Published : 26 Dec 2013 09:43 AM
Last Updated : 26 Dec 2013 09:43 AM

கணக்குத் தீர்க்க சரியான நேரம்

அமெரிக்காவுடனான இந்தியாவின் மோதல் சர்வதேச நிகழ்வுகளில் ஒரு திடீர் திருப்பம். கண் சிமிட்டுகிற நேரத்துக்குள் என்னென்னவோ நடந்துவிட்டன. பொதுவாக, ஒரு நாவலில் இதுபோன்ற திருப்பங்களை எழுதிச்செல்ல எழுத்தாளன் விரும்பினாலும்கூட அதை எழுதிச்செல்ல வாய்ப்பிருக்காது. அதனால், இன்றைய இந்தியாவின் பொங்கும் ஆவேசத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் வியப்பூட்டும் விழிகளுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அமுத கலசம் திரண்டு நின்றது. வெளியே ஒரு துளி விஷம் கண்ணுக்கு மறைவாக எங்கே எப்படி இருந்ததோ? திடீரென்று இந்தியா போர்க்கோலம் பூண்டுவிட்டது. மன்மோகன் சிங் தன் ஆட்சிக் காலத்தின் ஒவ்வொரு விநாடியையும் அமெரிக்க விதிவசமெனப் பேணியிருந்தார். அவர் காங்கிரஸ் தலைமையின் விசுவாசியாகவும் அமெரிக்க விசுவாசியாகவும் இரட்டைக் கதாபாத்திரங்களை ஏற்று அவரளவில் சிறப்பாகச் செயல்பட்டார்.

இன்னும் தெளிவுடன் வரையறுத்தால், அமெரிக்க நலன்கள் இந்தியாவில் பாதிக்கப்படும்போது அவர் தன் கட்சித் தலைமையுடன் மோதல் போக்கைக் கைக்கொள்ளவும் தயங்கியதில்லை. 10 ஆண்டுகளின் விசுவாச ஜெபத்தைக் கைக்கு அடக்கமாக இருந்த கடைசி நாட்களில் அவர் பறிகொடுத்திருக்கிறார். இந்த 10 ஆண்டுகளில் முதன்முதலாகக் களையற்றுப்போன ஓர் இருண்ட முகத்தை நம் பிரதமரிடம் பார்க்கிறோம்.

வசூலிக்க வேண்டிய கடன்கள்

அமெரிக்காவின் மீதான இந்தியர்களின் கோபம் இப்படி ஒரு பெரும் ஆவேசமாக திரண்டுநிற்பது நல்லது. அதே சமயத்தில், முன்னர் நம்முடைய மாபெரும் ஆளுமைகளுக்கு அமெரிக்காவால் நேர்ந்த அவமரியாதைக்கான வட்டியையும் இதில் சேர்த்து எடுத்துவிட நம்முடைய பொதுச் சமூகம் நினைத்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஊதிப் பெருகி நிற்கிற இன்றைய கோபத்தை அப்படியும் கணக்கெடுத்துக்கொள்ளலாம் என்று என் நண்பர் சொன்னார்.

தேவயானி கோப்ரகடேவின் வாயிலாக இது இந்தியாவுக்குத் திட்டமிட்டே இழைக்கப்பட்ட கொடுமையெனில், இந்தியா ஆற்ற வேண்டிய பங்கு இன்னொன்றும் இருக்கிறது. அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு நம் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது. முன்னர் போபாலில் நடந்த யூனியன் கார்பைட் ஆலை விஷவாயுக் கசிவில் அந்த ஆலையின் உரிமையாளர் டேவிட் ஆண்டர்சன், வழக்கு விசாரணைகளுக்குக்கூட உட்படுத்தப்படாமல் பத்திரமாக வழியனுப்பி வைக்கப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் நாளதுவரை கரையேறவில்லை. உடல் துயரமும் மனத்துயரமும் ஒன்றுகூடி எல்லோராலும் கைவிடப்பட்ட அனாதைகள் போன்று சொந்த மண்ணிலேயே வாழ்கின்றனர். ஆண்டுக்காண்டு பதாகை ஏந்தி அந்தத் துயர நாளை மீண்டும் மனதில் ஏந்திக் கோஷமிட்டு ஓய்ந்துபோவது எந்த உலகத்து நீதி? வஞ்சிக்கப்பட்ட அவர்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய சரியான நேரம் இது.

உண்மையில், இந்த மக்களுக்காகத்தான் நாமும் நம்முடைய அரசும் போராடியிருக்க வேண்டும். 27 ஆண்டுகளாக நம் சொந்த மக்கள் ஏதிலிகளாக வாழ ஆண்டர்சன் நம் அரசின் அக்கறையின்மையால் சுகமாக வாழ்ந்துவருகிறார். தேவயானி விவகாரத்தில் தங்கள் நாட்டு வழக்குப்படிதான் செயல்பட்டோம் என்று அமெரிக்கா தொய்வில்லாமல் கூறிவருகிறது; அப்படியானால் இந்தியாவும் ஆண்டர்சன் வழக்கில் அப்படியே செயல்படலாமே?

உலக அரங்கில் நம்முடைய கௌரவங்களை மீட்டெடுக்க வேண்டும் என நாம் விரும்புவதில் தவறேதும் இல்லை. சமாதான சகவாழ்வு நாம் மட்டும் ஏந்திச்செல்லும் தீபமல்ல; அதற்கு இதர நாடுகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும். நீதி தேவதை ஒரு நாட்டின் மீது மட்டும் உலவிக்கொண்டிருக்க வேண்டாம். அவள் நம்முடைய வானத்தின் மீதும் சஞ்சரித்து நீதிநெறிகளை நிலைநாட்ட விரும்புகிறாள்.

தொடர்புக்கு: peermohamed.a@kslmedia.in;

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x