Last Updated : 21 Oct, 2013 10:50 AM

 

Published : 21 Oct 2013 10:50 AM
Last Updated : 21 Oct 2013 10:50 AM

நாம் புரிந்துகொள்கிறோமா?

எனக்கொரு நண்பர் இருக்கிறார். வழக்கறிஞர். இலக்கியத்திலும் தத்துவத்திலும் ஆர்வம் கொண்டவர். ஒருமுறை பேசும்போது சொன்னார், "தமிழகத்தில் 99% பேருக்குக் கருதுகோள்கள் [கான்செப்ட்ஸ்] புரியாது."

அதிரடிக் கூற்றாக இருக்கிறதே என்று நான் ஏறிட்டுப் பார்த்தேன். "அபிப்பிராயங்களைக் கேட்டுக்கொள்வார்கள். கருத்துகளைத் தெரிந்துகொள்வார்கள். ஒருபோதும் கருதுகோள்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்" என்றார் நண்பர் ஆணித்தரமாக.

சோதனை செய்துவிடலாம் என்று தீர்மானித்தோம். ஓர் எளிமையான கருதுகோளை எடுத்துக்கொண்டோம்: “பகுத்தறிவு தர்க்கம் சார்ந்தது. ஒழுக்கம் என்பது உறுதியான நம்பிக்கைகளால் ஆனது. ஆகவே, பகுத்தறிவு பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை ஏற்காததாகவே இருக்க முடியும்.”

ஒருநாள் முழுக்க எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் இதைச் சொல்வதென்று முடிவெடுத்தோம். பத்தில் ஒன்பது பேர் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பது நண்பரின் தரப்பு. நான் பாதிக்குப் பாதி தேறும் என்று வாதிட்டேன்.

அன்று நாங்கள் அதைச் சொன்ன அனைவருமே படித்தவர்கள், அரசியல் செய்திகளை ஆராய்ந்து பேசக் கூடியவர்கள். ஆச்சரியமாக ஒருவர்கூட அந்தக் கருதுகோளைப் புரிந்துகொள்ளவில்லை.

“ஆமாங்க, படிச்சாலே பெத்தவங்க பேச்ச கேக்கிறதில்ல.”

“படிப்பு கூடக்கூட ஒழுக்கம் குறைஞ்சிட்டே வருது.”

“படிக்காதவங்க மட்டும் கிராமங்களிலே யோக்கியமா இருக்காங்களா? ”

- மொத்தையாகவே புரிந்துகொண்டார்கள்.

சாயங்காலத்துக்குள் நண்பரின் தரப்பு அவருக்கே ஆச்சரியமூட்டும்படி பெரிதாக வளர்ந்தது. நாங்கள் பேசிய 23 பேரில் ஒருவரால்கூட அந்தக் கருதுகோள் புரிந்துகொள்ளப்படவில்லை. நண்பரே அதிர்ந்துபோய் "என்ன சார், இப்படி இருக்காங்க?" என்றார்.

எனக்கு அது ஒரு பெரிய திறப்பு. அப்படியென்றால், நான் எவரிடம் என் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? ஒருவராவது ‘ஒழுக்க நம்பிக்கை பகுத்தறிவுரீதியாக வந்தால், அது இன்னும் நிலையானதாக இருக்குமே. வெறும் நம்பிக்கையாக இருந்தால் எளிதில் கரையும் அல்லவா?’ என்று சொல்லியிருக்கலாமென ஏங்கினேன்.

நம்முடைய மத்தியப் பாடத்திட்டத்தின்படி 10-ம் வகுப்பு தேர்ச்சியடையும் ஒரு மாணவர் அறிவியலிலும் வரலாற்றிலுமாகக் குறைந்தபட்சம் 2,000 அடிப்படைக் கருதுகோள்களைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், "நியூட்டனின் புவியீர்ப்பு விசைக் கருதுகோளைச் சக அறிவியலாளராக எப்படி மறுப்பாய்?" என்று கேட்டால் போதும்; அநேகமாக நம் மாணவர்கள் அனைவருமே திகைத்து நின்றுவிடுவார்கள்.

கருதுகோளை ஒருவர் புரிந்துகொண்டிருக்கிறாரா என்று அறிவது சுலபம். அதை மறுக்கும்படி சொன்னாலோ அல்லது சொந்தமாக ஓர் உதாரணம் சொல்லச் சொன்னாலோ போதும். புரிந்துகொண்டவர் அக்கருதுகோளின் மையத்தை மறுத்தோ, விளக்கியோ தன் தரப்பைச் சொல்வார். மற்றவர்கள் சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்வார்கள். டீக்கடை விவாதங்களையே பாருங்கள்... ஒருவர் ஒன்றைச் சொன்னால், அதை இன்னொருவர் சம்பந்தமே இல்லாத கோணத்தில் மறுப்பார்.

முதலில் சொல்லவந்தவர் "நான் சொல்ல வந்தது அது இல்லை" என்று ஆரம்பிப்பார். விவாதம் நான்காவது சொற்றொடரிலேயே வேறு வேறு விஷயங்களுக்குத் தாவிச்செல்ல ஆரம்பித்துவிடும். முதலில் சொன்னவர் "நான் சொல்லவந்தது என்னன்னா" என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

ஏன் இந்த நிலை?

‘புறவயமான தர்க்கங்களால் மட்டுமே அனைத்தையும் புரிந்துகொள்ள முயல்வது’என்ற புரிதல் இருப்பவரால் மட்டுமே எதையாவது சொல்ல முடியும். அதுதான் கருதுகோளைப் புரிந்துகொள்ளுதல் என்பது.

நமக்கு அடிப்படையான கல்வியிலேயே பிரச்சினை இருக்கிறது. ஓர் ஆசிரியர் மேடையில் நின்று உரையாற்ற, மாணவர்கள் அதைத் ‘தெரிந்துகொள்ளும்’ வகையான கல்வியே இங்கே பிரிட்டிஷாரால் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தக் கல்விமுறை பிரிட்டனில் இருந்த ஜிம்னேசியங்கள் என்ற மதப் பாடசாலைகளில் இருந்து நகல் செய்யப்பட்டவை.

புரிந்துகொள்வதற்கான கல்வி என்பது, விவாதங்கள் மூலமே முன்னகர முடியும். இந்தியாவின் தொன்மையான குருகுல மரபுகளிலும் சரி, கிரேக்க மரபிலும் சரி; அதுவே ஒரே கல்விமுறைமையாக இருந்திருக்கிறது. ஒரு கருத்தைப் பொதுமைப்படுத்தும்போது அது கருதுகோள் ஆகிறது. உரிய வாதமுறைகளுடன் இணைக்கும்போது அது கொள்கை. பரவலாக, பல தளங்களில் அது கையாளப்படும்போது அது கோட்பாடு. ஒரு கருத்தையோ கருதுகோளையோ கொள்கையையோ கோட்பாட்டையோ பல கோணங்களில் விவாதிக்கும்போது மட்டுமே அதை உள்வாங்கிக்கொள்ள முடியும்.

குறிப்பாக, எந்த ஒரு கருத்தையும் அதன் எதிர்த்தரப்பு வழியாக இன்னும் தெளிவாக்கிக்கொள்ள முடியும். இந்திய ஞானமரபில் சுபக்கம் பரபக்கம் என்று நேர்த் தரப்பும் எதிர்த் தரப்பும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவ்விரு தரப்புகள் நடுவே உள்ள மோதல் வழியாகவே எந்த ஒரு கருத்தையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது. மிக நுட்பமான, சிக்கலான வேதாந்தக் கருத்துகள் அவ்வகையில்தான் இங்கே உள்வாங்கிப் பயிலப்பட்டன.

ஆங்கிலேயர்களின் ஜிம்னேசியக் கல்விமுறை ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட அவர்களின் மதக் கல்விக்கு மட்டுமே உரியது. லூயி பாஸ்டர் அத்தகைய ஜிம்னேசியத்தில் கல்வி பயிலும்போது ஆசிரியர் கிருமிகள் பற்றிச் சொன்ன கருத்தைச் சந்தேகப்பட்டார்.

‘‘கிருமிகள் எங்கிருந்து வருகின்றன என்று நாம் அறிய முடியாது. அவை கடவுளால் அனுப்பப்படுபவை’’ என்றார் ஆசிரியர்.

“பூச்சிகளை உருப்பெருக்கியால் பார்க்கிறோமே, இன்னும் நுட்பமான உருப்பெருக்கியால் ஏன் கிருமிகளைப் பார்க்க முடியாது?” என்று கேட்டார் லூயி பாஸ்டர். அவர் வெளியே துரத்தப்பட்டார். ஆனால், அந்தச் சந்தேகமே அவரை அறிவியல் அறிஞராக ஆக்கியது.

ஆங்கில ஜிம்னேசியப் பாணி கல்விக்காக நாம் நம்முடைய மரபான கல்விமுறையை மறந்தோம். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த ஜிம்னேசியக் கல்விமுறையை 50 ஆண்டுகள் முன்னாலேயே உதறி, விவாதித்துக் கற்கும் கல்விமுறைக்குச் சென்றன. நாம் நம் வெள்ளை எஜமானர்களின் வழியை விட்டு விலகவே இல்லை. இன்று வரை சர்வதேச அளவில் குமாஸ்தா பணிபுரிய இந்தக் கல்விமுறை நமக்குக் கைகொடுத்துவருகிறது என்பதையும் மறுக்க முடியாது. ஆனால், எவ்வளவு நாள் இது நமக்குக் கைகொடுக்கும்? அப்படியே திருப்பிச் சொல்லும் திறனைக்கொண்டு இன்னும் எவ்வளவு நாள்தான் நாம் காலம்தள்ள முடியும்?

எனக்குத் தெரிந்து இதை வெல்ல ஒரே ஒரு வழி உள்ளது. கல்விநிலையப் பாடத்திட்டத்துக்கு வெளியே நூல்களை வாசிக்கும் வழக்கத்தை மேற்கொள்வது. எந்தத் துறையிலும் மிகச் சிறந்த நூல்கள், மிக எளிய நூல்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன. வாசிக்கும் மனநிலை மட்டும் இருந்தால் போதும். அவற்றை முறையாக விவாதித்துப் புரிந்துகொள்ள முயன்றால் போதும்.

ஜெயமோகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x