

பதின்ம வயதினருக்கு ஆபத்தைவிட, லாபமும் மகிழ்ச்சியும்தான் பெரிதாகத் தோன்றுகின்றன
பதின்மூன்று முதல் பத்தொன்பது வயது வரையான காலகட்டம் தமிழில் ‘பதின்ம வயது’ என்றும் ஆங்கிலத்தில் ‘டீன் ஏஜ்’ என்றும் குறிப்பிடப்படும். அந்த எண்களின் வயதில் ‘டீன்’ என்று வருவதால் அதற்கு அந்தப் பெயர். அந்தக் காலகட்டம், மனித வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. பெற்றோர் ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு’ இருக்கக்கூடிய காலகட்டம் அது. தமது பிள்ளைகள் செய்கிற சில காரியங்களும், அவற்றுக்கான காரணங்களும் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றும். பழசையெல்லாம் மறந்துவிட்டு, “எங்க காலத்திலே நாங்க இப்படியெல்லாம் இருந்ததில்லை!” என்பார்கள்.
அந்த வயதில் தென்படும் நடவடிக்கை கள் மற்றும் நடத்தைகளுக்கான காரணங் களைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்றுவருகிறார்கள். அந்தப் ‘பசங்களுக்கு’ என்ன ஆயிற்று? அவர்கள் ஏன் அப்படி யெல்லாம் நடந்துகொள்கிறார்கள்? யாருக்கும் விடை தெரியவில்லை. குட்டிச் சாத்தான் பிடித்து ஆட்டுகிறது என்றுகூடச் சொல்வாருண்டு.
பருவத்தின் பிரச்சினைகள்
2,300 ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ் டாட்டில், “அந்த வயதில் இளமை மதுவைப் போல ஒரு போதையை உண்டாக்குகிறது” என்றார். இன்றைய உளவியலாளர்கள்கூடக் கிட்டத்தட்ட அதே போலத்தான் இளைஞர் களை வர்ணிக்கிறார்கள். “புயலும் இறுக்கமும் நிறைந்த பருவம் முன்னர் நாகரிகமடையாத சமூகங்களிலும் நிலவியது” என்கிறார் ஸ்டான்லி ஹால். வளரிளம் பருவத்தை, ‘‘உளவியலுக்கும் பாலியலுக்கும் இடையி லான இழுபறிக் கட்டம்’’ என விவரிக்கிறார் ஃப்ராய்டு. ‘‘ஒருவர் தன்னை அடையாளம் காணவும் புரிந்துகொள்ளவும் முயல்கிற பருவம்’’ என்கிறார் எரிக் எரிக்சன் என்ற உளவியலாளர். வளர்ச்சியின் பதின்ம வயது ஆண்டுகள் எல்லாச் சமூகங்களிலுமே பிரச்சினைகளை உண்டாக்குவதாகவே இருக்கின்றன.
20-ம் நூற்றாண்டின் இறுதியில், மூளையைப் படமெடுக்கும் உத்திகளும் உளவியல் உத்திகளும் வளர்ச்சியடைந்தன. அதன் பிறகும் விஞ்ஞானிகள், ‘இந்தப் பசங்க ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?’ என்று கேட்டுக்கொண்டேதான் இருந்தார்கள். நமது மூளை முதிர்ச்சி அடைய, அதுவரை எண்ணப்பட்டிருந்ததைவிட அதிக காலம் பிடிக்கிறது என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
மூளையின் சீரமைப்பு
12 வயது முதல் 25 வயது வரையான காலத்தில் மூளையில் ஒரு மாபெரும் மறு சீரமைப்பு நிகழ்கிறது. ஆறு வயதில் அதன் பருமம் தனது அளவில் 90 சதவீதத்தை எட்டிவிடும். அதன் பிறகு, தலையில் ஏற்படும் வளர்ச்சி என்பது, மண்டையோட்டின் தடிமன் அதிகரிப்பதுதான். வளரிளம் பருவத்தில் மூளை, விரிவான அளவில் நரம்பு வலையமைப்புகளையும் செய்தி கடத்தும் நியூரான் இணைப்புகளையும் செப்பனிட்டுப் புதுப்பித்துக்கொள்கிறது. மூளையின் பல்வேறு செய்தி கடத்துத் திறன்கள் அதிகரிக்கின்றன. மூளை விரைவானதாகவும் அதிக நவீனமாகவும் மாறுகிறது.
இந்த வளர்ச்சி 20 வயது வரை தொடர்கிறது. இந்த மாற்றங்கள் மூளையின் தண்டு உள்ள பின்பகுதியிலிருந்து முன்பகுதி வரை மெதுவாகப் பரவுகின்றன. நினைவுத் திறன், பகுப்பாய்வுத் திறன், திட்டமிடும் திறன் ஆகியவற்றை ஆளும் பகுதிகள் வளர்ச்சியுறுகின்றன. கடந்த கால அனுபவங்கள் மற்றும் நினைவுகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் அதிக மாகிறது. தூண்டல், ஆசைகள், இலக்குகள், சுயநலம், விதிமுறைகள், நல்லொழுக்க நியதி கள், உத்தி வகுப்புத் திறன் போன்றவை மேம்படுகின்றன. வயதாக வயதாகச் சிந்தித்துச் செயல்படும் திறன் அதிகரித்து, உணர்ச்சியின் பாற்பட்டு அவசரக் காரியங் களைச் செய்யும் போக்கு குறைகிறது.
சாகசங்களில் நாட்டம்
வளரிளம் பருவத்தில் தென்படும் நடத்தை விசித்திரங்களுக்கு அனுபவப் பற்றாக் குறையுடன், மூளையில் உருவாகிக்கொண் டிருக்கும் புதிய வலையமைப்புகளைப் பயன்படுத்தப் பழகாததும் காரணம். காலையில் கலகலப்பாகப் பேசும் பையன், மதிய நேரத்தில் எரிந்து விழுவான். ஏதாவது பணிக்கு ஏவினால், “முடியாது போ” என்று சிடுசிடுப்பவன், சற்று நேரத்துக்குப் பிறகு சொன்ன பணியுடன் சொல்லாத பணிகளையும் செய்து முடிப்பான். மன இறுக்கம், களைப்பு, சவால்கள் போன்றவை இதற்குக் காரணமாயிருக்கும். அபிகைல் பாயர்டு என்ற ஆய்வாளர் இந்த நடத்தையை ‘நரம்பிழைத் தள்ளாட்டம்’ என்கிறார். சிறு குழந்தை தவழ் நிலையிலிருந்து முன்னேறி, நின்று தயக்கத்துடன் சிறு சிறு அடியாக நடக்க முயலும் கட்டத்தைப் போன்றது இது.
பதின்ம வயதில் ஒருவர் பயம், தயக்கம், முட்டாள்தனம், அவசரம், சுயநலம், சிந்தித்துச் செயல்படாமல் தடுமாறுவது போன்ற குணங்களைக் கொண்டிருப்பதாகப் பெரியவர்களுக்குத் தோன்றும். அது சரியல்ல. பெரியவர்கள் பிற நல்ல குணங்களைப் பாராமல், மேற்சொன்ன குணங்களை மட்டுமே கவனிக்கிறார்கள். பதின்ம வயதில் எல்லாருக்கும் சாகச விளையாட்டுகளில் நாட்டம் வரும். பிறரை வியக்க வைக்க வேண்டும், பாராட்ட வைக்க வேண்டும் என்பதே அந்த நாட்டத்தின் நோக்கம்.
டோப்பாமைனின் தீவிரம்
பெரியவர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடத் தொடங்கும்போது முன் பின் விளைவுகளை எண்ணித் துணிகிறார்கள். இளைஞர்கள் முதலில் துணிந்து இறங்கி விட்டு, காலம் கடந்த பிறகு நடந்ததை எண்ணி வருந்துகிறார்கள். அது பெரும்பாலும் கழிவிரக்கமாகத்தான் இருக்கும். பின் விளைவுகளை இளைஞர்கள் குறைத்தே மதிப்பிடுகிறார்கள். “ஒண்ணும் ஆகாது - என்னதான் ஆகுதுன்னு பார்த்துவிடுவோம் - அப்படியே ஏதாவது ஆனாலும் சமாளித்துவிடலாம்” என்பன போன்ற எண்ணங்கள்தான் அதிகமாக ஏற்படுகின்றன. ஆபத்தைவிட லாபமும் மகிழ்ச்சியும்தான் பெரிதாகத் தோன்றுகின்றன. அந்த வயதில் மூளையில் சுரக்கும் ‘டோப்பாமை’னின் விளைவு தீவிரமாயிருக்கும். அது கற்றல், முடிவெடுத்தல் போன்றவற்றை மேம்படுத்துவது. அதன் காரணமாகவே பதின்ம வயதினர் விரைந்து கற்பதிலும் பலன் பெறுவதிலும் பரிசு வாங்குவதிலும் ஆர்வம் மிகுந்திருப்பார்கள். வெற்றி பெற்றால் துள்ளிக்குதித்து ஆடுவர், தோல்வி பெற்றால் அழுவதில் சந்திரமதியை மிஞ்சுவர்.
பதின்ம வயதில் மூளையில் சுரக்கும் ‘ஆக்சிடோசின்’ நட்புகளை விரும்பி ஏற்கச் செய்கிறது. குறிப்பாக, அதே வயதினருடன் அதிகமாக நட்புகள் உருவாகும். பிற்காலத் தில் நண்பர்களால் நன்மைகள் மற்றும் உதவிகள் கிடைக்கும் என்ற உள்ளார்ந்த எண்ணத்தை ஆக்சிடோசின் உண்டாக்கும். சம வயதினருடனான நட்பு அப்பருவத்தில் முதன்மையான இலக்காகவும், தேர்வாக வும், வலுவானதாகவும் இருக்கும். சம வயதுள்ளவர்களால் ஒதுக்கி வைக்கப்படு கிறவர், பெரும் துயரத்துக்கு உள்ளாவர். அது தனது இருப்புக்கே ஆபத்தானது என்று அவர் கருதுவார். பிறக்கும் போது புலப்படும் உலகம் பெற்றோர்களால் உருவாக்கப்பட்டது. பதின்ம வயதில் புலப் படும் உலகம் அதே வயது நண்பர்களால் வடிவமைக்கப்படுகிறது. நண்பனின் திருமணத்துக்கு நம்மை அழைக்காவிட்டால், அவ்வளவாகக் கவலைப்பட மாட்டோம். ஆனால், பதின்ம வயதில் நண்பனின் பிறந்த நாள் விழாவுக்கு அழைக்கப்படாதவன் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவான்.
- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.