

பெரும் கவனத்தை ஈர்த்திருக்கும் ‘பாகுபலி 2’ படத்தின் வசூல், ரூ.1500 கோடியைத் தாண்டியிருக்கிறது பிரபலமான நடிகர் ஒருவர்கூட இல்லாமல், ஒரு தென்னிந்தியப் படம் வட இந்தியப் பார்வையாளர்களிடம் இத்தனை வரவேற்பைப் பெற்றது எப்படி என்று பலருக்கும் ஆச்சரியம்.
‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களும் இந்த அளவுக்குப் புகழ்பெற்றதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், கதையை சுவாரசியமாகச் சொன்ன விதம். அமர் சித்திரக் கதைகளின் அற்புத உலகத்தை, நிஜ அனுபவத்தைத் தரும் மூன்று மணி நேரப் படைப்பாக அப்படத்தை உருவாக்கியது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் குறிப்பிடத்தக்க சாதனை. இதுவரை எந்த ஒரு திரைக் கலைஞரும் உருவாக்காத அளவுக்கு அவரால் பிரம்மாண்டமாக ஒரு இந்திய ‘அதிநாயக’னை உருவாக்க முடிந்திருக்கிறது.
இந்த இந்திய ‘அதிநாயகன்’ கலாச்சாரக் கூறுகளைக் கட்டவிழ்ப்போம். முதலாவதாக, அவர் சந்தேகமில்லாமல் ஒரு இந்து. சத்திரியர். தங்கள் மீது படையெடுக்கும் காட்டுமிராண்டிக் கூட்டத்தை நிர்மூலமாக்குகின்ற ஒரு இந்து ராணுவத்தை வழிநடத்தும் சத்திரிய அதிநாயகனாக பாகுபலியைச் சித்திரிக்கும் இப்படத்தின் இரண்டு பாகங்களும், இந்துக்களை வீரமிக்க இனத்தினராகக் காட்டும் சக்திவாய்ந்த கற்பனைக் கதையைப் பிரதிபலிக்கின்றன.
பண்டைய இந்தியாவின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் ஒரு பிரச்சாரப் படம் வேண்டும் என்று நினைக்கும் இந்துத்வ ஆதரவாளர்களுக்கு இதைவிட ஒரு சிறப்பான படம் வேண்டியதில்லை. படத்தின் தயாரிப்பாளர்கள் மீது இந்தப் பார்வையைச் சுமத்துவது இதன் நோக்கம் அல்ல. தங்கள் படத்தின் உள்ளர்த்தம் பற்றி அவர்கள் அறியாமல் இருக்கலாம். யுத்த வீர நாயகனான பாகுபலியின் மத அடையாளமும் சாதி அடையாளமும் யதேச்சையானவை என்று சிலர் சொல்லலாம். அப்படி அல்ல. அவனது கதாபாத்திரமும், உலக ஞானமும் சத்திரிய அறத்தால் வரையறுக்கப்பட்டவை. கதாபாத்திரங்கள், கதை நடக்கும் மகிழ்மதி ராஜ்ஜியம் ஆகியவற்றின் இந்துப் பண்பாடு படம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. படத்தின் வசனம், நிலப்பரப்பு, உடை மட்டுமல்லாமல் படத்தின் கிளைக் கதைகளும் இந்து ஆணைகள், அடையாளங்களின் அடிப்படையில் அமைந்தவை - மிகப் பெரிய யானைகள், சிவலிங்கங்கள் முதல் யாகங்கள் நடத்தியபடி, ஸ்லோகங்களை உச்சரித்தபடி, சிக்கலான தருணங்களில் ஜோதிட ஆலோசனை வழங்கியபடி படத்தின் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பிராமண புரோகிதர்கள் வரை.
மகிழ்மதி தேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் காட்டுமிராண்டிகளைக் கறுப்பு நிறத்தவர்களாக, பழங்குடி இனத்தவர்களாகச் சித்திரிக்கிறது படம். மகிழ்மதி இந்தியத் துணைக் கண்டத்தில் அமைந்திருக்கும் ராஜ்ஜியம் எனும் வகையில், சிவந்த நிறமும், ஆரியர்களைப் போன்ற தோற்றமும் கொண்ட சத்திரிய அதிநாயகர்களான பண்டைய இந்து ராஜ்ஜியத்தின் வீரர்கள், எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், புத்திக்கூர்மை இல்லாத சாதியற்ற / பழங்குடிகளின் படையை வெற்றிகரமாக வீழ்த்துவதாகச் சித்திரிக்கிறது கதை. திறமையாக உருவாக்கப்பட்ட கதைக் களமும், வண்ணமயமான காட்சிகளும் கொண்ட படத்தின் உட்பிரதி சாதிப் படிநிலையைப் போற்றுகிறது. சாதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் இந்து சமூகத்தை இணைக்க முற்படுவதாகப் படத்தின் தொனி தெரிகிறது. ஆனால், சாதிப் பிரிவுகளை நீக்குவதன் மூலம் அல்ல; சத்திரிய வீரனான ஒரு பரிபூரணமான இந்துவின் பின்னால் அணி திரளுமாறு மக்களை வற்புறுத்துகிறது. சத்திரிய கெளரவ நெறிமுறையை அனைத்து இந்துக்களுக்குமான சிறந்த நோக்கமாகச் சித்திரிக்கும் இப்படம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இந்துக்களின் கடமை, சத்திரியர்களின் ஆட்சி உரிமையை அங்கீகரிப்பதும், அவர்களது ஆணைக்கு அடிபணிவதும்தான் என்றே சித்திரிக்கிறது.
மக்கள் தங்கள் உலகத்தை மற்றவர்களுடனும் தங்களுடனும் அடையாளப்படுத்திக்கொள்ள ஒரு கலாச்சார உருவகமாக அதிநாயகர்களை வரித்துக்கொள்கிறார்கள். இந்து தேசியவாத உணர்வுகள் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் பாகுபலி படங்கள், மிக முக்கியமான கலாச்சாரத் தலையீட்டை ஏற்படுத்துகின்றன.