

கூகிள் தேடுபொறியில் இன்று ஆங்கிலத்தில் Kamal Haasan என்று தட்டச்சுச் செய்தால் அது நாம் அடித்து முடிப்பதற்கு முன்பே கமல் ஹாசன் எனத் தமிழில், தமிழ் வரிவடிவில், காட்டிவிடுகிறது. இதுபோலவே பல சொற்களும் தேடுபொறியில் தமிழ் வரிவடிவில் தாமாகவே தோன்றுகின்றன. இணையத் தொழில்நுட்பத்தில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட அதிசயம் எதுவும் கிடையாது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ் வரிவடிவில் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஏற்கனவே உள்ளிட்டு வைத்திருந்தால்தான் இப்படித் தோன்றுவது சாத்தியமாகும். தமிழுக்காக, தமிழருக்காக கூகிள் தேடுபொறி நிறுவனத்தினர் செய்துவைத்திருக்கும் வசதி இது.
இன்று இணையத்தில் தமிழ் வரிவடிவில் தமிழைத் தட்டச்சு செய்வதற்கான வசதிகள் ஏராளமாக உள்ளன. இவை நாம் அடிக்க விரும்பும் சொற்களை முன்னூகித்து நமக்கான தேர்வுகளை வழங்குகின்றன. அம் என்று அடித்ததுமே அம்மா என்னும் சொல் கீழே தோன்றுகிறது. கணக் என்று நாம் அடிப்பதற்குள் கணக்கு, கணக்கியல் எனப் பல தேர்வுகள் தோன்றுகின்றன. இவையும் முன்னரே உள்ளிட்ட சொற்கள்தாம். கைபேசிகளிலும் தமிழ் வரிவடிவில் தமிழைப் படிக்கவும் அடிக்கவும் வசதி உள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனமோ ஆப்பிள் நிறுவனமோ தமிழ்ச் சேவை செய்வதற்காக இவற்றைச் செய்யவில்லை என்பது வெளிப்படை. பல்வேறு மொழிகளுக்கும் இத்தகையசேவைகளை இந்நிறுவனங்கள் வழங்குகின்றன. தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருப்பது நிறுவனங்களின் தன்மை. வாடிக்கையாளர்களின் தொழில் சார்ந்த அம்சங்களை மட்டுமின்றி மொழி, சமயம் உள்ளிட்ட அவர்களுடைய பண்பாட்டுத் தேவைகளையும் ஆர்வங்களையும் நிறைவேறுவது வர்த்தகத்திற்கு உதவும் என்பதால் நிறுவனங்கள் இவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்த அடிப்படையில்தான் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பண்பாட்டுக் கூறுகளும் மொழிகளும் அதி நவீன தகவல் தொழில்நுட்பங்களின் செயலிகளில் இடம்பெறுகின்றன.
உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழர்களை அவர்களது மொழியின் மூலம், அவர்களுக்கேயான வரிவடிவத்தின் மூலம் அணுகுவது தனது வர்த்தகத்திற்குப் பெரிதும் துணை செய்யக்கூடியது என்பது மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் தமிழ் சார்ந்த முனைப்புகளின் முக்கியமான காரணி. இதே காரணம்தான் கார்ட்டூன் நெட்வொர்க், டிஸ்கவரி போன்ற தொலைக்காட்சிகள் தமிழில் பேசுவதற்கும் காரணம்.
தமிழர்களின் எண்ணிக்கை, அவர்களுடைய பொருளாதார வலிமை, நவீன தகவல் தொழில்நுட்ப அம்சங்களுடன் அவர்களுக்கு இருக்கும் நெருக்கம் முதலான பல காரணங்களால் இந்தச் சூழல் உருவாகியிருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலை இல்லை. வாழ்வாதாரத்திற்குத் தமிழ் உதவாது என்னும் நிலையில் தமிழர்களே தமிழ் படிக்கவும் தமிழில் படிக்கவும் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள். அறிவு, வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து எனப் பலவும் ஆங்கிலத்துடன் மட்டுமே தொடர்புடையதாக இருந்தன. எனவே படித்த, வசதி படைத்த மேல்தட்டு மக்களும் அவர்களைப் போல ஆக வேண்டும் என்று துடிக்கும் நடுத்தர வர்க்கமும் தமிழால் பலனில்லை என்னும் முடிவுக்கு வந்தன. வாழ்வாதாரம், அந்தஸ்து சார்ந்த சூட்சுமமான கணக்குகள் காலப்போக்கில் ஏற்படுத்திய தாக்கம் இது. பண்பாடு ஆழமானதுதான். ஆனால் பொருளாதாரம் வீரியமானது. எந்த ஒரு பண்பாட்டுக் கூறும் வயிற்றுக்குச் சோறிடும் திராணி இல்லையேல் தாக்குப் பிடிப்பது கடினம்.
தமிழும் சோறு போடும்
இந்த நிலை தொண்ணூறுகளில் மாறத் தொடங்கியது. தமிழும் சோறு போடும் என்னும் நிலை உருவானது. பல்வேறு வழிமுறைகளால் பொருளாதார வளர்ச்சி பெற்ற தலைமுறையினரின் பொருளாதாரம் சார்ந்த பதற்றம் குறைந்ததும் பண்பாட்டு வேர்கள் மீது அவர்களது கவனம் திரும்பியது. அதே சமயத்தில் தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்கள் தமிழிலும் பெருகியதால் தமிழின் பொருளாதார மதிப்பு உயர்ந்திருக்கிறது. இனிமேலும் தமிழ் என்பது வெறும் பழம் பெருமை அல்ல. அது இன்று நமக்கு உதவும் கருவி. வயிறாரச் சாப்பிட, கேளிக்கைகளை அனுபவிக்க, வீடு வாங்க, உதவக்கூடிய ஒரு கருவி. ஏற்கனவே இருந்த பழம்பெருமை சார்ந்த நினைவுகளும் புதிய வலிமையும் சேர்ந்து தமிழின் அந்தஸ்தையும் மதிப்பையும் உயர்த்தியிருக்கின்றன. இன்று தமிழ் சார்ந்து இயங்குவது என்பது வெறும் குறியீட்டு மதிப்புக் கொண்டதல்ல. அது உங்கள் வங்கிக் கணக்கோடு சாதகமான முறையில் நேரடித் தொடர்பு கொண்டது.
இந்த வளர்ச்சிதான் உலகைத் தமிழின் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறது. உலகளாவிய ஊடக நிறுவனங்கள் தமிழின் பொருள் சார்ந்த சமகால முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழர்களுடன் தமிழில் பேசவும் தமிழ் வரிவடிவில் அவர்களுடன் உறவாடவும் தொடங்கியிருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்தைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்ட விதத்தாலும் தமிழர்களின் இன்றைய பொருளாதார பலத்தாலும் அவர்களுடைய அரசியல், சமூக அந்தஸ்தாலும் தமிழ் உணர்வாலும் விளைந்த வெற்றி இது.
இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டிய தருணம் இது. தமிழின் நடைமுறை சார் பயனை மேலும் மேலும் வளர்ப்பதன் மூலம் தமிழின் வலுவையும் வீச்சையும் வளர்க்கும் உத்வேகத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.
பிரச்சினைகள், சவால்கள்
தமிழ் வழிக் கல்விக்கான வரவேற்பும் பள்ளிகளில் தமிழ் படிப்பதற்கான ஆர்வமும் குறைந்துள்ளன என்பன போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் தமிழின் பயன் மதிப்பைப் பெருக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழின் எல்லைகள் விரிவடைந்துள்ளதைப் பார்க்கும்போது தமிழின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்னும் நம்பிக்கையே ஏற்படுகிறது. இணையத்தின் வருகைக்குப் பின் தமிழில் பல விஷயங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. ஆண்டாளின் பாடல்களையோ வதனமே சந்திர பிம்பமோ என்னும் பாடலின் வரிகளையோ படிக்க நூலகத்துக்குச் சென்று தேட வேண்டிய அவசியம் இல்லை. பெரு வெடிப்புப் பற்றித் தமிழில் படிக்கவும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் புகழ்பெற்ற உரையைத் தமிழில் படிக்கவும் மெனக்கெட வேண்டியதில்லை. தமிழில் காமக் கதைகள் படிக்க முட்டுச் சந்துக்குள் சென்று சரோஜாதேவி புத்தகத்தை வாங்கி வேட்டிக்குள் மறைத்து எடுத்துவர வேண்டியதில்லை. எல்லாம் இணையத்தில் கிடைக்கின்றன. தமிழின் சாத்தியங்களைக் கற்பனை செய்ய முடியாத அளவுக்குப் பரவலாக்கியிருக்கிறது இணைய வெளி. தமிழ் முன் எப்போதையும்விட இப்போது திறன்கூடியிருக்கிறது. இந்தத் திறனைக் கொண்டு தமிழை மேலும் வளர்க்க முடியும் என்பதே யதார்த்தம்.
அடுத்த தலைமுறை தமிழைப் படிக்க ஊக்குவிக்கப் புதுப்புது வழிமுறைகளைக் காணத்தான் வேண்டும். ஆனால் அது நம்மால் முடியாத ஒன்றல்ல என்பதை அண்மைக் கால வரலாறே சொல்கிறது. தொண்ணூறுகளுக்கு முன்பு தமிழில் பேசக்கூடத் தயங்கிய தமிழின் ஒரு பிரிவினர் இன்று காட்சி ஊடகங்களில் தமிழை வெளுத்துவாங்குகிறார்கள். கோடிக்கணக்கான பணம் இந்தத் துறையில் புழங்குகிறது. தமிழின் பயன் மதிப்புக் கூடியிருப்பதன் விளைவு இது. இந்தப் பயன் மதிப்பை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே சென்றால் தமிழைப் படிக்கும் ஆர்வம் தானாக வரும்.
தமிழால் முதலிடம்
இத்தகைய சூழ்நிலையில் தமிழையோ அதன் செறிவான வரிவடிவத்தையோ விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை. தமிழை வேறு வரி வடிவத்தில் படிப்பதை வசதியாகச் சிலர் கருதக்கூடும் என்றால் அதை எண்ணிப் பதற்றமடையத் தேவையில்லை. வரிவடிவ மாற்றம் என்னும் யோசனையை காந்தி, நேரு, பெரியார் உள்ளிட்ட பலர் முன்வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொன்ன காலகட்டத்தின் அரசியல், சமூகப் பின்புலங்களிலிருந்து அதைப் பிரித்துப் பார்க்க முடியாது. அந்தப் பின்புலங்கள் இன்று மாறிவிட்டன. எனவே இன்றுள்ள நிலையைக் கணக்கில் கொண்டே இதை அணுக வேண்டும். இன்றுள்ள நிலை தமிழுக்கும் தமிழ் வரிவடிவத்துக்கும் உலக அளவில் மதிப்புக் கூடிய நிலை. நவீன தொழில்நுட்பத்துக்கேற்பத் தமிழ்
தன்னைப் பல விதங்களிலும் தகவமைத்துக்கொண்டிருக்கும் காலம் இது. இந்த வலிமையை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டியதைப் பற்றித்தான் இன்று கவலைப்பட வேண்டும்.
தமிழின் பயன் மதிப்பைக் கூட்டவும் அதன் எல்லைகளை விரிவுபடுத்தவுமான முயற்சிகளும் வளர்ச்சிகளும் தொடரும் பட்சத்தில் தமிழுக்கான ஆதரவு நாம் எதிர்பாராத இடங்களிலிருந்தும் வரும். நாம் நம்பிக்கையோடு பயணத்தைத் தொடரலாம். உலகம் துணை நிற்கும். உடன் வரும்.