. பாபா ஆம்தேவின் மருத்துவமனைக்கு 200 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும்கூட பழங் குடிகள் நோயாளிகளை அழைத்துவருகின்றனர். ஆம்புலன்ஸ்கள் போக அங்கு பல கிராமங்களுக்குப் பாதைகளே கிடையாது.
கட்சிரோலியை மத்திய அரசு கவனிக்கவே இல்லையா என்றால், கவனித்தார்கள். சிறப்பு போலீஸ் படையை நிறுவி, மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களை ஒழித்துவிட்டால் அவர்கள் கட்சிரோலியை விட்டுப் போய்விடுவார்கள் என்று தீர்மானித்தார்கள். அப்படி அவர்கள் சிலரைக் கொன்றும்கூட மாவோயிஸ்ட்டுகளின் செல்வாக்கு அங்கு குறையவில்லை.
தலைவர்களைக் கொல்வதால் மட்டும் மாவோயிஸ்ட் பிரச்சினை தீர்ந்துவிடாது என்பதற்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த மாதம் 11-ம் தேதி நடந்த திடீர் தாக்குதல்களே சாட்சி. இந்தத் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 15 பேர் இறந்துவிட்டனர். டெல்லியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளின் சிந்தனையில் ஏதோ கோளாறு என்பதையே இந்தச் சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன. மாவோயிஸ்ட்டுகளின் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அவர்கள் பின்வாங்கிப் பதுங்குகின்றனர் என்பது உண்மையே. பின்னர், பாதுகாப்புப் படையினர் அசந்திருக்கும் நேரம் பார்த்து, தாக்குதல் நடத்திப் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதும் உண்மையே.
மாவோயிஸ்ட்டுகளின் இன்றைய நிலை
மாவோயிஸ்ட் தலைவர்களில் பலர் கொல்லப்பட்டு விட்டனர், பலர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர், சிலர் மாவோயிஸ்ட் இயக்கத்தை விட்டு விலகிவிட்டனர். இயக்கத் தலைமைக்கும் தங்களுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டுவிட்டதாகவும் இனியும் இப்படித் தலைமறைவு வாழ்க்கை வாழப் பிடிக்கவில்லை என்றும் காவல் துறையிடம் சரண் அடையும்போது சொல்கின்றனர். மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் சில மாவட்டங்களில் தளர்ந்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், அவர்கள் அந்த இயக்கத்தை விட்டுச் சென்றுவிடவில்லை, நேரம் கிடைக்கும்போது தாக்குதலை மேற்கொள்கின்றனர் என்பது சத்தீஸ்கரில் நடந்த தாக்குதலிலிருந்து தெரிகிறது.
மாவோயிஸ்ட்டுகளின் மண்ணில் செயல்படுகிறோம் என்ற உண்மையைப் பாதுகாப்புப் படையினர் மறக்கவே கூடாது. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இடைவிடாமல் ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அவசியம். உளவுத்துறை தரும் தகவல்களை அலட்சியப்படுத்தக் கூடாது. காவலையும் கண்காணிப்பையும் எப்போதும் தளர்த்தக் கூடாது. அதே வேளையில், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகளையும் முழு வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். மக்களுடைய ஆதரவை அரசு பெற்றுவிட்டாலே மற்றவர்களுக்குச் செல்வாக்கில்லாமல் போய்விடும்.
சித்தாந்தத்தில் மாற்றம்
இந்தியாவின் குக்கிராமங்களிலும் காடுகளிலும் மலைகளிலும் வாழும் பழங்குடிகளின் வாழ்க்கையை மாற்றிக்காட்டுகிறோம் என்று சொல்லி, அவர்களைத் தங்களுடைய இயக்கத்தில் தொண்டர்களாகச் சேர்த்துக் கொள்கின்றனர் மாவோயிஸ்ட்டுகள். புரட்சி மூலம் மாற்றங்களைக் கொண்டுவருவோம் என்று தொடக்கக் காலத்தில் சொல்பவர்கள், பிறகு தங்களுடைய கவனத்தையும் வேகத்தையும் வேறிடத்தில் செலுத்து கின்றனர். இதை அந்த அமைப்பிலிருந்து விலகும் பலரும் உறுதிப்படுத்துகின்றனர். இயக்கத்தில் சேர்பவர்களை அடிமைகளாக நடத்துவதாகவும் தலைவர்கள் லட்சியங்களை விட்டு விலகிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். எந்தப் பகுதி மக்களைக் காப்பதற்காகத் தலைமறைவு இயக்கம் நடத்துகின்றனரோ அந்தப் பகுதியிலேயே, தங்களுக்கு எதிரானவர்கள் என்று தாங்கள் சந்தேகிப்பவர்களைக் கொன்று, மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகின்றனர்.
ஒரு சில மாநிலங்களில் பின்தங்கிய பகுதிகளில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், சாலை வசதி, ரேஷன் கடைகள் போன்றவற்றை ஏற்படுத்த அரசு முயன்றாலும் மின்சார இணைப்புக்காக மின் கம்பங்களை நட வந்தாலும், ஆயுதங்களைக் கொண்டு தாக்கி அதையெல்லாம் தடுக்கின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்று வளர்ச்சிப் பணிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
மக்களின் அதிருப்தி
பாதுகாப்புப் படையினரை மாவோயிஸ்ட்டுகள் பகுதிக்கு அனுப்பும் அதே வேகத்தில், வளர்ச்சிப் பணிகளையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மக்கள் அரசை நோக்கிக்கொண்டிருக்கும்போது, அரசு முகத்தை வேறெங்கோ திருப்பிக்கொள்கிறதே என்று அவர்கள் கவலைப்படுகின்றனர். அரசு நம்மை ஒழிக்கவும் மக்களுடைய பின்தங்கிய நிலையைப் போக்கவும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டதால், நம்முடைய செல்வாக்கு மங்கிவிடும் என்று அஞ்சியே மாவோயிஸ்ட்டுகள், இப்படித் திடீர்த் தாக்குதல் நடத்தி ஆட்சியாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்துகின்றனர். இந்தத் தாக்குதல் மாவோயிஸ்ட்டுகள் பலமான நிலையில் இருப்பதால் நடப்பதல்ல, பலமிழக்கிறோம் என்ற அச்சத்தால், மக்கள் நம்மைவிட்டு விலகுகிறார்கள் என்ற விரக்தியால் நடத்தப்படுகிறது.
மே மாதத்துக்குப் பிறகு, மத்தியில் புதிய அரசு அமையவிருக்கிறது. அந்த அரசும் இப்போதைய அரசு போலவே கண்ணை மூடிக்கொண்டு மேற்கொண்டு பாதுகாப்புப் படை வீரர்களை மட்டும் மாவோயிஸ்ட்டுகள் பகுதிக்கு அனுப்பிவைத்து, கடமை தீர்ந்தது என்று நினைக்குமா அல்லது பழங்குடிகளின் உண்மையான சமூக, பொருளாதார விடுதலைக்கு அதிகாரம் பெற வழிவகுக்குமா என்பதைப் பொறுத்துத்தான் இந்த உள்நாட்டுப் போர் ஓயுமா, நீடிக்குமா என்று கூற முடியும்.
© தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி